3 ஆம் இடத்துக்கான போட்டியில் மொரோக்கோவை வென்றது குரோஷியா

Published By: Sethu

17 Dec, 2022 | 10:42 PM
image

(நெவில் அன்தனி)

குரோஏஷியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையில் தோஹா, கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (17) இரவு நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் 2:1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற குரோஏஷியா,  கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

1998இல் தனது முதலாவது உலகக் கிண்ண பிரவேசத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா இப்போது மீண்டும் இடத்தைப் பெற்றுள்ளது.

 இந்த வெற்றியுடன் குரோஏஷிய அணித் தலைவர் லூக்கா  மொட்ரிச்   உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து விடைபெற்றார்.  

ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இன்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு அணிகளும் 2 நிமிட இடைவெளியில் கோல் போட்டு அரங்கில் குழுமியிருந்து இரசிகர்களையும் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் கண்டுகளித்த இரசிகர்களையும் பரபரப்பில் ஆழத்தின.

போட்டி ஆரம்பித்தது முதல் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் விளையாடிய வண்ணம் இருந்தன. 

போட்டியின் 3ஆவது நிமிடத்தில் மொரோக்கோ கோல்காப்பாளர் யாசின் பூனூ பந்தை தனது வீரர் ஒருவரை நோக்கி உதைக்க அப் பந்து வலது கோல் கம்பத்துக்கு அருகாமையால் வெளியே சென்றது.

7ஆவது நிமிடத்தில் குரோஏஷியாவுக்கு கிடைத்த பிறீ கிக்கை எதிரணி கோல் எல்லையை நோக்கி அணித் தலைவர் லூக்கா மொட்ரிச் உதைக்க, ஐவன் பெரிசிச் தனது தலையால் முட்டி ஜோஸ்கோ ஜிவார்டியலை நோக்கி பந்தை பரிமாற அவர் தலையால் முட்டி இலகுவாக கோல் போட்டார். உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அவர் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.

ஆனால், 2 நிமிடங்கள் கழித்து கிட்டத்தட்ட அதே பாணியில் மொரோக்கோ கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தியது.

மைதானத்தின் வலது புறத்திலிருந்து அணித் தலைவர் ஸியெச் பீறி கிக்கை எடுக்க குரோஷிய வீரர் ஒருவரின் தலையில் பட்டு பந்து மேலெழுந்தவாறு அவரது கோலை நோக்கிச் சென்றது. அப்பந்தை அஷ்ரப் தாரி தலையால் முட்டி கோலினுள் புகுத்தி மொரோக்கோ சார்பாக கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

போட்டியின்  25ஆவது நிமிடத்தில் மொரோக்கோ எல்லையில் ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தைப் பயன்படுத்தி லூக்கா மொட்றிச் தாழ்வாக உதைத்த பந்தை பூனூ தடுக்க அது முன்னோக்கிச் சென்றது. அவர் மின்னல் வேகத்தில் செயற்பட்டு எதிரணி வீரர் பந்தை நோக்கி வருவதற்கு முன்னர் மீண்டும் கையால் தட்டிவிட கோல் போடப்படுவது தடுக்கப்பட்டது.

இவ்வாறாக முதல் 30 நிமிடங்களில் குரோஏஷயா கோல் போடுவதற்கு 6 முயற்சிகளை எடுக்க, மொரோக்கோவினால் ஒரு முயற்சியே எடுக்க முடிந்தது.

33ஆவது நிமிடத்தில் மொரோக்கோவின் சொபியான் பவ்பாலும் பிலால் எல் கன்னூசும் இரட்டைப் பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு குரோஏஷியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்த போதிலும் பவ்பாலின் காலில் பட்ட பந்து வெளியே சென்றது.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஹக்கிம் ஸியெச்சின் கோர்ணர் கிக் பந்தை யூசெவ் எல் நெஸி கோலை நோக்கி செலுத்த அது வெளியே செல்ல மொரோக்கோவின் மற்றொரு வாய்ப்பு நழுவிப்போனது.

உபதையீடு நேரம் உட்பட இடைவேளைக்கு 4 நிமிடங்கள் இருந்தபோது தனது பெனல்டி எல்லையில் மொரோக்கோ தவறவிட்ட பந்தை மிஸ்லாவ் ஓர்சிச் இடது புறத்திலிருந்து மேலாக உதைக்க பந்து வலது கம்பத்தில் பட்டு கோலினுள் புக, குரோஏஷியா 2 - 1 என இடைவேளையின் போது முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மொரோக்கோ கோல் எல்லையை ஆக்கிரமித்த குரோஏஷியா, 51ஆம், 53ஆம், 54ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

மொரோக்கோவுக்கு 59ஆவது நிமிடத்தில் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்பை மொரோக்கோ வீரர் சொபியான் பவ்பால் முறையாகப் பயன்படுத்த தவறினார்.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இருந்த ஆக்ரோஷமும் விறுவிறுப்பும் இரண்டாவது பகுதியில் 70ஆவது நிமிடம்வரை சற்று குறைந்து காணப்பட்டது. இரண்டு அணியினரும் எவ்வளதுதான் பந்தை முன்னோக்கி நகர்த்தினாலும் பின்கள வீரர்களது சாமர்த்தியத்தால் அவை தடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும் அதன் பின்னர் ஆட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியதுடன் இரண்டு அணியினரும் எதிரணிகளின் கோல் எல்லைகளை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 74ஆவது நிமிடத்தில் குரோஏஷியா எழுப்பிய பெனல்டி கேள்வி மத்தியஸ்தரினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால் சலன அசைவுகளில் ஜிவார்டியோலை அப்ராபத்தினால் வீழ்த்தப்படுவது நன்கு தெரிந்தது. எனினும் அது குரோஏஷியாவுக்கு சாதகமாக அமையவில்லை.

மூன்று நிமிடங்கள் கழித்து கோல் நிலையை சமப்படுத்த மொரோக்கோவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு ஒன்றை யூசெவ் என் நெசிரி கோட்டைவிட்டார். 

 போட்டி முழு நேரத்தைத் தொடுவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது குரோஏஷியாவுக்கு கோல் போட கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது.    

கடைசி நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்த மொரோக்கோ வீரர் யூசெவ் அல் நெசிரி எடுத்த முயற்சி நூலிழையில் தவற குரோஷியா 3ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00