இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை  இவ்வாண்டின் இறுதியில் வரவேற்று சரித்திரம் படைக்க இலங்கை சுற்றுலாத்துறை எதிர்பார்த்துள்ளதுடன் இரண்டு பிரதான நிகழ்வுகளை கொண்டாடுவதற்கும் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் உச்ச காலகட்டத்தை அனுபவிப்பதற்கும் திட்டமிட்டு வருகின்றது.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் இந்த இரண்டு பிரதான நிகழ்வுகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிகழ்வுகள் இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கொழும்பில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெறும்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள ஆர்க்கேடில் டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெறும் 2016 சுற்றுலா விழாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமைய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் ஆரம்பித்து. வைப்பார்கள். டிசம்பர் 23 ஆம் திகதி இடம்பெறும் இதன் நிறைவு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெறும்.

இதேவேளை, கொழும்பு கிறிஸ்மஸ் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி டிசம்பர் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிரீன் பாத்தில் நடைபெறும். இது முற்றிலும் ஒரு புதிய எண்ணக்கருவாகும். இதனை சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ஒழுங்கு செய்யும்.

இந்த பருவகால நிகழ்ச்சியின் போது பரிசுப் பொருட்கள், உள்நாட்டு கைப்பணிப் பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யும் 50 கூடங்கள் அமைக்கப்படும். மேலும் நகரிலுள்ள முன்னணி ஹோட்டல்கள் மூலம் நடத்தப்பபடும் 15 உணவுக் கூடங்கள் அடங்கிய ஓர் உணவு விழாவும் இடம்பெறும். அங்கு பல்வேறு வகையான உள்ளுர் உணவு வகைகளையும், விருப்பத்துக்குரிய பருவகால உணவுப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர, களியாட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நகரின் மத்திய பகுதியில் நடைபெறும்.

ஓவ்வொரு நாளும் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு நிறைவடையும். களியாட்ட நிகழ்ச்சிகளில் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதிரூபவ் பவுன்ஸர்ஸ், குதிரை சவாரி, சிறிய மெரி-கோ-ரவுன்ட், முகத்தில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் உள்ளடங்கும். பல சமூக விழிப்புணர்வு நிலையங்கள் அவற்றின் பணிகளை ஊக்குவிப்பதற்காக அங்கு இயங்கும். இவற்றில் ட்ரேய்ல் செஞ்சிலுவைச் சங்கம், யுவதிகள் வழிகாட்டல் சங்கம், இலங்கை பொலிஸ், போதைபொருள் விழிப்புணர்வு நிலையம் என்பன உள்ளடங்கியிருக்கும்.

ஒவ்வொரு நாளும் மாலை 6.30 முதல் இரவு 8 வரை நான்கு இசை குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன. அதன் பின்னர் இரவு 11 மணி வரை நேரடி இசை நிகழ்ச்சியும் டி.ஜே நிகழ்ச்சியும் இடம்பெறும். இதில் பல கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் மாலை 4 மணி முதல் 6.30 வரை பல்வேறு திருவிழாப் பாடல்களையும் மகிழ்வூட்டும் இசையையும் ஒலிபரப்பும் டி.ஜே நிகழ்ச்சி நடைபெறும். இதுதவிர, பொம்பலாட்டக்காரர்களும் மாயாஜாலக்காரர்களும் சிறுவர்களை மகிழ்வித்து அவர்களின் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்குவார்கள்.

ஒட்டுமொத்த கிரீன்பாத் முன்றலும் வெளிச்சக் குமிழ்களையும், பருவகால அலங்காரத்தையும் கொண்டு அழகுபடுத்தப்படும். குறிப்பாக, குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து நேரத்தை கழிப்பதற்கும் இறுதியில் கிறிஸ்மஸ் பரிசில்களை பெற்றுக் கொள்வதற்கும் உரிய முன்மாதிரிமிக்க இடமாக இது விளங்கும். அனைத்து குடும்பங்களையும் மகிழ்வூட்டும் செயற்பாடுகளை வழங்கி நகரில் உள்ள ஒரு மத்திய களியாட்ட இடமாக இந்த வீதி அமைந்திருக்கும்.

நான்கு நாள் கொண்ட சுற்றுலா விழா கொழும்பு கிறிஸ்மஸ் ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு இணைவாக நடைபெறும். சுதந்திரசதுக்க ஆர்க்கேடில் நடைபெறும் சுற்றுலா திருவிழாவில் இடம்பெரும் களியாட்டங்களில் இராணுவம், விமானப் படை மற்றும் பொலிஸ் இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சி பல்வேறு பாடல் குழுக்கள் பாடும் கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் மேடை நிகழ்ச்சிகள் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் என்பன உள்ளடங்கும்.

சுதந்திர சதுக்கத்தை அண்டியுள்ள ஆர்க்கேடை அண்டிய பகுதியில் வானவேடிக்கை நிகழ்சவு இடம்பெறும். இளையோரை மகிழ்விக்கும் ஒரு விசேட சிறுவர் களியாட்டப் பகுதியும் அமைந்திருக்கும். வயது வந்தவர்கள் உலகத் தரத்திலான பொருட்களை அங்கு கொள்வனவு செய்யலாம்.

கொழும்பிலுள்ள முன்னணி ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டூரன்ட்களின் உணவு குடிபாண நிலையங்களையும் இந்த சுற்றுலா விழா உள்ளடக்கியிருக்கும். பார்வையாளர்களுக்கு இலங்கையின் சமையற்கலை நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் சந்தர்ப்பமளிக்கக்கூடிய பல்வேறு சமையற் கலைகள் அங்கு நேரடியாக தெளிவுபடுத்தப்படும். மொங்கோலிய, அரேபிய, சீன, மலேஷிய, தாய், கொரிய, இத்தாலிய, இந்திய, ஜப்பானிய, இந்தோனேசியா சமையற் கலைகளை உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கும். விசேடமாக இந்த உணவு வகைகளை சலுகை விலையில் பெறலாம். மேலும், இலங்கை தேயிலைச் சபை அங்கு ஒரு தேனீர் சுவை நிலையமொன்றையும் திறக்கவுள்ளது. இலங்கையில் கிடைக்கக்கூடிய பல வகையான தேயிலை வகைகள் அங்கு காட்சிப்படுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலங்கை கலாசாரத்தையும் மரபையும் வெளிப்படுத்தக்கூடியவாறு மத்திய கலாசார நிலையத்தினால் அங்கு புகைப்படங்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் நூல்கள் காட்சிப்படுத்தப்படும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையும் ஒரு விற்பனை கூடத்துடன் இலங்கையின் இரத்தினக் கற்களை காட்சிப்படுத்தவுள்ளன. இதுதவிர, இலங்கையின் வனவிலங்குகள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளையும் எடுத்தியம்பும் வகையில் மிருக்கட்சிசாலை திணைக்களமும் வனஜீவராசிகள் திணைக்களம் கண்காட்சிகளை நடத்தவுள்ளன.

கொழும்பு சிற்றி டுவர் நிறுவனம் நடத்தும் ஒரு விசேட இரண்டு தட்டு பஸ் சேவை நாளாந்தம் கொழும்பில் தெரிவுசெய்யப்பட்ட ஹோட்டல்களில் இருந்தும் குறிப்பிட்ட இரண்டு இடங்களில் இருந்தும் இடம்பெறும்.

2016 சுற்றுலா விழாவும் கொழும்பு கிறிஸ்மஸ் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியும் இலங்கை சுற்றுலாத் துறையின் வெற்றியை கொண்டாடும் ஒரு பிரத்தியேக விழாவாக அமைவதுடன் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சுற்றுலா பருவகாலத்தின் தன்மையை பரப்புவதாகவும் அமைந்திருக்கும்.

சுதந்திரசதுக்க ஆர்க்கேடில் நடைபெறும் நிகழ்ச்சிகள்  வருமாறு:

டிசம்பம் 20 ஆம் திகதி 2016

இரவு 7.30 – பொலிஸ் இசைக் குழுவின் கரோல் கீதங்கள். இரவு 8.30 - சோரோ கெலிபர், இரவு 9.00 – கலாசார கண்காட்சியைத் தொடர்ந்து பொலிஸ் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி இரவு 11 – ஸ்விற்ச் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி.

டிசம்பம் 21ஆம் திகதி 2016

மாலை 6.00 – விமானப் படையின் அணிவகுப்பு பான்ட், மாலை 6.30 – சென்ட்.லோரன்ஸ் தேவாலயத்தின் பக்தி கீதங்கள், இரவு 7.00 – கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள், இரவு 7.30 – கலாசார நிகழ்ச்சி, இரவு 9.00- பிரபலக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி.

டிசம்பம் 22 ஆம் திகதி 2016

மாலை 6.00 – இராணுவ இசைக் குழு, மாலை 6.30 – அனைத்து புனித தேவாலய பக்தி இசைக் குழு, இரவு 7.00 – கலாசார நிகழ்ச்சியும் பிரபலக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும்.

டிசம்பம் 23 ஆம் திகதி 2016

மாலை 6.00 – புனித தெரேஸா தேவாலயத்தின் கரோல் கீதங்கள். இரவு 7.00 – இசை நிகழ்ச்சி, இரவு 7.30 – 12.00 – பக்தி கீதங்கள், வானவேடிக்கை நிகழ்ச்சி, நேரடி இசை நிகழ்ச்சி.