வர்மக் கலை பற்றி அறிவோம்

Published By: Ponmalar

10 Dec, 2022 | 04:35 PM
image

வர்மக் கலை என்றால் என்ன?
சித்தர்கள் வகுத்த ஆயக்கலைகளுள் வர்மக் கலையும் ஒன்று. உடலுள் உயிர் செம்மையாக இயங்க உறுதுணையாக இருப்பது வர்மமாகும். இதை வர்ம வாயு என்பர். இந்த ஆற்றல் காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து, உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கிறது; இதுவே வர்மம். 

இந்த வர்ம ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது? 
வர்ம  ஆற்றல் உடல் முழுவதும் தொடர்பை வைத்திருக்கிறது. உடலையும், உயிரையும் பாதுகாப்பதே இவ்வாற்றலின் முக்கிய பணியாகும். திருமூலர் வேதசக்தி என வர்ம ஆற்றலை குறிப்பிட்டிருக்கிறார்.

உடலில் வர்மப் பகுதிகள் எங்கெங்கு உள்ளன? 
தலைப்பகுதி வர்மங்கள்      -     37

நெஞ்சுப் பகுதி வர்மங்கள்  -     13

முதுகுப் பகுதி வர்மங்கள்   -     18

கைப்பகுதி வர்மங்கள்        -      17

கால் பகுதி வர்மங்கள்        -     32

வர்மக் கலை மருத்துவ ரீதியாக எதற்கு மிகவும் உகந்தது? 
தற்போது உள்ள வாழ்வியல் மாற்றம், உணவு முறை மாற்றம், நேரம் தவறி உணவருந்துவது மன அழுத்தம், பணிச்சுமை காரணமாக பதற்றம் போன்ற காரணங்களால், உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு வர்ம மருத்துவத்தில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை, வர்ம மருத்துவத்தில் சமன் செய்ய முடியும்.

வர்மத்தில் தடவு முறைக்கும், ஆங்கில மருத்துவ முறையான இயன்முறைக்கும் என்ன வேறுபாடு?
உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஏற்ப, உடல் உறுப்புகளை அசைத்து சீர்செய்வது, இயன்முறை எனும் தற்கால மருத்துவம். ஆனால், வர்ம மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகாலமாகவே பல்வேறு விதமான தடவுமுறைகள் மற்றும் உடல் இயக்க முறைகள் உள்ளன. பல்வேறு வகையான நோய்களுக்கு, தடவு முறைகள் தூண்டப்பட வேண்டிய ஆற்றல் புள்ளிகள் போன்றவை, வர்ம மருத்துவச் சுவடிகளில் உள்ளன.

எவ்வகையான சிகிச்சை முறைகள் வர்மத்தில் ஆராயப்பட்டுள்ளன?
நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், உடல் உள்ளுறுப்பு, சுவாச மண்டலம் இதய மண்டலம், உடற்கழிவு மண்டலம், பித்த மண்டலம் ஜீரண மண்டலம், மனநலம் என, பலவகையான சிகிச்சை முறைகள் வர்மத்தில் ஆராயப்பட்டுள்ளன.

வர்மப் புள்ளிகளின் செயல்பாடுகளை விளக்குங்கள்?
வர்மப் புள்ளிகள் ஐம்பூதங்கள், தசவாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படுகிற ஐந்தின் கூட்டுக் கலவையால் நிரப்பப்பட்ட இடமாகும். வர்மப் புள்ளியில் இருக்கிற ஆற்றல் காற்றாகவும், மிதமான சூடாகவும், மிதமான நீர்ப்பதமாகவும் இருக்கும். இந்த ஆற்றல் உடைய வர்மப் புள்ளிகள் ஊதல், உறிஞ்சல் என்னும் அடிப்படை செயல்களோடு உடலினுள் இயங்குகின்றன. 

மூளை நரம்பு மண்டலங்களை இயக்க வர்மத்தில் என்ன செய்ய வேண்டும்?
நடுக்கு வர்மம் புறங்கையின் மத்தியில் உள்ளது. இந்த வர்மப் புள்ளியை இயக்கினால், மூளையில் உள்ள, ‘பிட்யூட்டரி’ சுரப்பி இயங்குவதோடு பெருமூளையையும் இயங்கச் செய்யும். 

வர்ம சிகிச்சைக்கான  விதிமுறைகள் என்ன?
சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன் கை நகங்களை வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் தூங்குகிறபோது வர்ம சிகிச்சை செய்யக்கூடாது. 

உணவு உண்டவுடன் வர்ம சிகிச்சை செய்யக்கூடாது. 

அண்டகாலத்தை இயக்குவதற்கு சுத்தமான சிறு துணியை பயன்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்