குறும்பட பயிற்சிப் பட்டறை : திரைப்பட உருவாக்கத்தில் பெண் தயாரிப்பாளர்களை வலுவூட்டுவதன் முக்கியத்துவம்

By Nanthini

09 Dec, 2022 | 01:44 PM
image

“திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்த பட்டறையின் தொடக்கத்தில் ஓர் இளம்பெண்ணை அவதானித்தேன். அவர் பேசுவதற்கு மிகவும் கூச்சப்பட்டுக்கொண்டிருந்தார். தன் கருத்துக்களை வெளிப்படுத்த தயங்கிய அதேவேளை, நம்பிக்கையுடன் தன் எண்ணங்களை வெளிப்படுத்தவும் சிரமப்பட்டார். இருப்பினும், அவர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கலை இயக்க ஆதரவை வழங்கும் குழுவில் உள்ள விதிவிலக்கான திறமையாளர்களில் ஒருவராக அவர் இருப்பதை கண்டேன். 

அவரால் ஸ்டோரிபோர்டை அற்புதமாக வரைய முடியும். முழு ஸ்க்ரிப்டையும் படங்களாக மாற்றும் தனித்திறமை அவருக்கு இருந்தது. அவர் படப்பிடிப்பை மிகவும் ஆக்கபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தார். 

இதன்போது பயிற்சியின் முடிவில், அவர் மிகவும் நம்பிக்கையுடன் ஆலோசனைகளையும் யோசனைகளையும் முன்வைத்தார் என குறும்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சுமுது மலல்கம, மட்டக்களப்பில் பெண் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான நான்கு நாள் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்ததன் பின்னர் இவ்வாறு தனது அவதானிப்புகளை பகிர்ந்துகொண்டார்.

ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் (CMIL) நடத்திய இப்பயிற்சிப் பட்டறையில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்ற இலங்கை நாடக பயிற்சியாளரும் திரைப்பட இயக்குநருமான பேராசிரியர் இந்திக்க பெர்னாண்டோ மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான சுமுது மலல்கம ஆகியோர் பயிற்சியளித்தனர். 

இந்த குறும்படப் பயிற்சிகள் யாழ்ப்பாணத்திலும் (நவம்பர் 24-27) மட்டக்களப்பிலும் (டிசம்பர் 1-4) நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட அமைப்புகளில் வாழும் பெண்களை பாதிக்கும் பல்வேறு மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, அழுத்தமான குறும்படங்களை தயாரிக்க ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துவதே இந்த பயிற்சிப் பட்டறையின் இலக்காகும்.

மேலும், இளம் பெண்கள் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தி அழுத்தமான குறும்படங்களை தயாரிக்கும் திறனை மேம்படுத்தவும், ஒதுக்கப்பட்ட சூழலில் வாழும் பெண்களின் யதார்த்தத்தை படம்பிடிக்கவும், குறிப்பாக, அவர்களின் மனித உரிமைகளில் கவனம் செலுத்தவும் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு பயிற்சிகளின்போதும், பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலின அடிப்படையிலான வன்முறை, காலநிலை அநீதி, டிஜிட்டல் பெண் வெறுப்பு, பாலினத்தின் பற்றாக்குறை, அரசியல் மற்றும் குடிமைப் பங்கேற்பு போன்றவற்றை மொபைலின் துணையோடு குறும்படம் தயாரிப்பதன் மூலம் குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை இளம் பெண்கள் கற்றுக்கொண்டனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமிகள் எதிர்நோக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஒரு பயிற்சித் திரைப்படத்தையும் உருவாக்கினர். 

கொப்பரேட் மற்றும் அரச நிறுவன அதிகாரிகளிடம் இளம்பெண்கள் எவ்வாறு சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை அந்த படத்தினூடாக விவாதித்தனர். 

பாலியல் துன்புறுத்தலை ஒழிக்க சகிப்புத்தன்மை இல்லாத கலாசாரம் தேவை என்றும் கூறினர்.

மேலும், பாலியல் துன்புறுத்தல் மீதான பயமானது பெண்கள் தங்கள் திறன்களை கண்டுபிடிக்க காரணமாக இருப்பதாகவும், இலக்குகளை அடைவதற்கும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் உந்துதலாக இருப்பதாகவும் பெண்கள் கூட்டாக உறுதிப்படுத்தினர். 

இளம் திரைப்பட தயாரிப்பாளரும் பல்கலைக்கழக பட்டதாரியுமான தனுஷியா, “யாழ்ப்பாணத்தில் இந்த குறும்படம் LGBTQ சமூகம் மற்றும் இளம்பெண்களின் உரிமைகள் குறித்து இளைஞர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் கலாசாரத்தை உருவாக்குவது வாழ்நாள் முழுவதுமான சவாலாக உள்ளது" என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

“பெண்கள் அமைதியாக இருக்கும்போது, சமத்துவத்துக்கான நிலையான அங்கீகாரத்தை உருவாக்குவது மிகவும் கடினமாகிறது" என்றவர், 

"Kinemaster™ போன்ற இலவசமாக கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வீடியோவை எவ்வாறு திருத்தித் தொகுப்பது (editing) என்பதை பயிற்சியின்போது கற்றுக்கொண்டனர். 

ஒவ்வொரு பங்கேற்பாளரும் உணர்வு ரீதியாக சக்தி வாய்ந்த கதாபாத்திரங்கள், கதைகளை உருவாக்குதல் மற்றும் பெண்களின் குரலை பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள திரைப்படங்களை படைத்தல் ஆகியவற்றில் தனிப்பட்ட பயிற்சியை மேற்கொண்டனர்" என்றார்.

"பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பெண்கள் தங்கள் மௌனத்தை உடைத்து, பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ந்து சவால் விடுவது மிகவும் இன்றியமையாதது. இதை செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, பெண்கள் தங்களது யதார்த்தமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் விமர்சனக் கதைகளை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும்” என விரிவுரையாளர் ஆயிஷா சதுரங்கி வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் குறும்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

பெரும்பான்மையான பெண்கள் GBV (Gender Based Violence) குறித்து மௌனம் காத்துவருவதாக ஆயிஷா கூறியபோது, கலந்துகொண்ட அனைத்து பெண்களும் அதை ஆமோதித்தனர். பலர் அவரது அறிக்கையை தங்கள் தனிப்பட்ட கதைகள், கருத்துக்களோடு பூர்த்தி செய்தனர்.

ஆயிஷாவின் கூற்றின்படி, வட மாகாணத்தை சேர்ந்த பெரும்பாலான சிறுமிகள், பாலியல் லஞ்சம், பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலின அடிப்படையிலான பாகுபாடு, இணையவழியில் பெண் வெறுப்பு, பொதுவெளியில் நுழைய மறுப்பது போன்றவை அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளாகும். ஆனாலும், பெரும்பாலான பெண்கள், நீதி தேடுவதில் தங்களின் வாழ்க்கை அனுபவத்தை பற்றி உரக்கப் பேசுவதில்லை.

பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமைகள்

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சிறுமிகள், பெண் குழந்தைகளின் திருமண சம்மத உரிமை மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமை ஆகியவற்றை மையமாக கொண்டு இரண்டு பயிற்சித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளனர். 

இளம்பெண்களுக்கு கதை வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்போது அவர்கள் ஸ்க்ரிப்டை வடிவமைப்பது தொடர்பாக தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். 

பங்கேற்பாளரும் குறும்பட தயாரிப்பாளருமான  திருமதி. கேஷாயினி எட்மண்ட் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமை பற்றிய குறும்படத்தை இயக்கினார். இது பாதுகாப்பான கருக்கலைப்பில் உள்ள களங்கத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது. 

மேலும், சில பெண்கள் சில தந்தைமாரும் குடும்பத்தினரும் பெண்கள் தங்களது விருப்பப்படி, ஒரு கூட்டாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையை சிதைப்பதாக சுட்டிக்காட்டினர். முக்கியமாக, திருமணம் என வரும்போது பெரும்பாலும் பெண்களின் சம்மதம் மதிக்கப்படுவதில்லை என்றும் கூறினர்.

'சமத்துவத்துக்கான திரைப்பட இன்குபேட்டர்' முயற்சியானது கொழும்பில் உள்ள ரோயல் நெதர்லாந்து தூதரகத்தால் ஆதரிக்கப்படுகிறது. 

மேலும், இப்பயிற்சியின்போது, பெண் குறும்பட தயாரிப்பாளர்கள், பால்நிலை சார் வன்முறை (GBV) எப்படி இயல்பாக்கப்படுகிறது என்பது பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இதை பற்றி இளம்பெண் குறும்படத் தயாரிப்பாளரான திவ்யா ராசதுரை கூறுகையில்,

“பெண்களின் வாழ்க்கை யதார்த்தத்தை திரைப்படமாக தயாரிக்கும்போது, உருவக அணுகுமுறைகளை பயன்படுத்துவது மற்றும் பார்வையாளர்களை உணர்ச்சி, அறிவு, ஆன்மீகம், உடல் ரீதியாக ஈர்ப்பது முக்கியம். 

பெண்களை சக்தியற்றவர்களாகவும் ஆதரவற்றவர்களாகவும் குரலற்றவர்களாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் சித்திரிக்கக் கூடாது” என்றார்.

இந்நிலையில் 'சமத்துவத்துக்கான திரைப்படம்' என்ற முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிகள் இனிவரும் காலங்களில் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது சமத்துவ திட்டத்துக்கான திரைப்பட காப்பகத்தின் கீழ், 76 இளம்பெண் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அதிக சமத்துவம் மற்றும் பாலின நீதியை மேம்படுத்துவது குறித்து பயிற்சியளிக்கப்படும்.

சி.எம்.ஐ.எல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், திருகோணமலை பல்கலைக்கழக வளாகம், கொழும்பில் உள்ள விஷுவல் மற்றும் பெர்ஃபோர்மிங் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் திரைப்படம் எடுக்கும் விதம் மற்றும் பெண்களைப் பாதிக்கும் மனித உரிமை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அந்த டிஜிட்டல் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த டிஜிட்டல் பாடநெறி இலங்கையில் உள்ள அனைத்து திரைப்பட ஆர்வலர்களையும் இலவசமாக சென்றடையும் எனவும் கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18