மாற்றுத்திறனாளிகளை கௌரவமானவர்களாக சமூகம் உள்வாங்க வேண்டும் - ஜோசப் நிதர்ஷன்

Published By: Ponmalar

16 Dec, 2022 | 05:14 PM
image

பி.மாணிக்கவாசகம்

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் உள்வாங்குவது தொடர்பில் சயில்ட் பண்ட் (Child Fund) என்ற நிறுவனம் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது.

பெரியவர்களாகிய மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் மாற்றுத்திறன் கொண்ட அல்லது இயலாமையையுடைய சிறுவர்களின் நலவாழ்விலும், சமூக ஓட்டத்தில் அவர்களையும் உள்வாங்குவதிலும் கவனம் செலுத்தி இந்த நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, தொழில் பயிற்சி, வாழ்க்கை மேம்பாடு, மாற்றுத்திறனாளி சிறுவர்களின் மருத்துவம், கல்வி, புனர்வாழ்வு, வாழ்வாதாரச் செயற்பாடு என இந்த நிறுவனத்தின் பணிகள் நீண்டு செல்கின்றன.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுத்துறையில் சுமார் இரண்டு தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட ஜோசப் நிதர்ஷன் சயில்ட் பண்ட் நிறுவனத்தின் நிபுணத்துவச் செயற்பர்ட்டாளராகப் பணியாற்றி வருகின்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நிலைமை குறித்த செவ்வியின்போது அவர் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.

கேள்வி: இயலாமையுடையவர்கள் தொடர்பிலான பணிகளில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அவர்கள் எத்தகைய சவால்களுக்கு முகம் கொடுகின்றார்கள்? அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் என்ன?

புதில்: இயலாமையுடைய நபர்கள் சமூகத்தில் முக்கியமாக 4 பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அவையாவன… 

அ. பொதுக்கட்டடங்களையும் சேவைகளுகளையும் அணுகுவதற்கு உள்ள தடைகள். போக்குவரத்து சேவைகளை அணுக முடியாமை.

ஆ. தொடர்பாடலில் அவர்களுக்குத் தடைகள் இருக்கின்றன. குறிப்பாகக் கேட்பதில் சிரமமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்துமே கிடைப்பதில்லை. முக்கியமாக பொதுச் சேவைகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் அங்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதில்லை. அத்துடன் பார்வையில் சிரமமுள்ளவர்கள் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டாலும்கூட, சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான இடங்களை அவர்களால் அணுக முடிவதில்லை.

இ. இயலாமையுடையவர்கள் எங்கும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது சட்டம். ஆனால், வங்கிகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக ஏனைய சாதாரணமானவர்களைப் போன்று கடனுதவிகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. அத்துடன் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. அவர்களுக்கான வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு தடைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

ஈ. இயலாமையுடைய நபர்களை துரதிஷ்டம் மிக்கவர்கள் என்றே சமூகம் கருதுகின்றது. அத்துடன் அவர்கள் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதுவதுடன், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என எண்ணி, அவர்களை சமூகம் மதிப்பதில்லை. உரிய கௌரவத்துடன் அவர்களை நடத்துவதுமில்லை.

கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக மட்ட புனர்வாழ்வுத் திட்டச் செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றன?

பதில்: சமூக மட்டத்தில் இயலாமையடையவர்களுக்குப் புனர்வாழ்வுத் திட்டம் என்ற செயற்றிட்டம் முன்னெடுத்து வருகின்றோம். சமூகமட்ட புனர்வாழ்வுச் செயற்றிட்டமானது  மருத்துவம், கல்வி, புனர்வாழ்வு மற்றும் இயலாமையுடைய நபர்களை வலுவூட்டல் போன்ற விடயங்களை அடிப்டையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. முக்கியமாக இதனை இருவழி பிரவேசம் என கூறுவோம். அதாவது ஒருபுறம் இயலாமையுடைய நபர்களை அவர்களது உரிமைகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் அவர்களது உரிமைகள் மீறப்படுமிடத்து அவ் உரிமைகளை பெற்றுக்கொள்ள ஆதரித்து வாதிட வலுவூட்டுகின்றோம். அது தொடர்பில் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மறுபுறத்தில் இயலாமையுடையவர்களையும் சக மனிதர்களாக மதித்து நடப்பதற்கும், அவர்களுக்குரிய சமூக அந்தஸ்தை வழங்கி அவர்களை கௌரவத்துடன் நடத்துவதற்கு உரிய சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், சமூகத்தில் விழிப்படையச் செய்து வலுவூட்டி வருகின்றோம்.

கேள்வி: போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நீங்கள் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள் அங்கு எத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது?

பதில்: அங்கு எங்களுடைய பணி மருத்துவ முகாம் மூலம் இயலாமையுடைய நபர்களை இணங்காண்பதிலிருந்து ஆரம்பமாகின்றது. இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச பிரிவுகளிலும் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளதுடன், அவற்றில் மாறறுத்திறனாளிகளாக  இணங்காணபட்டவர்களுக்கான புனர்வாழ்வு திட்டம் தயாரிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகளினூடாக வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் அவற்றை பயன்படுத்துவது, பராமரிப்பது மற்றும் திருத்தங்கள் செய்வது தொடர்பாகப் பயன்படுத்துபவர்களுக்கும் அவர்களை பராமரிக்கின்ற பெற்றோர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அத்துடன் பெற்றோருக்கு அவர்களது சிறுவர்களுக்கு தினம் செய்ய வேண்டிய அடிப்படை இயன்மருத்துவ பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு அவை பெற்றோரினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இயலாமையுடைய நபர்களது சிறுகுழுக்கள் கிராம மட்டத்தில் உருவாக்கப்பட்டு அவை பிரதேச மட்ட இயலாமையுடைய நபர்களது நிறுவனமாக செயற்படுவதற்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. சிறுகுழுக்கள் தமது அங்கத்தவர்களுக்கு சுழற்சிமுறையில் வழங்குவதற்கான நிதியுதவியும் செய்யப்படுகிறது. இயலாமையுடைய நபர்கள் தமது உரிமைகளையும் தமக்காக அரசினால் வழங்கப்படும். அரச பொதுச் சேவைகளைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்வதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.  

அவர்களது உரிமைகள் மீறப்படுமிடத்து உரிமைகளுக்காக வாதிடுவதற்கும் பரிந்துரைகளை மேற்கொள்ளவும் வலுவூட்டப்படுகிறார்கள். இயலாமையுடைய சிறுவர்கள் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட கல்வித் திட்டத்தில், ஆசிரியர்களுக்கு தனிநபர் கல்வித்திட்டம் தயாரித்தல், முன்னேற்றங்களை அவதானித்தல் மற்றும் தொடர்பாடல் முறைகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. இயலாமையுடைய சிறுவர்கள் பாடசாலையில் ஒதுக்கப்படாமல் ஏனைய மாணவர்களுடனும் இணைந்து செயற்படுவதற்காக மாணவர்களுடனான உள்வாங்கப்பட்ட நிகழ்வுகள் விழிப்புனர்வு நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் என்பன பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டதில் 3 இயன்மருத்துவ அலகுகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயன்மருத்துவ அலகுகள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மல்லாவி ஆகிய மூன்று வைத்தியசாலைகளில் இயங்கிவருகின்றன.

கேள்வி: வருடா வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் அவர்கள் தொடர்பில் உங்களது இலக்குகள் என்ன? எதிர்பார்ப்புகள் என்ன?

பதில்: இயலாமையுடையவர்களின் வாழ்க்கை மேம்பாடு என்பதே பொதுவான இலக்கு. அரசினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஏனைய தனியார் நிறுவனங்களினாலும் வழங்கப்படும் வித்தியாசமான சேவைகளைப்பற்றி அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்கள் தமது அங்கத்தவர்களாகிய அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பது முக்கிய இலக்கு.  அதேவேளை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது மற்றும் வலுவான நிலையில் அவரக்ளது வாழ்வாதாரத்தை உயர்த்துவற்கு ஏற்ற வகையில் அந்த நிறுவனங்களை வலுவூட்டுவதும் ஏனைய தேசிய மட்டத்திலான நிறுவனங்களுடனும் இந்த நிறுவனங்களை இணைப்பதும் எமது இலக்குகளில் முக்கியமானவையாகும். .

இயலாமையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக சமூக சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து தமிழ் மொழி மூலமான தொழிற்பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கட்டுள்ளது. மேலும் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவும் சிறு தொழில்களை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான நிதியுதவிகள் வழங்ப்படவிருக்கின்றன. இதன்மூலம் 750 இற்கும் அதிகமானவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலான நிறுவனங்கள் நீடித்த நிலைபேறு நிலையுடைய நிறுவனங்களாக வலுவூட்டல், அரசினால் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்மானி அறிவித்தலின்படி அனைத்து பொதுக்கட்டடங்களையும், சேவைகள் வழங்கும் இடங்களையும் மாற்றுத்திறனுடையயவர்கள் இலகுவில்  அணுகத்தக்காக மாற்றுதல் என்பனவும் எமது இலக்குகளாகும்.

இயலாமையுடைய நபர்களை உள்வாங்கிய ஒரு சமூகத்தினை உருவாக்குவதும், அதற்கான  அபிவிருத்தியை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தினை இலங்கை பாரளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை அரசியல் யாப்பில் உள்வாங்கி சட்டங்களை ஏற்படுத்த தேவையான அழுத்தங்களைக் கொடுக்கக் கூடியதாக மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுகின்ற நிறுவனங்களை ஏனைய தேசிய மட்டத்திலான நிறுவனங்களுடன் இணைக்கின்ற ஒரு  வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுடன் அதனை வலுவூட்ட வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்