காணாமல்போனோரின் உறவினர் ஒன்றிணைந்து வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் பேரணியாக பசார் வீதி, மில் றோட் வழியாகச் சென்று வவுனியா சுவர்க்கா விருந்தினர் விடுதியை சென்றடைந்தனர்.

பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமது காணாமற்போன உறவுகளுக்கு நீதி வேண்டியும், பக்கச்சார்பில்லாத விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியும், காணமல்போனோர் விடயத்தில்; நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியும் கூட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தனர். 

வட, கிழக்கு மாவட்டங்களிலிருந்து வந்த உறவுகள் தமது ஆதங்கங்களைத் தெரிவித்திருந்தனர். 

வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்ட சங்கத் தலைவி திருமதி.கே.ஜெயவனிதா தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் வடகிழக்கு மாவட்டங்களிலிருந்து கையளிக்கப்பட்டு காணமலாக்கப்பட்ட சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், காணாமற்போனவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.