கிண்ணஸ் சாதனைக்காக காலி முகத்திடலில் இடைநிறுத்தப்பட்டிருந்த நத்தார் மரத்தின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அமைச்சு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.

உலகிலே மிக உயர்ந்த நத்தார் மரத்தினை அமைக்கும் பணிகள் மிக வேகமாக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வந்த நிலையில் அதன் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக கடந்த 7 ஆம் திகதி துறைமுக பிரதான அமைச்சர் தெரிவித்திருந்தார். 

 கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கில் காலி முகத் திடலில் மாபெரும் நத்தார் மரமொன்று அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில்  பாரிய பொருட் செலவில் நத்தார் மரம் அமைக்கப்படுவதனை எதிர்ப்பதாக கத்தோலிக்கச் சபை அறிவித்தது.

 கொழும்பு பேராயர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இந்த நத்தார் மரத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்தது எனவும் அதற்காக செலவிடப்படும் பணத்தை வறியவர்களுக்கு செலவிடப்பட முடியும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் மரம் அமைக்கும் அமைச்சு எதுவென்பது தெரியாது, நத்தார் மரம் அமைக்கப்பட்டு வருமாயின் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நத்தார் பண்டிகையின் மெய்யான அர்த்தம் உண்டு மகிழ்வது அல்ல, நத்தார் பண்டிகை பற்றி சிலர் பிழையான புரிதல்களுடன் இருக்கின்றார்கள்.

நத்தார் தாத்தாக்கள் இன்று விற்பனைப் பண்டமாக மாறியுள்ளனர்.

இருப்பதனை ஏனையவர்களுடன் பகிர்ந்து நத்தாரை கொண்டாட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நத்தார் மரம் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.