(எம்.சி.நஜிமுதீன்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு 99 வருட கால ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிகையில்,

அரசாங்கம் தற்போது சீன நிறுவனம் ஒன்றுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதற்குரிய நான்காயிரம் ஏக்கர் காணியையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. துறைமுகத்தின் 80 சதவீத பங்கு சீன நிறுவனத்திற்கும் 20 சதவீதப் பங்கு  துறைமுக அதிகார சபைக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. 

எனவே ஆயிரத்து 80 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதல் கட்டமாக வழங்கி 99 வருடங்களுக்கு சீன நிறுவனம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனதுடமையாக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது என்றார்.