(ஆர்.ராம், எம்.எம்.மின்காஜ்)

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் எந்தவொரு விடயங்களும் இறுதிசெய்யப்படவில்லை. அனைத்தும் பேச்சுமட்டத்திலும் யோசனைகள் முன்மொழியப்பட்ட நிலையிலுமே காணப்படுகின்றன என சபையில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெறுவதற்கு இடையூறுகளை விளைவித்தால் எதிர்காலத்தில் கவலையடைய நேரிடும் எனவும் எச்சரித்தார்.

தேசிய பாதுகாப்பை, இராணுவத்தை பலவீனப்படுத்தும் வகையில் எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படாது என உறுதிபடத் தெரிவித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயங்காரவாதத்தை எதிர்கொள்வதற்கு தயாராகவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா ஒப்பந்தம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே கைச்சத்திடப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக  சகோதரத்துவதுடனும் ஒற்றுமையுடனும் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு, மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சபையில் மிக முக்கியமான அமைச்சின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. குறிப்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் பிரஸ்தாபித்த கருத்துக்களை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். தற்போது எனது கருத்தையும் தவறான கருத்துகளை ஏற்படுத்தும் விடயங்களையும் நான் குறிப்பிடவுள்ளேன்.

தேசிய பாதுகாப்பு

நாம், நாட்டின் பாதுகாப்பை ஒருபோதும் அற்ப விடயமாக கருதிவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்த சபையிலுள்ள அனைவரும் சிறந்த புரிதலைக் கொண்டிருக்க  வேண்டும். தேசிய பாதுகாப்பை பொறுத்த வரையில் சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்பும் மற்றும் நட்புணர்வும் முக்கியமாகும். நாட்டை முன்னேற்றும் விடயத்தை பொறுத்த வரையில் எம்முடன் நட்பான சக்திகள், பகமையான சக்திகள் ஆகியவற்றை அடையாளம் காணவேண்டும். எமது நாட்டின்  தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பிரச்சினைகளின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பதை முதலில் புரிந்துக்கொள்வது அவசியமாகும். எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட்டமைக்கான காரணம் என்ன?, யுத்தம் நிலவியபோதான நிலைமைகள், யுத்தம் மீண்டுமொருதடவை ஏற்படுவதை தடுத்தல் என்பன தொடர்பாக  யுத்தத்தின் நிறைவின் பின்னர் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் அந்தப்  கடந்த ஆட்சியின் போது அந்தப் பொறுப்பு தவறவிடப்பட்டுள்ளது.

முப்படையினர் யுத்தம் மற்றும் ஆயுத ரீதியாக ஆற்றிய பணியாற்றியுள்ளர். அது தேசிய பாதுகாப்பு தொடர்பாக  ஒருதுறை சார்ந்த விடயம் மட்டுமே ஆகும்.  தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை வரும் என்ற அபசகுணமான நிலைமையை உணர்ந்தால் அதற்குரிய முன்கூட்டிய தீர்வொன்றை காண்பது மிகவும் முக்கியமானதாகின்றது.

இங்கு உரையாற்றிய உதய கம்மன்பில உறுப்பினர், எதிர்காலத்தில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட்டால் என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தார். மீண்டும் யுத்தமொன்று ஏற்படக்கூடும் என்ற எண்ணமொன்று ஏற்படுமாயின் அந்த எண்ணத்தை இல்லதொழிப்பதற்கு  நாட்டு மக்களுக்காக அடிப்படை வேலைத்திட்டமொன்று காணப்படவேண்டும். 

பல்குழல் பீரங்கிகளை வைத்துக் கொண்டு நவீனத்துவம் அடைந்து வரும் தற்போதைய காலத்தில் படையினரால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது. சைபர் பயங்கரவாதம் மற்றும் சைபர் குற்றச்செயல்களை நவீன தொழில்நுட்பங்களுடன் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும்.

உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும். 

ஆகவே நாம் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்ற நாம் உச்சப்பட்சம் செயற்படுவோம். தேசிய பாதுகாப்பில் எந்தவிதமான பலவீனப்படுத்தலுக்கும் நாம் இடமளித்திருக்கவில்லை. எதிர்காலத்தில் நாம் இடமளிக்கவும் மாட்டோம். அவ்வாறிருக்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாக தவறான தகவல்கள் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றமை கலைக்குரிய விடயமாக இருக்கிறது.  

தேசிய பாதுகாப்பாக இருக்கட்டும் அரச பாதுகாப்பாக இருக்கட்டும் அவை தொடர்பில் எவ்வாறான விமர்சனங்கள் வெளியிடப்பட்டாலும் கூட  அரசாங்கம் என்ற வகையில் இராணுவத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படமாட்டோம். அதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம். மாறாக இராணுவத்தை நாம் பலப்படுத்துவோம். 

எட்கா ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். தவறான தகவல்களை முன்வைத்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் தொடர்பாக  நான் கவலையடைகிறேன்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தமான எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் அந்த ஒப்பந்த்தை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படும். அதன் பின்னர் அந்த ஒப்பந்த்தை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படும். அதில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் இருப்பின் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர்  அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எட்கா ஒப்பந்தமொன்றே கைச்சாத்திடப்படும் என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன். 

எமது பொருளாதார மற்றும் ஏனைய ஒத்துழைப்புகளின் நிமித்தம் சகல நாடுகளுடனும் ஒப்பந்தங்களையும் ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எதிர்காலத்தில் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

புதிய அரசியலமைப்பு

அதேநேரம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்ற. இந்த நிலையில் அச்செயற்பாடு தொடர்பாகவும்  தவறான கருத்துக்களே மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தற்போதுவரையில் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளன.  குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை ஆராயப்பட்டு வருகின்றன.  அவ்விடயங்கள் தொடர்பில்  எவ்விதமான  உடன்பாடும் எட்டப்படவில்லை.  குறித்த விடயங்கள் தொடர்பாக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பேச்சுவார்த்தை, யோசனைகளை முன்வைத்தல், திட்டமிடல் மட்டங்களிலேயே உள்ளன. 

அனைவருக்கும் அழைப்பு

எதிர்காலத்துக்கு நாடு தயாராகும் போது புதிய அரசியலமைப்பு, புதிய வர்த்தக உடன்படிக்கைகள், பொருளாதார திட்டங்கள் என அனைத்தும் அவசியமாகும். நாம் எதிர்காலத்துக்கென தயாராகும் போது இங்குள்ள அனைவரினதும் ஆதரவு தேவையாகும். வர்த்தக உடன்படிக்கைகள், புதிய அரசியலமைப்பு மற்றும் கட்டளைச் சட்டங்களை தயாரிக்கும் போது மக்களினதும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்களினதும் அபிப்பிராயங்களை பெற்றே நாம் செயற்படுவோம். தவறான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக விமர்சிக்கின்றார்கள். எதிர்காலத்தில் அதிகாரத்திற்குவரும் நோக்கத்துடன் குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயற்படுவார்களாயின் அதன் பிரதிபலனை எதிர்காலத்தில் சகலரும் அனுபவிக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.  எமது பொறுப்பை நாம் தற்போதைய சூழலில் நிறைவேற்றாவிட்டால் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகிவிடும். ஆகவே பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் சகோதரத்துவதுடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.