தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சு : கஜேந்திரகுமார் தரப்பு பங்கேற்காதென அறிவிப்பு

Published By: Nanthini

11 Dec, 2022 | 02:29 PM
image

(ஆர்.ராம்)

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 13) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தச் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடரின்போது பகிரங்கமான அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் சந்திப்பை நடத்துவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த அறிவிப்புக்கு அமைவாக, பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடத்திலிருந்து நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று, குறித்த சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. 

அத்துடன் ரணில் விக்ரமசிங்க தனக்கான அரசியல் அங்கீகாரத்தினை தேடுவதற்கு முனையும் செயற்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் ஒற்றையாட்சிக்குள் பேச்சுக்களை நடத்துவதால் பயனில்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதோடு, சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், ஜீவன் தொண்டமான் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். 

எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுவதோடு, ஜே.வி.பியின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right