ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் “வெற்றிலைச்” சின்னத்திற்கு தடை விதிப்பது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்த மஹிந்த அணி தரப்பின் எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவை கூட்டாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலவந்தமாக கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.

இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாப்புக்கு முரணானது. அத்தோடு சட்டவிரோதமானது. எனவே இது தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ய உத்தேசித்திருக்கின்றோம்.

வெற்றிலைச் சின்னத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை கோரவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் புதிய கட்சி ஏதும் ஏற்படுத்தும் நோக்கமில்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பெயரிலேயே போட்டியிடுவோம். ஆனால் புதியதொரு சின்னத்தை தெரிவு செய்வோம்.

இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளோம். இணைந்த எதிர்க்கட்சியில் உள்ளோர் கொள்கை பிடிப்புடன் இருக்கின்றனர்.

ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளுக்காக மாறலாம். அதைப்பற்றி எமக்கு கவலையில்லை. ஆனால் ஐ.தே. கட்சி ஆட்சியை கவிழ்க்கும் எமது போராட்டம் தொடரும் அதனை கைவிடமாட்டோம். இணைந்த எதிர்க்கட்சியாக செயற்படுவோம். இதில் மாற்றம் இல்லை என்றார்.