முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய  ராஜபக் ஷ உள்ளிட்டோரை மறைமுகமாக பாதுாக்கும் 'டீல்' செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அழுத்தம் செய்யப்படுகிறது. இந்த விடயத்தில் நாம் அவதானமாக உள்ளோம். எமது போராட்டத்தை கைவிடவும் மாட்டோம். மோசடிகளை மூடி மறைக்கவும் விடமாட்டோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’   அமைச்சர்  சாகல ரத்நாயக்கவாக இருக்கலாம். ஏனெனில் ஜனாதிபதியோ பிரதமரோ நாம் அழைக்கவில்லை என என்னிடம் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ யார் என்பதனை ஊடகங்கள் கூறியுள்ளன. நாமும் ஊடகங்கள்  மூலமே அறிந்து கொண்டோம். ஊடகங்கள் கூறும் அமைச்சராக இருக்கலாம். எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரிடம்   நான் வினவினேன். இதன்போது இருவரும் நாம் அழைக்கவில்லை என்றே கூறினர்.

எவ்வாறாயினும் இது வெளிப்படையாக நடந்துள்ளது. ஆனாலும் இதனை விடவும் மறைமுகமாக திருடர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மறைமுகமாக ‘டீல்’ செய்யப்பட்டு தொடர்ந்து அழுத்தம் பிரயோகம் செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது எமது உயிரையும் பணயம் வைத்து ஆட்சியை கொண்டு வந்துள்ள நிலையில் ஜனவரி 8 ஆம் திகதி காலை எழுந்து கோட் சூட் அணிந்து அமைச்சுப் பதவிகளை பெற்று கொண்டவர்கள் திருடர்களை பாதுகாக்க முனைகின்றனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , யோசித்த ராஜபக் ஷ ஆகியோரை பாதுகாப்பதற்கு 'டீல்' போடப்பட்டு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும்போது;

கேள்வி: பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: இல்லை. அவர் ஏதும் தவறு செய்யவில்லை.