'தேத்தண்ணி' உண்மையான வரலாற்றை ஊடறுத்துச் செல்லும் நாவல்

Published By: Nanthini

15 Dec, 2022 | 02:56 PM
image

1960, 1970 ஆகிய ஆண்டுகளை அடுத்து வந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற உண்மையான அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றுக்கூடாக பயணிக்கும் ஒரு நாவல் என்ற வகையில் இந்த நாவலை ஒரு முக்கியத்துவம் மிக்க நாவலாக கருதலாம். 

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்கள், கலாசார பாரம்பரியங்கள், அவர்களது நடை உடை பாவனைகள், பேச்சுவழக்கு என்பவற்றையும், நாவலை மொழிபெயர்த்த இரா. சடகோபன் மிக லாவகமாகவும் சுவாரஸ்யமாகவும் கையாண்டுள்ளார் என்பதை இந்நாவல் மொழியாக்கம் தொடர்பான பிரதான கருத்தாக முன்வைக்க முடியும்.

இவ்வாறு மலையக சமூகவியல் ஆய்வாளரும், பல நூல்களின் படைப்பாளியுமான தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான திரு. எம். வாமதேவன் தெரிவித்தார்.

கவிஞரும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா. சடகோபனின் மொழிபெயர்ப்பு நாவலான 1922ஆம் ஆண்டின் சாகித்திய விருது பெற்ற 'தேத்தண்ணி' நாவலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு ப்ரைட்டன் ரெஸ்ட் ஹோட்டலில் நடைபெற்றபோது, அவ்விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் அமையப்பெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. எம். வாமதேவன் மேலும் தெரிவித்ததாவது: 

'தேத்தண்ணி', பிரபல சிங்கள எழுத்தாளரான அமரர் உபாலி லீலாரட்ண அவர்களால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட மூலநூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகும்.

இந்நாவலில் சொல்லப்படும் கதையின்  பின்புலம், கதைக்களம் என்பன ஹட்டன் நகரம், கிரேட் வெஸ்டர்ன் தோட்டம், வட்ட கொட ரயில்வே ஸ்டேஷன், அதனை அண்டியுள்ள ரயில்வே கொலனி என்பவற்றை மையமாகவும், அதனை சூழவுள்ள பிரதேசத்தை உப கதைக்களமாகவும் கொண்டுள்ளது. 

இப்பிரதேசத்தில் சில காலம் வாழ்ந்த காரணத்தினால் இந்தக் கதையோடு நம்மாலும் உண்மையாகவே உலாவித் திரிய முடிகிற ஒரு தோற்றத்தையும் சுவாரஸ்யத்தையும் நாவல் ஏற்படுத்துகிறது. 

இந்நாட்டில் மலையக மக்களின் அரசியல் தொழிற்சங்க வரலாற்றை அதிகமாக பாதித்த காலம் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோரின் ஆட்சிக்காலங்களாகும்.

இக்காலத்தில் தேயிலை தோட்டங்கள் தேசிய உடைமையாக்கப்பட்டன. எனினும், அவ்வாறு தேசிய உடைமையாக்கப்பட்டதன் நன்மைகளை தோட்ட தொழிலாளர்கள் அனுபவிக்கவில்லை. 

மாறாக, பசி, பட்டினி, பஞ்சம், அதனால் ஏற்பட்ட மரணங்கள், தொழிற்சங்க போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் என துன்பியல் வரலாறாகவே தொடர்ந்தது. அந்த வரலாற்றை இந்நாவல் ஓரளவு திறம்பட சித்திரிக்கின்றது.

இது இளைஞர்களை மையமாகக் கொண்ட ஒரு நாவல் என்றும் கூறலாம். நாவலில் வரும் அனேகமான கதாபாத்திரங்கள் இளைஞர்களாகவே இருக்கின்றார்கள். 

அவர்கள் வெளிப்படுத்தும் தோட்டத்தில் நடக்கும் ஊழல்கள், கோபால் - புஷ்பராணி இருவருக்குமான காதல் கதை, தோட்ட தொழிலாளர்களுக்கே உரிய சிறப்பான பேச்சு நடை, அதிகாரிகள் பயன்படுத்தும் வார்த்தைகளில் உள்ள அதிகாரத்தோரணை ஆகியவற்றை இம்மொழிபெயர்ப்பு நாவலில் மொழிபெயர்ப்பாளரான இரா.சடகோபன் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் என்றார்.

அவரை தொடர்ந்து கவிஞரும் விமர்சகரும் கல்விப் பணிப்பாளருமான சு.முரளிதரன்  பின்வருமாறு கருத்து தெரிவித்தார்: 

சிறு வயது காலம் முதல் தோட்டத்து இளைஞர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள், அவர்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு ஒரு கட்டுக்கோப்புக்குள் செதுக்கப்படுகிறார்கள், அவர்களின் நடவடிக்கைகள், நடத்தைகள், சிந்தனைகள் எவ்வாறு ஒரு தோட்டத்துக்குள் மட்டுப்படுத்தப்படுகின்றன என்பதனை இந்நாவல் மிக சிறப்பாக சித்திரிக்கின்றது.

ஒரு தோட்டத்தின் அன்றாட நடைமுறைகள், அதன் அதிகாரத்துவ கட்டமைப்பு, தோட்டத் தொழிலாளர் மற்றும் தோட்டத்து வளங்கள் மீதான அதிகாரிகளின் சுரண்டல்கள், தில்லுமுல்லுகள், மிக நுணுக்கமாக அம்பலப்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய விடயங்களை எல்லாம் தமிழ் வாசகர்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு இரா. சடகோபனின் சிறப்பான மொழிபெயர்ப்பு உத்திகள் மிக சுவாரஸ்யமான வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

ஒரு மொழிபெயர்ப்பு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்நாவலை கருதலாம். உதாரணமாக, கதை மாந்தர்களுக்கு இடையிலான உரையாடல்கள், அந்த கதை மாந்தர்களின் உண்மையான பின்னணிகளுக்கமைய, அவர்களது பாணியிலான பேச்சுமொழியில் மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அந்த வகையில் ஏனைய மொழிபெயர்ப்பாளர்களுடன் ஒப்பிடும்போது இவரது மொழிபெயர்ப்பு உத்திகள் ஒரு படி உயர்ந்திருப்பதை அவதானிக்கலாம் என்றார்.

அடுத்து, வண. பிதா சக்திவேல் நாவலை பற்றி உரையாற்றுகையில்,

இந்த நாவல் 1970களை அடுத்து வந்த தசாப்தங்களின் அரசியல் தொழிற்சங்க வரலாறுகளை சித்திரித்தாலும், அது இன்றைய காலகட்டத்துக்கும் மிக பொருத்தமானதாகவே உள்ளது. 

இந்த நாவலில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் கதாநாயகனும் அவனது தோழர்களும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களாக  உள்ளனர். அவர்கள் அப்போது காணப்பட்ட அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகளை விமர்சித்து, அவற்றின் தலைமைகள் இளைஞர்களின் கைகளுக்குப் போக வேண்டும் என குரல் கொடுக்கின்றனர். அதுவே இன்றைய காலகட்டத்தின் தேவையாகவும் உள்ளது. 

இந்த நாவல், அதனை எழுதியிருக்கும் பாங்கு, அந்த சமூகத்துக்கேற்ப கதை சொல்லும் முறை, மற்றும் உரைநடை முறை என்பன என்னை அந்த தோட்டத்துக்கே அழைத்துச் சென்று, அங்கே மீண்டும் ஒருமுறை வாழ்ந்த அனுபவத்தை தந்தது. அவ்விதம் கதைக்குள் சென்று வாழ்வது போன்ற அனுபவத்தை இரா. சடகோபன் போன்ற எழுத்தாளர்களால் மட்டுமே தர முடியும் என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இரா. சடகோபன் அவர்களின் அண்மைக்கால எழுத்தை அவதானிக்கும்போது அவர் வெறுமனே புதினங்களை தரும் எழுத்தாளராக இருந்துவிடாமல் மலையக சமூகத்தின் விடிவுக்கு வழிகாட்டும் எழுத்தையும் தன்னகத்தே கொண்டு ஓர் எழுத்துப் போராளியாகவும் திகழ்கின்றார் என்றார்.

தொடர்ந்து பிரபல சிங்கள முற்போக்குவாத எழுத்தாளரான கமல் பெரேரா  உரையாற்றுகையில், 

துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பல்வேறு பிரிவினராக பிரிந்து கிடக்கின்றமை மிக வருத்தத்துக்குரிய விடயமாகும். பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் தங்கள் நலனை மட்டும் மனதில் கொண்டு செயல்படும்போது தமிழ், முஸ்லிம் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். 

நாம் அனைவருமே இந்த நாட்டின் தேசிய அம்சங்கள் என்றொரு நிலையை தோற்றுவிக்க வேண்டும். அது தொடர்பான இலக்கியங்களும் எழுத்துப் படைப்புக்களும் நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். 

எனினும், நமது இரு சமூகங்களினது இலக்கிய பங்காற்றுகையும் செயற்பாடுகளும் மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றன. 

நாம் இது தொடர்பில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் உபாலி லீலாரட்ண மற்றும் இரா. சடகோபன் போன்றவர்கள் இத்துறையில் காலூன்றி நிற்பது தொடர்பில் நாம் பெருமை கொள்ளலாம் என கூறினார்.

இவ்வாறான உரைகளை கொண்டமைந்த 'தேத்தண்ணி' நாவல் வெளியீட்டு நிகழ்வின்போதான கலந்துரையாடலில் மல்லியப்பூ சந்தி திலகர், கவிஞரும் எழுத்தாளருமான மேமன் கவி ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. 

அத்தோடு புரவலர் ஹாசிம் உமர் இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்து, நூலின் முதல் பிரதியை வளர்ந்துவரும் இளம் எழுத்தாளரான செல்வி நிவேதா ஜெகநாதனுக்கு வழங்கினார்.

மேலும், இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான எச்.எச். விக்ரமசிங்க, ஊடகவியலாளர் மகேஸ்வரி விஜயானந்தன், வங்கி முகாமையாளர் எம்.மகேந்திரன் முதலான பலரும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- தில்லைக் கூத்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05