தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

By Digital Desk 2

08 Dec, 2022 | 10:43 AM
image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அவருடைய இறுதிச் சடங்கு இன்று (8ம் தேதி) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயணமூர்த்தி. இவர், மறைந்த நடிகரும், இயக்குநருமான விசு மூலம் ‘பூந்தோட்டம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ்த் திரையுலக நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேலு கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டார்.

அத்துடன், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (டிச.7ம் தேதி) இரவு 8.30 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று (8ம் தேதி) மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவ நாராயணமூர்த்திக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், லோகேஷ், ராம்குமார் என்ற மகன்களும், ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளனர். சிவ நாராயணமூர்த்தியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right