120 தொடக்கம் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய வர்தா புயல் காரணமாக சென்னையில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சென்னையில் வார்தா புயல் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வார்தா புயல் மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 296 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 97 மையங்களில் 8,008 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10,754 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படைகள் காஞ்சீபுரத்தில் 2, திருவள்ளூரில் 3, சென்னையில் ஒன்றுமாக பணியமர்த்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூரில் தலா 2 மாநில பேரிடர் மீட்புப்படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
இதுவரை புயல் மழைக்கு 9 பேர் இறந்துள்ளனர். சென்னை மூலக்கடையில் குளிர் தாங்காமல் ஒருவரும், ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் வீடு இடிந்து ஆண் ஒருவரும், சூளைமேட்டில் சுவர் இடிந்து ஒரு பெண்ணும், வடபழனியில் சுவர் இடிந்து ஒரு குழந்தையும், தண்ணீரில் மூழ்கி ஒருவரும் இறந்துள்ளனர்.
மீனம்பாக்கத்தில் விளம்பர போர்டு விழுந்து ஒருவரும், ராஜமங்கலம் கொளத்தூர் செல்வி நகரில் விளக்கு கம்பம் விழுந்து வைகுண்டநாதன் (வயது 42) என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் போரூரில் சுவர் இடிந்து எல்பர்ட் என்கிற ராஜசேகரன் (23), செங்கல்பட்டு மேல்மெய்யூரில் அஸ்வதி (8) என்ற சிறுமி சுவர் இடிந்தும் பலியாகி உள்ளனர்.
திருவள்ளூரில் 21 குடிசைகள், காஞ்சீபுரத்தில் ஒரு குடிசை, விழுப்புரத்தில் 2 குடிசைகள் உள்பட 47 குடிசைகள் சேதமடைந்துள்ளன.
இதுவரை 3,384 மரங்கள் விழுந்தன. அதில் 297 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 3,400 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.
30 மின்சார டிரான்ஸ்போர்மர்கள் சேதம் அடைந்தன. 297 வீதிகள் மூடப்பட்டுள்ளன. நிலைமை சீரான பிறகு 89 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
52 போக்குவரத்து சமிக்ஞை கம்பங்களும், 78 பஸ் நிறுத்த கூரைகளும் காற்றில் விழுந்தன.
சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் நேற்று திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது.
கடும் மழை
புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலின் சீற்றம் காரணமாக 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 120 தொடக்கம் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
2ஆவது புயல் வர்தா:
தமிழகத்தில் காலதாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 30ஆம் திகதி நடா புயல் உருவாகியது. இந்தப் புயலானது கரையைக் கடப்பதற்கு முன்பே வலுவிழக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இருப்பினும், நடா புயலானது காரைக்கால் அருகே டிசம்பர் 2ஆம் திகதி கரையைக் கடந்தது.
வர்தா புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, விசாகப்பட்டினத்தின் அருகே நிலை கொண்டிருந்தது.
இதனையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது தீவிர புயலாக மாறியது.
வடமேற்கு திசையில் நகர்வு:
இந்தப் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு மெதுவாக 2 கி.மீ. வேகத்தில் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்த புயலானது, ஆந்திர மாநிலம் நெல்லூர்-காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.
திசை மாறி தாக்கிய புயல்:
இந்த நிலையில், புயலின் திசையானது மேற்கு தென்மேற்காக மாறத் தொடங்கியது. இதன் காரணமாக, புயலானது அதிதீவிர புயலாக மாறி சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது, சென்னைக்கு அருகே திங்கள்கிழமை நண்பகல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நள்ளிரவு முதல் மழை:
சென்னைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவில் வர்தா புயல் சென்றபோதே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது.
2 பிரிவுகளாக கரையைக் கடந்தது:
வர்தா புயலானது திங்கள்கிழமை 2 பிரிவுகளாக மாறி கரையைக் கடந்தது. புயலின் மத்தியப் பகுதியானது திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை கரையைக் கடந்தது.
இதன் காரணமாக திங்கள்கிழமை காலை முதலே சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்துள்ளது.
வீட்டுக்குள் அனைவரும் முடக்கம்:
புயலின் கிழக்குப் பகுதியானது மாலை 4 மணி முதல் 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்தாலும், மழையின் தாக்கத்தாலும் மக்கள் வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கினர்.
மேலும் வலுவிழக்கும்:
புயல் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நகர்ந்து செல்ல போது மேலும் வலுவிழக்கும். காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா நோக்கிச் சென்ற காற்று...: இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:-
அதிதீவிர புயல் வர்தா, சென்னை துறைமுகப் பகுதியில் நுழைந்து கரையைக் கடந்து திங்கள்கிழமை இரவு கிழக்கு திசையை நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.
வலுவிழக்கும்:
புயல் கரையைக் கடந்த பிறகு, தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கும். இதன் காரணமாக மழையின் தாக்கமும், காற்றின் வேகமும் குறையத் தொடங்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 160 மி.மீ. மழையும், அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கு தொடர் எச்சரிக்கை:
புயலானது கரையைக் கடந்தாலும், தென்தமிழக கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரையில் பலமான காற்று இன்று வீசக்கூடும்.
மேலும் தமிழகம், புதுவை கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வேண்டப்பட்டுள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் குடிசைப் பகுதியில் வசிப்போர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM