நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும் - நூல் அறிமுகம்

Published By: Ponmalar

19 Dec, 2022 | 12:07 PM
image

ஆக்கம் கலாபூஷணம் திருமதி. இராஜேஸ்வரி ஜெகானந்த குரு

முகவரி: 24 ‘C’ எதிரிவீர அவனியூ, தெஹிவளை.

 ‘அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவைப்பிராட்டியார். ஏனைய உயிரினங்களைப் போலல்லாது, பேசும் திறனும், பகுத்தறிவு உட்பட ஆறறிவும் பெற்ற மனித இனம், தனது பெறுதற்கரிய பிறவியை மனம் போன போக்கில் வீணே வாழ்ந்து மறைதல் தகாது. ‘நாம் பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றதன் நோக்கம் எல்லாம் வல்ல தெய்வத்தைப் போற்றி, தர்ம வழி வாழ்ந்து, தெய்வத்தின் திருப் பாதங்களைச் சென்றடைவதற்கேயாகும்’ என்ற நாவலர் பெருமானின் கூற்றும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது. மனித வாழ்வின் மாண்பினையும், அதனைப் போற்றி நிற்கப் பின்பற்ற வேண்டிய தர்ம நியாயங்கள் குறித்தும் பண்டைத் தமிழ் அருளாளர்களும், அறிஞர் பெருமக்களும் , தத்தம் அரிய படைப்புகளில்  மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் கூறிப் போயிருப்பதும் நாம் அறிந்ததே.

அந்த வகையில் உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளும், ஒளவைப் பிராட்டியின் அற நூல்களும், சமய நூல்களும் விஷேடமாகக் குறிப்பிடத்தக்கவை.

இந்நூல்கள் மனித வாழ்வின் சிறப்புக்கு ஆதாரமான அன்பு, கருணை, பாசம், மனித நேயம், இறைவணக்கம், நேர்மை, உண்மை, ஒழுக்கம், பொறுமை, ஈகை, கொல்லாமை, இன்னா செய்யாமை, ஊக்கமுடைமை, தன்னம்பிக்கை, அடக்கம், பழிக்கு அஞ்சுதல், பணிவுடமை எனப் பல்வேறுபட்ட குணாம்சங்களையும் தத்தம் நோக்கில் எடுத்துரைக்கும் அதேவேளை,  அவற்றினால் கிடைக்கக்கூடிய நல்விளைவுகளையும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆயினும் இன்றைய பொருள் முதல்வாத காலகட்டத்தில், மனித விழுமியங்கள் புறந்தள்ளப்படும் சந்தர்ப்பங்களில் சமூகம் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களும் நாம் அறியாததல்ல.

இத்தகையதோர் நிலையில், கலாபூஷணம் திருமதி. இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு எம்.ஏ. அவர்களால் எழுதப்பட்ட ‘நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும்’ என்னும் கைந்நூல் குறித்து, சிறிது நோக்குவது பொருத்தமே.

யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த சிறந்த கல்விப் புலமைசார் குடும்பத்தின் வழித்தோன்றல் இவர். ‘இந்து சாதனம்’ பத்திரிகை ஆசிரியரும், உரை ஆசிரியருமான ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையின் மகள். உயர்கல்வி பெற்று பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும், கடமைபுரிந்து அனுபவம் பெற்ற இவர், ஆழ்ந்த ஆன்மீகப் பற்றுக் கொண்டவர்.

எழுத்தாளரும் பேச்சாளருமான திருமதி. இராஜேஸ்வரி ஜெகானந்த குரு, இந்து சமயம் சார்ந்து சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் ஒரு வீணை இசைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சிறுநூல் தமது லெளகீகம் சார்ந்த பார்வையின் உருவானதொன்று என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இளம் சமுதாயம் குறிப்பாக, மாணவ சமுதாயம் நம்முன்னோர் கூறியபடி, மானிடவிழுமியங்களை, தம்வாழ்வில் கடைப்பிடித்து, சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும் என்னும் நோக்கில், தம் அறிவு, அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அழகாகவும் எளிமையாகவும் இதனைப் படைத்திருக்கிறார்.

நேரே பேசுவதுபோல் எழுதப்பட்ட இந்நூலில், ஆங்காங்கு அறிஞர் கூற்றுக்களையும் சேர்த்து,  ஆசிரியரின்  ஆழ்ந்த ஈடுபாட்டின்வழி, சைவம் சார்ந்து நின்று படைக்கப்பட்டுள்ளது.

மாதா, பிதா, குரு என்னும் முன்னறி தெய்வங்களை மதித்துப் போற்றுதல் இறைப்பக்தி. அன்புடைமை, பண்புடைமை, ஊக்கமுடைமை, மெய்மை, ஒழுக்கமுடைமை என்றவாறான மனிதவிசேட குணாம்சங்கள் யாவருக்கும் பொதுவானது.

அத்தோடு வள்ளுவனார் கூறியதுபோல், ஈதல், இசைபாட வாழ்தல் என்பற்றுடன், இசை கலைஞரான இந்நூலாசிரியை, இசையுடன் வாழ்ந்திருப்பதன் சிறப்பையும் அனுபவ பூர்வமாகத் தந்திருக்கிறார்.

இளைய சமுதாயத்தினர் குறிப்பாக கல்லில் எழுத்துப்போல்  பதியும் இதயத்தைத் தமதாகக்கொண்ட மாணவப் பருவத்தினர், இவ்வாசிரியையின் ‘நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும்’ என்று வலியுறுத்துமாப்போல் விபரிக்கப்படும் இந்நூலை வாசித்து சிந்தித்து செயற்படவேண்டும் என்பது எமது விருப்பாகும்.

இந்நூலுக்கான அணிந்துரையை இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஹேமா ஷண்முக சர்மா அவர்களும், விதப்புரையை ஆசிரியமணி சைவப் புலவர் சின்னத்தம்பி ஸ்ரீதயாளனும், பாராட்டுரையை இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பவானி முகுந்தனும், திருமதி பூமகள் ஸ்ரீரவீந்திரனும் (ஆசிரியை) வழங்கியுள்ளனர். ஆசிரியையின் முயற்சிக்கு எமது பாராட்டுகள்.

திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்