மருத்துவக் குளியல் முறைகள்

Published By: Ponmalar

12 Dec, 2022 | 02:14 PM
image

பஞ்சபூத தத்துவக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது இயற்கை மருத்துவம். அதில் மருத்துவ நெறிகளாக பல விஷயங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன.

குறிப்பாக, மனிதனின் அன்றாட பழக்கவழக்கங்களைத் தத்துவார்த்த புரிதலுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது உடல்சுத்தம் என்னும் குளித்தல். மனித சமூகத்தில் குளித்தலுக்கு நெறி அமைத்து பழகி வந்தது தமிழ்ச் சமூகம் மட்டுமே.

இயற்கை மருத்துவ முறைப்படி மருத்துவக் குளியல் முறைகள் மற்றும் அவற்றின் பயன்களைத் தெரிந்துகொள்ளலாம்.

சூரியக் குளியல்


வீட்டு மாடி, திறந்தவெளி மைதானம், கடற்கரை போன்ற இடங்களில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு உடல் முழுவதும் வெயில்படுமாறு இருப்பதே சூரியக் குளியல்.

அளவான சூரியக் குளியலால் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வைத் துவாரங்கள் வழியாக வெளியேறும். இதன்மூலம் சருமம் உறுதியாவதுடன் ரத்தச்சுழற்சி சீராகும். தோலுக்கு வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் கிருமிகள் அழியும். உடலில் பித்தம் மற்றும் வெப்ப ஆற்றல் குறைந்தவர்கள் சூரியக் குளியல் எடுத்தால், பித்தத்தின் ஆற்றல் அதிகரிப்பதுடன் வெப்பமும் அதிகரிக்கும்.

உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதில் சூரியக் குளியலின் பங்கு அபரிமிதமானது. சூரியக் குளியல் ஹோர்மோன்களின் சுரப்பை சமன் செய்வதுடன் தூக்கமின்மையைப் போக்கும். இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் விட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைப்பதால் சருமம், எலும்பு மற்றும் கண்களுக்கு நல்லது.

சூரியக் குளியலின்போது கடும் வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்க்க வேண்டும். காலை 7 முதல் 9 மணி வரையும் மாலை 4 முதல் 6 மணி வரையும் சூரியக் குளியலுக்கு உகந்த நேரம். சூரியனின் அதிக அனல் கதிர்கள் நேரடியாக மூளையைத் தாக்கி செயலிழக்கச் செய்து மரணத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே கடும் கோடைக் காலங்களில் சூரியக் குளியலைத் தவிர்க்கவும்.

மண் குளியல்


மண் குளியலுக்கு, நிலத்தை மூன்று முதல் நான்கு அடி ஆழத்துக்கு தோண்டி ஆழத்திலிருக்கும் மண்ணை எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் கறையான் புற்று மண்ணை எடுத்துக் கொள்ளலாம். மண்ணில் கற்களோ ரசாயனக் கலவைகளோ இருக்கக் கூடாது.

நோயாளி அமர்ந்த நிலையிலோ படுத்த நிலையிலோ நீர்விட்டுப் பிசைந்து மண்ணை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிஷங்கள் வரை மண் குளியல் செய்யலாம். மண் குளியல் முடிந்தவுடன் உடலில் பூசிய மண் காய்ந்துவிடும். அதை அகற்ற குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை நோயாளியின் உடல் முழுவதும் தெளிக்கலாம். சளி பிடித்திருந்தால் மண் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

பயன்கள்

* உடலைக் குளிர்வித்து, நச்சுத்தன்மையை நீர்க்கச் செய்து உறிஞ்சி வெளியே எடுத்துவிடும்.

* பசியின்மை, மனஉளைச்சலால் ஏற்படும் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை பயன்படும்.

* ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலில் உள்ள பி.ஹெச் அளவை சமன் செய்யும்.

* சுத்தம் செய்யப்பட்ட மண்ணை 30 நிமிடம் வரை வைத்திருந்து பயன்படுத்தினால் தோலின் அழுக்குகள் நீங்கி பளபளப்பாகும்.

* மண்ணை முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் சுத்தமாகக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைச் சரிசெய்யவும் பயன்படும்.

* கண்களின் மீது பயன்படுத்தினால் கண் படலம், அழற்சி, அரிப்பு, ஒவ்வாமை, விழிநீர் அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

நீராவிக்குளியல்
நீராவிக் குளியலின்போது எளிமையான மெல்லிய உடைகளைப் பயன்படுத்த வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீராவிக் குளியல் எடுப்பது நல்லது. இது உடலில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்ற உதவும். சருமத்துக்குப் புத்துணர்வு அளிப்பதுடன் இளமையை மீட்டுத் தரும். நீராவிக் குளியலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். நீராவி அறையில் வழக்கத்தைவிட உடலின் வெப்பநிலை உயர்ந்து அதிக வியர்வை வெளிவரும் என்பதால் நீராவிக் குளியல் அறைக்குச் செல்வதற்குமுன் தண்ணீர் அதிகம் குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

நீராவிக் குளியல் முடித்ததும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் செல்கள் புத்துணர்ச்சி அடையும். தலை, கை, கால், பாதம் எனத் தனித்தனியாக நீராவி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உடல் வலி மற்றும் மூட்டு வலிகள் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். நீராவிக் குளியல் செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்வு பெறும்; தோல் நோய்கள் குணமாகும்; உடல் எடை குறைந்து ரத்த ஓட்டம் சீராகும்.

முதுகுத்தண்டுவடப் பகுதி மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம், இறுக்கம், உடல் வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, பக்கவாதம், நடப்பதில் சிரமம், கால் மற்றும் பாத எரிச்சல், உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை போன்றவற்றுக்கு நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் வலிகளைப் போக்குவதற்காகச் சில தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தத் தைலங்களைக் கொண்டு வர்ம மருத்துவத்தின் துணையுடன் தொக்கண சிகிச்சை முறைப்படி தேய்த்து, நீராவிக் குளியல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வாழையிலைக் குளியல்
வாழையிலைக் குளியல் என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய புற மருத்துவக் குளியலாகும். வாழையிலைக் குளியலை மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்துகொண்டு செய்வது நல்லது. உடலின் மேல் வாழை இலைகளைப் போர்த்திக்கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிட வேண்டும். சுவாசிப்பதற்காக மூக்குப் பகுதியில் மட்டும் சிறிய துவாரம் ஏற்படுத்திக் கொள்ளலாம். காலை 7 முதல் 9 மணியளவில் வாழையிலைக் குளியல் எடுப்பது நல்லது.

பெண்கள் 10 நிமிடங்களும் ஆண்கள் அரை மணி நேரமும் வாழையிலைக் குளியல் எடுத்துக்கொள்ளலாம். வாழை இலைகளின்மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். மருத்துவரின் பரிந்துரைப்படி மாதம் ஒரு முறையோ அடிக்கடியோ இதைச் செய்துகொள்ளலாம்.

வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. நெற்றிப் பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியைக் கட்ட வேண்டும். வாழையிலைக் குளியலின்போது அதிக அளவு வியர்வை வெளிவரும் என்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். அதனால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

வாழையிலைக் குளியல், மூட்டுகள், நரம்புகளைப் பற்றி வரக்கூடிய நோய்களான கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் கோளாறுகள் மற்றும் பலவிதமான தோல் நோய்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் வரும் பாத எரிச்சல், தூக்கமின்மை, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றுக்கும் நல்ல தீர்வாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29