ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலா தான் கழகத்தையும் மக்களையும் காக்க வேண்டியவர் என பத்திரிக்கைகளிடம் கூறி வருகின்றனர். 

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, கடந்த 5 ம் திகதி உடல்நலக் குறைவால், அப்போலோ வைத்தியசாலையில் காலமானார். 

அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக  தகவல்கள் வெளியாகின. 

கடந்த 28 ஆண்டுகளாக, அதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.

இந்நிலையில் சென்னையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

“போற்றி வளர்த்த இந்த இயக்கத்தை அம்மா வழியில் தலைமையேற்க வாருங்கள் எங்க சின்னம்மாவே”

“அம்மாவுக்கே தாயை தந்தையாய் சகோதரியாய் யாதுமாகி நின்று தாயை காத்திட்ட எங்களின் இளைய தாயே.. கழகத்தை காத்தருள வேண்டும்”

ஒரு பொழுதும் உண்ணாமல் ஒரு நொடியும் உறங்காமல் புரட்சி தலைவி அம்மாவிற்கு அரணாய் உறுதுணையாய் இருந்து தியாகம் செய்த சின்னம்மாவே வருக” என்று பல்லாயிரகணக்கான போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கழகத்தின் பொது செயலாளராக தலைமை ஏற்க தலைமகளே வாரீர் வாரீர் என மிகபெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.