(இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் சீருடை விநியோகிக்கப்படும்.
பல்கலைக்கழக கட்டமைப்பு தற்போது மிக மோசமாக உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழக சட்டம் திருத்தம் செய்யப்படும்.
கடுமையான தீர்மானத்தை செயல்படுத்தாவிட்டால் இலவச கல்வி மலினப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் வியாழக்கிழமை (டிச. 15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாரிய சவால்களுக்கு மத்தியில் கல்வி அமைச்சு இலவச கல்வி சேவையை முன்னெடுத்து செல்கிறது. கொவிட் பெருந்தொற்று தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அதனால் கல்வி சேவைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சீர்படுத்தப்படவில்லை.
சகல பிரச்சினைகளுக்கும் கட்டம் கட்டமாக தீர்வு காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் கல்வி துறையில் மாற்றம் ஏற்படுத்த பல திட்டங்களை கல்வி அமைச்சு வகுத்துள்ளது.
தேசிய பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்த உத்தேசம்
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்.இந்த பரீட்சையை நீக்கும் நோக்கம் கிடையாது,இருப்பினும் புலமைப்பரிசில் பாடத்திட்டம் இலகுவான முறையில் மறுசீரமைக்கப்படும்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் வரை இடம்பெறும். அத்துடன், 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சையை அதே ஆண்டு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு
நாட்டில் மந்தபோசனை தீவிரமடைந்துள்ளது என குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் தீர்வு திட்டங்களை முன்வைக்கவில்லை. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு தரமான மதிய உணவை வழங்க எதிர்வரும் மாதம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு மாவட்டத்தில் 'வளமான பாடசாலை வளமற்ற பாடசாலையை கண்காணித்தல் செயற்திட்டம் சிறந்த முறையில் செயல்படுகிறது. இந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.50 சதவீதமான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது பிரதான இலக்காக உள்ளது.
பாடப்புத்தகம் விநியோகம்
2023 ஆம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தற்போது அரசாங்க அச்சக திணைக்களத்தின் ஊடாகவும், தனியார் தரப்பினர் ஊடாகவும் முன்னெடுக்கப்படுகிறது.மார்ச் மாதம் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.
சீருடை விநியோகம்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளில் 70 சதவீதமான வெட்டிய துணிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மிகுதி 30 சதவீத துணிகளை பெற்றுக்கொள்ள விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகிக்கப்படும்.
பாடசாலை உபகரணம்
வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினையால் பாடசாலை உபகரணங்கள் அதிகரித்துள்ளன. சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளுக்கு சமுர்த்தி திட்டத்தின் ஊடாக கொப்பி உட்பட பாடசாலை உபகரணங்கள் வழங்க பேச்சுவார்த்தை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமுர்த்தி பயனார்கள் அல்லாத வறிய குடும்பங்களுக்கு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படும்.
ஆங்கில மொழிக் கல்வி விருத்தி
தகவல் தொழில்நுட்ப துறை முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஆங்கில மொழிக் கல்வி விருத்தி பெற வேண்டும். எதிர்வரும் ஆண்டு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கில மொழியை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து வாய்மொழி ஆங்கில (ஓரல் ஆங்கிலம்) மொழியை கற்பிக்க 4500 பேருக்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த 4500 பேர் ஊடாக 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படும்.
கல்வி வலயங்கள் விஸ்தரிப்பு
நாட்டில் ஒன்பது மாகாணங்களில் 100 கல்வி வலயங்கள் உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய 100 கல்வி வலயங்கள் போதுமானதாக இல்லை. ஆகவே கல்வி வலயங்களை 120 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிரிய சேவை பிரச்சினை
53 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள் இவர்களின் 22 ஆயிரம் பேருக்கு பின்னர் ஆசிரியர் சேவை தொடர்பில் எவ்வித பயிற்சியும் வழங்காமல் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இது ஆசிரிய சேவையில் பிரதான பிரச்சினையாக உள்ளது. ஆகவே இவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஒரு தீர்மானம் எட்டப்படும்.
ஆசிரியர் நியமனம்
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறிய 6 ஆயிரம் பேருக்கும் 26 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.
கல்வி சேவை டிஜிட்டல் மயமாக்கல்
நாடளாவிய ரீதியில் உள்ள 100 கல்வி வலயங்களில் 86 வலயங்களில் உள்ள பாடசாலைகளில் மாத்திரம் தான் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி அறை உள்ளன. எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் 100 கல்வி வலயங்களிலும் கணினி தொழில்நுட்ப சேவை ஸ்தாபிக்கப்படும்.
பல்கலைக்கழக சட்டம் திருத்தம்
மாணவர்கள் பல்வேறு கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 15 வருட காலத்திற்கு முன்னர் பல்கலைக்கழகங்கள் சிறந்த முறையில் காணப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.பல்கலைக்கழகங்களில் உள்ள ஒருசிலரது செயல்பாடு இலவச கல்வி சேவையை மலினப்படுத்துகிறது.
பல்கலைக்கழக கட்டமைப்பின் தற்போதைய நிலை மோசமாக உள்ளது.மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும்.ஆகவே எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக சட்டம் திருத்தம் செய்யப்படும். கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தாவிட்டால் மிக மோசமான நெருக்கடியை நாடு எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM