நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

07 Dec, 2022 | 11:14 AM
image

தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படமான 'கனெக்ட்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மாயா', 'கேம் ஓவர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குவர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கனெக்ட்'.

இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் பொலிவுட் நடிகர் அனுபம் கெர், சத்யராஜ், வினய் ராய், ஹனியா நபிஸா உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம், டிசம்பர் ஒன்பதாம் திகதியன்று நள்ளிரவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியன்று படமாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மாயா' படத்தை இயக்கிய இயக்குநரின் படைப்பு என்பதாலும், 'கனெக்ட்' எனும் படத்தின் தலைப்புடன் 'பிசாசு அமைதியாக வெளியேறுவதில்லை' என்ற பொருள் படும்படி 'The Devil doesn't leave quietly' என்ற டேக் லைன் இடம் பெற்றிருப்பதாலும், பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right