எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ள, இந்து சமுத்திரம் மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உக்ரேன்-ரஷ்யா யுத்தத்தின் தாக்கம் எதிர்காலத்தில் எமது நாடும் உணரக்கூடும் என்பதால், உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்தி, நாடு தன்னிறைவு அடையவும் பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தியத்தலாவ இராணுவக் கல்லூரியின் 97ஆவது குழுவின் பாடநெறியை பூர்த்தி செய்த கெடட் அதிகாரிகளின் பிரியாவிடை நிகழ்வில் கடந்த 16ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மிக ஆழமான படிப்பை முடித்துள்ள உங்களுக்கு, உக்ரேன் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு என்னை அழைத்து நமது இராணுவத் தளபதி என்னை சங்கடத்தில் தள்ளியுள்ளார்.
இந்த விடயத்தில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வையும், நீங்கள் முன்வைத்த விளக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்தப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்பை இது தெளிவாகக் காட்டுகிறது. நிலவும் சூழ்நிலையை சரியாக ஆய்வு செய்யாவிட்டால் எந்தவொரு போரையும் வெற்றிகொள்ள முடியாது.
நீங்கள் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனென்றால் இன்றைய போர்களில் ஆயுதங்கள் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது ஒரு நிழல் யுத்தமாக இருக்கலாம். ப்ராக்ஸி போர்களும் உள்ளன. இதையெல்லாம் கற்றறிய வேண்டும். இராஜதந்திர உறவுகள் முறிந்தால் ஒரு போர் ஏற்படும். பின்னர் அது ஆயுத மோதலாக மாறும்.
செங்கிஸ்கானின் வரலாற்றையும், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும், அவர்களுக்குப் பிறகு வந்த சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யப் பேரரசின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றங்களையும் நீங்கள் வரலாற்றில் கற்றறிந்திருப்பீர்கள்.
இந்த நாடுகளுக்கு பொதுவான பாரம்பரியம் உள்ளது. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது. இரண்டாம் உலகப் போரில், ஸ்டாலின் கிராட் முதல் ரஷ்யப் போர்கள் உக்ரேன் பிரதேசத்தில் நடந்தன. மேலும், சோவியத் யூனியனில் ஸ்டாலினுக்குப் பிறகு உருவான இரண்டு தலைவர்களான க்ருஷ்சேவ் (Khrushchev) மற்றும் ப்ரெஷ்நேவ் (Brezhnev) உக்ரேனில் இருந்து பிறந்தவர்கள். சோவியத் யுனியன் பிளவுபடுவதற்கு இதுவும் காரணம் என்று தோன்றுகிறது.
இராணுவத் தளபதியின் கருத்துப்படி, இது எங்களுக்கு நேரடி இராணுவ தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இங்கே ஆராய வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் எகிப்தில் உள்ள பல நாடுகளின் தலைவர்களுடன் இது பற்றி பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ரஷ்யா ஏன் வழக்கத்திற்கு மாறான, மூலோபாயப் போரை நாடியது என்பதுதான் அந்த விவாதத்தின் சாராம்சம். எனவே, ரஷ்யா ஒரு ஒருங்கிணைந்த கட்டளைக்கு வர முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. உக்ரேனுக்கும் இது முடியாமல் போனது.
ஆனால் உக்ரேன் இப்போது பிரித்தானியரால் கட்டமைக்கப்பட்ட கூட்டு கட்டளைக்கு திரும்பியுள்ளது. அவர்களிடமிருந்து உக்ரேன் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. ஆனால், கியேவைக் கைப்பற்றி போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா முயற்சித்தது. கியேவ் நகரத்தின் மீதான படையெடுப்பில் ரஷ்யா எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், ஒரு மூலோபாயப் போரில் அவர்கள் கவனம் செலுத்தியதால், அவர்கள் பெற்ற உபகரணங்கள் உட்பட விநியோகம் போதுமானதாக இருக்கவில்லை.
மரபுவழிப் போருக்குத் தங்களிடம் இருந்த உபகரணங்களைப் பார்க்கவில்லை. மேலும் அவர்கள் பொருட்களைப் பெற்ற முறை சிக்கல் நிறைந்ததாக இருந்தது. 100 கைக்குண்டுகள் தேவையான இடத்திற்கு அவர்களுக்கு 90 கைக்குண்டுகளே கிடைத்தன.அவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கூடுதலாக, வெடிக்காத கைக்குண்டுகளும், இயங்காத துப்பாக்கிகளும் சிக்கல்களை ஏற்படுத்தின. சிறந்த விநியோகச் சங்கிலி இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்பது தெளிவாகிறது.
இதனால், கியேவ் நகரை கைப்பற்ற முடியாமல் போனதால், இரு தரப்பிலும் வெற்றி பெற முடியாத ஒரு புதிய போரின் தொடக்கத்தைக் கண்டுள்ளோம். உக்ரேன் தங்கள் ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் எவ்வாறு பயன்படுத்தியது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
நீங்கள் கொடுத்த தரவுகளின்படி, ரஷ்யாவிடம் உக்ரேனை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் ரஷ்யாவின் கவச இராணுவ வாகனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி மட்டுமே உக்ரேனில் இருப்பதாகத் தெரிகிறது.
எனவே பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில், ரஷ்யாவின் இராணுவத்தில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ரஷ்யாவிற்கு வெளியே உக்ரேனில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கே ஒரு நன்மை இருந்தது.
இந்த மூலோபாயத்திலிருந்து நீங்கள் எதனைக் என்ன கற்றுக் கொள்ள முடிந்தது. அதன் தாக்கங்கள் என்ன? பொருளாதாரத்தில் இருந்து இதனைப் பார்க்க வேண்டும். இங்கு நமக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. முதலாவது அந்நிய செலாவணி நெருக்கடி, இரண்டாவது உணவு நெருக்கடி. இந்த ஆண்டு உக்ரேனில் ஏற்பட்ட உணவு நெருக்கடியின் தாக்கத்தை நாங்கள் உணரவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அதை உணரத் தொடங்குவோம். உலகின் தானியக் களஞ்சியமான உக்ரைனை அழித்தமையால் இந்த நெருக்கடி ஏற்படும். நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து அரிசியை கொள்வனவு செய்வதில்லை. எங்களுக்கு தற்போது உள்நாட்டில் நெருக்கடி உள்ளது. இது எதிர்காலத்தில் மோசமாகலாம். இதனை சமாளிக்க, உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அடுத்த வருடமும் அதற்குப் பின்னரும் உணவில் தன்னிறைவு பெற முயற்சிப்போம்.
அரிசியைப் பொறுத்த வரையில் பெரும் போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்திருப்பதால் தன்னிறைவு அடைந்துள்ளோம். ஆனால், அடுத்த ஆண்டு வறட்சி நீடித்தால், நிலைமை மோசமாகும். எனவே, உணவுப் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலைமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மற்றொரு பிரச்சினை ரஷ்ய மூலோபாயம். உக்ரேனிய பொருளாதாரத்தை அழிக்க அவர்கள் முயற்சிப்பதை அவர்கள் ஏற்கனவே வெற்றிகரமாக செய்து வருகின்றனர். உக்ரேனில் தானியங்கள் பயிரிடும் நிலம் அனைத்தும் இப்போது போர்க்களமாக உள்ளது. அங்கு புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகும்.
உக்ரேனிய பொருளாதாரத்தில் இதன் தாக்கம் சுமார் ஒரு டிரில்லியன் டொலர்கள் என்று நம்பப்படுகிறது. உக்ரேன் இதில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகும். ரஷ்யாவும் ஒருவித சேதத்தை எதிர்கொள்கிறது. இருப்பினும் அதிகமாக இல்லை. ஆனால் அவர்கள் உக்ரேனை விட வேகமாக மீள முடியும். ரஷ்யாவின் பலம் அதன் எண்ணெய் மற்றும் எரிபொருள். தற்போது, ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் உலகில் எரிபொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. அவை தற்போது உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. மசகு எண்ணெய் விலை உயரும் போது, அதற்காக நாம் பணத்தை இழக்கிறோம். அடுத்த வருடமும் இந்த நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
இந்தப் போர் இப்போது போர்க்களத்தில் இருந்து பொருளாதாரம், உணவு விநியோகம், உரம் மற்றும் எரிபொருள் என மாறி வருகிறது. எனவே இந்த நிலைமை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்நிலைமையை எதிர்கொள்ள நாம் இப்போதே தயாராக வேண்டும். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும். நாமும் அதன் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
மோசமான பொருளாதார நிர்வாகத்தால் ஏற்பட்ட கடன், நெருக்கடியை மேலும் மோசமாக்கும். எனினும், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருகிறோம். எங்கள் பிராந்தியத்தில் உற்பத்தித் துறையின் பாதிப்பும் இருக்கும் அதை எப்படி சமாளிப்பது என்றும் ஆராய வேண்டும்?
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்யாவும் அமெரிக்காவும் வல்லரசு அந்தஸ்த்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிலைமையை நாம் அனுபவிக்கிறோம். இந்த புதிய நிலை கம்யூனிசத்தின் வீழ்ச்சி வரை நீடித்தது. முதலில் அது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் வீழ்ச்சியாகத் தோன்றியது. இப்போது அது ஐரோப்பா மற்றும் ரஷ்யா என்று தோன்றுகிறது.
இரண்டாவதாக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் இதேபோன்ற நிலைமையைப் பார்க்க முடிகிறது. அமெரிக்காவிற்குள் ஜனாதிபதி ட்ரம்பிற்கு ரஷ்யா உதவியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ரஷ்யாவின் கொள்கை வகுப்பில் தெளிவாகத் தெரிந்தது. ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் போரை எப்படிப் பார்த்தன என்பதை இது காட்டுகிறது. எனவே, இந்த சூழ்நிலையில், உலக ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காண்கிறோம், அதன் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் சிக்கல் உள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி பைடனுக்கும் ஜனாதிபதி ஜிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து, தற்காலிக பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும் இந்நிலை மற்றொரு ஐரோப்பியப் பிரச்சினையாக மாறி, ஐரோப்பா போருக்குப் போகிறது என்று தோன்றுகிறது. உலகின் பிற பகுதிகள் குறிப்பாக ஆசியா, தெற்காசியா மற்றும் ஆபிரிக்கா ஆகியன விடுபட்டு, பிரச்சினையை முற்றிலும் ஐரோப்பிய பிரச்சினையாக மாறுகிறது.
இந்தப் போரில் எங்களை ஈடுபடுத்தும் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் நாம் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால், இது சந்தேகத்திற்கு இடமின்றி அடுத்த ஆண்டு உலகளாவிய பிரச்சினையாக மாறும். எனவே, ஆசியாவிற்கும், குறிப்பாக இந்து சமுத்திரத்திற்கும், ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையில் நல்லிணக்கம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM