மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி 4 பிரிவில் கிராம அபிவிருத்திச் சங்க வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் காணப்பட்ட 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர்.

வீட்டுரிமையாளர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் நேற்று பிற்பகல் ஸ்தலத்திற்கு விரைந்த முறக்கொட்டான்சேனை படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

வீடு மற்றும் வளவைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போது இந்தக் குண்டு தென்பட்டதும் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-அப்துல் கையூம்