ஜாதக கட்டங்களில் உள்ள வெற்றிக்கான சூட்சும ரகசியங்கள் 

By Nanthini

09 Dec, 2022 | 05:08 PM
image

ரு குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெற்றோர்கள், ஒரு வயதுக்குப் பின்னரோ அல்லது ஐந்து வயதுக்குப் பின்னரோ நன்கு அறிமுகமான ஜோதிடரை சந்தித்து ஜாதகத்தை எழுதித் தருமாறு கேட்பர். அப்போது ஜோதிடர்கள் பிறந்த திகதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய குறிப்புகளை கேட்பர். 

அந்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, திருக்கணித பஞ்சாங்கத்தின் முறையிலோ அல்லது வாக்கிய பஞ்சாங்கத்தின் மூலமாகவோ ஜாதகத்தை அவதானிப்பர். அப்போது ஜாதகரின் ஆயுள் முழுவதும் கிடைக்கும் பலன்கள் குறித்து ஒரு பொதுவான விடயத்தை முன்மொழிவர்.

ஆனால், ஜாதகருக்கு சோதிடர் அவதானித்து அளித்த பலன்கள் திருப்தியாக இருக்காதபட்சத்தில், அவர் ஜோதிடர்களையும் ஜோதிட முறைகளையும் மாற்றி மாற்றி முயற்சி செய்துகொண்டே இருப்பார். 

அத்துடன் ஒரு புள்ளியில் 'ஜாதகம் என்பது பொய்' என நினைத்துக்கொண்டு கடினமாக உழைக்கத் தொடங்குவார். 

ஒரு தசாப்தத்துக்குப் பிறகும் அவருடைய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், எங்கு தொடங்கினாரோ அங்கேயே தேக்கமடைந்து நின்றுகொண்டிருப்பார். 

பிறகு ஏன் எம்மால் வெற்றி பெற முடியவில்லை, ஏன் நமக்கு வெற்றி கிட்டவில்லை என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டு, சில அனுபவம் மிக்க ஜோதிடர்களை அணுகுவார். 

அவர்கள் ஜாதகத்தை துல்லியமாக அவதானித்துவிட்டு, அவருடைய ஜாதகத்தில் பலனளிக்கும் கிரகம் எது? அந்த கிரகத்தின் ஆதிக்கம் அதிகமுள்ள ஆலயம் எது? அந்த கிரகத்தின் அருளை பெறுவதற்காக மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் என்ன? இப்படியான விடயங்களை அவதானித்து ஜாதகருக்கு வழங்குவர். 

பலருக்கு அதன் பிறகும் பரிபூரண வெற்றியோ ஜாதகத்தில் திருப்தியோ கிட்டுவதில்லை. ஏன்? 

இது போன்ற சந்தேகங்களோடு அவர் மீண்டும் மற்றொரு சோதிட வல்லுநரை தொடர்புகொள்வார். 

அவ்வாறே ஜோதிட வல்லுநரை நபரொருவர் போய் சந்தித்தார்.

அப்போது ஜாதகரிடம் "இதற்கு முன் ஜோதிடம் பார்த்தவர்கள் உங்களுக்கு கூறிய பரிகாரங்களையும் ஆலய வழிபாட்டையும் எந்த முறையில் பின்பற்றினீர்கள்" என ஜோதிடர் கேட்டார். 

"ஆலய வழிபாட்டுக்கு எனக்கு பதிலாக என் தாயாரும் தமக்கையும் சென்றனர்" என பதிலளித்தார். 

"பரிகாரத்தை எப்படி செய்தீர்கள்?" என கேட்க, 

"அதனையும் எமக்கு பதிலாக எம் பெற்றோர்களே செய்தனர்" என்றார், ஜாதகர்.

"அதன் பிறகு, குடும்பத்தாருடன் குலதெய்வ ஆலயத்துக்கு சென்றீர்களா..?" என கேட்டார். 

"நாங்கள் எங்களுடைய குலதெய்வ ஆலயத்துக்கு எங்களது பெயரில் அர்ச்சனையும்  அன்னதானமும் செய்வதற்கு கட்டணத்தை செலுத்தியிருக்கிறோம். எங்களுக்கு பதிலாக அங்குள்ள குருக்கள் அதனை நிறைவேற்றி, எங்களுக்கு பிரசாதத்தை தபாலில் அனுப்பிவிடுவார்" என பெருமிதத்துடன் கூறினார். 

தொடர்ந்து ஜோதிடர் கேட்டார், "அண்மையில் குடும்பத்தினருடன் எந்த ஆலயத்துக்குச் சென்று வந்தீர்கள்?" என்று. 

குறிப்பிட்ட ஆலயத்தின் பெயரை சொன்னார்.

அதற்கு ஜோதிட வல்லுநர், "நீங்கள் வெற்றி பெறாததற்கு உங்கள் அணுகுமுறை தான் காரணம். ஜோதிடர்களோ, ஜோதிட முறைகளோ காரணம் அல்ல. 

ஜோதிடர்கள் தாங்கள் கற்றறிந்த சோதிட முறையில் உங்களின் வாழ்க்கையில் வெற்றி அளிக்கக்கூடிய ஆலயங்களையும் பரிகாரங்களையும் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், அதனை நீங்கள் மேற்கொள்ளாமல், உங்களுக்கு பதிலாக மற்றொருவரை செய்ய வலியுறுத்தி இருக்கிறீர்கள். 

குலதெய்வ ஆலயத்துக்கு நேரில் சென்று தரிசித்த போது, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மனமுருகி விண்ணப்பிக்கவில்லை. 

மேலும், சில பரிகாரங்களையும் நீங்கள் நேரடியாக செய்யவில்லை. அத்துடன் உங்களுக்கு யோகம் அளிக்கக்கூடிய ஆலயத்துக்கு செல்லாமல், உங்களுக்கு பலனளிக்காத, சங்கடங்களை ஏற்படுத்தக்கூடிய கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறீர்கள். 

அத்துடன் எதனை சாப்பிட வேண்டும் என்றும், எதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சோதிட வல்லுநர்கள் கூறியதை கூட நீங்கள் முழுமையாக பின்பற்றவில்லை. 

மேலும், இத்தகைய ஜோதிட வல்லுநர்கள் சொன்ன விடயங்களை முழுமையாக நம்பாமல், அரைகுறை மனதுடன் வழிபாடுகளை செய்திருக்கிறீர்கள். 

அத்துடன் தெய்வ நிந்தனையும், சக மனிதர்களிடத்தில் காட்டப்பட வேண்டிய சகிப்புத்தன்மையை காட்டத் தவறியதுடன், அவரை தரக்குறைவாக மனதில் விமர்சித்திருக்கிறீர்கள். 

அதைத் தொடர்ந்து தவறான காலகட்டத்தில் தவறான சக்திமிக்க ஆலயத்துக்கு சென்று, உங்களின் வாழ்க்கையில் கிடைத்திருக்க வேண்டிய முன்னேற்றத்துக்கு நீங்களே தடைக்கல்லாக இருந்திருக்கிறீர்கள்" என விரிவாகவும் விளக்கமாகவும் சொன்ன பிறகுதான், அந்த ஜாதகர் தான் செய்த தவறை உணர்ந்தார். 

அதனையடுத்தே ஜாதகத்தின் மீதும் ஜோதிடத்தின் மீதும், ஜோதிட முறைகளின் மீதும் நல்லெண்ணத்தை உண்டாக்கிக்கொண்டார். 

அதன் பிறகு மீண்டும் முதலில் ஜாதகத்தை அவதானித்த ஜோதிடரை சந்தித்து, தனக்கான வாழ்வியல் பரிகாரத்தை கேட்டு, அதனை முழுமையான நம்பிக்கையுடன் மேற்கொண்டார். அதன் பிறகு அவருக்கு வாழ்க்கையில் வெற்றி தொடங்கியது.

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவர்கள் வெல்வதற்கான சூட்சும ரகசியங்கள், ஜாதகக் கட்டத்துக்குள் உள்ளன. அதனை ஜோதிடர்களால் துல்லியமாக அவதானிக்க இயலும். அவர்களின் அறிவுரையையும் வழிகாட்டல்களையும் முழு நம்பிக்கையுடன் பின்பற்றினால், வெற்றி கிடைக்கும். 

அதை விடவும் வெற்றியை தக்கவைத்துக்கொள்வதற்கு திறமையும் விடா முயற்சியும் மிக முக்கியம். 

- சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right