ஆசான் அமரர் சிவனு பற்றிய ஞாபகங்கள்

Published By: Nanthini

22 Dec, 2022 | 04:40 PM
image

சிவத்தையே தலையாய் கொண்டாய்

செந்தமிழினை உயிராய் தந்தாய்

இராஜ யோகம் தந்த வாழ்வதை

அருமறையாய் போதித்து ஏற்றாய்

அன்புடன் நற்பண்பனைத்தும் கொண்டாய்

அரவணைத்து வாழ பழகித் தந்தாய்

சிவனு என்று அந்த ஈசனின் நாமம் பெற்றாய்

இவ்வாசானை மறத்தல் ஆகுமோ?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானில் தெய்வத்துடன் உறையச் சென்ற எம் ஆசான், அதிபர், கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர், ஒரு பண்பு மிக்க நல்ல மனிதனான அமரர் சிவனு அவர்கள் பற்றி சில வார்த்தைகளை பகிர்ந்துகொள்வதில் பேருவகையும் பக்திபூர்வமான சமர்ப்பணமுமான திருப்தியையும் அடைகின்றேன்.

அமரர் சிவனு மாஸ்டர் அவர்கள் எழில் கொஞ்சும் கண்டி மாநகரில் அமரர்கள் திரு.லெட்சுமணன் - திருமதி. சின்னபிள்ளை தம்பதிக்கு கனிஷ்ட புதல்வராய் 1948ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி பிறந்தார். 

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை கண்டி கலைமகள் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். உயர்தரத்தில் உயர் சித்தியடைந்த சிவனு மாஸ்டர் தனது பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கலைப்பட்டதாரி ஆனார். 

தமிழ் மொழியினை போலவே ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சிறப்பான தேர்ச்சியை பெற்றெடுத்ததால், மும்மொழி புலமை பெற்ற ஆசானாவார்.

பட்டம் பெற்றதும் இள வயதில் நுவரெலிய பரிசுத்த திருத்துவக் கல்லூரிக்கு பட்டதாரி ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். 

பின்னர், தாம் கல்வி கற்ற கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும், வத்தேகம பாரதி தமிழ் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியர் பணியை தொடர்ந்த அவர், உடதலவின்ன ஜாமியுள் அஸ்ஸர் மத்திய கல்லூரியிலும் பணிபுரிந்தார். 

சாதி, மத வேறுபாடு கருதாது, மிகவும் அன்பாக பழகும் சுபாவம் கொண்ட இவர், மாணவர்களை ஒருபோதும் கடிந்து பேசியது கிடையாது. இதனால், மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராக திகழ்ந்தார். 

தமிழ் மொழியினையும் தமிழ் இலக்கியத்தையும் மிக அழகாகவும் ஆழமாகவும் கற்பிப்பதில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர், பிற்காலத்தில் பள்ளி மாணவர்களை மட்டுமன்றி, ஆசிரியர்களையும் உருவாக்கிய ஆசானாகவும் விரிவுரையாளராகவும் ஆனார். 

தாம் கல்வி கற்ற பாடசாலையில் பகுதித் தலைவராகவும், பின் ஆசிரியராகவும் பணி புரிந்து, பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார். 

அக்காலப் பகுதியில் அவருடன் சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அன்பிலேயே கட்டளையிட்டு வேலை வாங்கும் திறன் அவரிடம் காணப்பட்டது. ஆடம்பரமில்லாத அன்னாரது வாழ்க்கை முறையினை அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். 

அக்காலப் பகுதியில் ஆங்கில ஆசிரியராக மாலைத்தீவு நாட்டில் சில காலம் கடமையாற்றிவிட்டு நாடு திரும்புகையில், பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக யான் கடமையேற்றிருந்தேன். அப்போது ஒரு தந்தையை போல மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் என்னை வாழ்த்தி, ஆசீர்வதித்துச் சென்றமை இன்னும் என் கண்களை பணிக்கச் செய்கிறது. 

எத்தனை உயர்ந்தாலும் பணிவு என்பது அவரிடம் கற்ற ஒரு விடயமாகும்.

அதன் பின்பு அவர் வத்தேகம, தெல்தெனிய, கொத்மலை போன்ற வலயங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமை புரிந்தார். அவர் நேர்மை, கடமை, கட்டுப்பாடு என்ற மூன்று விடயங்களையும் தமது சிரமேற்கொண்டு செயற்பட்டு வந்தமை, அவர் உருவாக்கிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வழிகாட்டலாக அமைந்தது. 

பேராதனை இந்து கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் பல வருடங்களாக பொறுப்பாளர் பதவியை ஏற்று நடத்தினார். அதுபோலவே தொலைக்கல்வி ஆசிரியர் பயிற்சியிலும் அவரும் அவரது பாரியார் திருமதி. லக்ஷ்மி சிவனுவும் விரிவுரையாளர்களாக கடமையாற்றினர். இப்பாரிய பணியின் பிரதி விளைவாக மலையகப் பகுதியில் ஏராளமான ஆசிரியர்கள் உருவாயினர். அன்னாரது கற்பித்தல் பணியானது மலையகத்தில் கல்வித்துறைக்கு ஆற்றிய பணியாகவே இன்றும் போற்றப்படுகின்றது.

ஆசிரியராக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தியதுடன் அவர் தம் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கு பாடசாலைகளில் மன்றங்களை அமைத்து மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்ததோடு, சிறந்த ஆசிரியர்களை உருவாக்கி மலையகத்துக்கு மாபெரும் சேவையாற்றினார் என்றால் மிகையாகாது. 

இவரது சேவை தம் மக்கள் கடந்து அரச பணி புரியும் சிங்கள சகோதர, சகோதரிகளுக்குமென விரிவு கண்டது. அவர்களுக்கு தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்து மொழியில் தேர்ச்சி காணச் செய்தார். 

தமிழ் மொழிக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் நீண்ட கால அனுபவம் பெற்ற அவர், இரண்டாம் மொழி தமிழ், க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் தமிழ்மொழி பாடத்துக்கான திறமை மிகு விடைத்தாள் பரீட்சகர் ஆவார். பல நேர்முகப் பரீட்சைத் தளங்களிலும் அவரது ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கல்வித்துறையில் ஈடுபாடு கொண்டு ஆற்றிய சேவைகளை போல் ஆன்மிகத்திலும் ஓய்வின் பின் முழுதாக ஈடுபடத் தொடங்கினார். 'பிரம்மகுமாரி ராஜயோக நிலையத்தில்' தனது இறுதிக்கால ஈடேற்றத்துக்கான சத்திய அறிவைப் பெற்று மக்களுக்கு அவற்றை பகிர்வதில் ஆர்வம் கொண்டார். சிவராத்திரி, நவராத்திரி வேறு சில ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகையில், பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் சிறந்த சொற்பொழிவுகளை கேட்போர் விளங்கும் வகையில் தர்க்க ரீதியாக தந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக்களும் அறவழியில் செல்ல தூண்டுகோலானார். 

அமரர் சிவனு மாஸ்டர் அவர்கள் ஆசிரியராக, பகுதித் தலைவராக, அதிபராக, விரிவுரையாளராக, கல்விப் பணிப்பாளராக என பல பதவிகளை வகித்தபோதும் எதுவித அகங்காரமோ ஆணவமோ ஆடம்பரமோ இல்லாத, மிக எளிமையான, பிரபலத்தை விரும்பாத ஓர் அருமைமிகு, பலர் விரும்பும் ஆசானாய் வாழ்ந்து ஈசனடி இன்பத்தை பெற விளைந்தார். 

இவரது விருப்பத்தை ஒத்த பணியை இவரது குடும்பமும் பின்தொடர்ந்தமை வியக்கத்தக்கது. 

கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் ஏறத்தாழ 19 வருட கால தமிழ் ஆசிரியப் பணியை ஆற்றிய மனைவி திருமதி. லக்ஷ்மி சிவனு அவர்களும், அவர்தம் இரு மகன்களுமாக எளிய குடும்பத்தில் மிக அமைதியாக வாழ்கின்றமை யாவரும் அறிந்ததே. 

சிவனு மாஸ்டர் தமது இறுதிக்காலத்தில் தம்மை நாடிவரும் சிறுவர்களுக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் இலவசமாக கற்பித்துக் கொடுத்து இன்பம் கண்டார். இது இவரது பொழுதுபோக்காகவே அமைந்தது. 

ஊரிலுள்ள அனைவரும் அமைதியான, ஆடம்பரமற்ற வாழ்க்கையை பெரிதும் மதித்தனர். தமது குறைகளை அவரிடம் பகிர்ந்து அறிவுரை பெற்றதால், ஊர் மக்களுக்கு 'மாஸ்டர்' என்றே மனதில் இவர் ஆழப் பதியப்பட்டுள்ளார். 

இன்னும் இவரிடம் கல்வி கற்றோர், இவருடன் சேர்ந்து பணிபுரிந்தோர் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் சேவையாற்றுகின்றனர்.

இவ்வாறு பன்முக ஆற்றல் கொண்ட அமரர் சிவனு மாஸ்டரின் மறைவு இன்று மலையக மண்ணுக்கே பேரிழப்பாகும்.

2021.08.26 அன்று நாட்டில் கொவிட் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நாளில் திடீரென அவரை இறைவன் தன்னகத்தே ஏற்றான். 

இத்துயர சம்பவம் பலருக்கு தெரியாதிருக்கலாம். இவரது இழப்பானது மலையக கல்விச் சமூகத்துக்கு பேரிழப்பாவதோடு, அவரைப் போன்றதொரு ஆசானை இனிவரும் காலங்களில் காண்பதும் அரிது. 

என்றும் அவர் வழி நின்று, அன்னாரது ஆத்ம சாந்திக்காக இந்த முதலாம் வருட பூர்த்தியில் பிரார்த்திப்போம். இறையருள் கூடி அன்னாரது ஆத்மா ஈசனடி ஏகி இன்புறட்டும்!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

- எம்.கோகிலேஸ்வரி.

(அதிபர் - இரஜவலை இந்து தேசிய கல்லூரி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right