அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த போராட்டத்தில் மகஜரும் வாசிக்கப்பட்டது. குறித்த மகஜரில் உள்ளதாவது,
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகிய நாம் எமது மேற்படி கோரிக்கையை இத்தால் தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள நாங்கள் கடந்த கால யுத்தம், கொவிட் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வந்தாலும் தற்போது இலங்கை வாழ் அநேகமான மக்களுக்கான தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையினையே காணுகின்றோம் இது எங்களது அடிப்படை சுகாதார உரிமையினை அனுபவிக்க முடியாத தன்மையையே காட்டி நிற்கின்றது.
மேற்படி அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத பாதிப்பானது அனைத்து மக்களையும் பாதித்திருந்தாலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களையும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளையும் அதிகமாக பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கின்றது.
இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் சாதாரண நோய் தாக்கம் தொடக்கம் பாரிய சத்திர சிகிச்சை வரையான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லுவதே அவர்களது உரிமையாகும். குறிப்பாக மக்கள் வைத்தியசாலைகளுக்குச் செல்லுகின்ற போது குறிப்பிட்டளவு அத்தியாவசிய மருந்துப் பொருட்களே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றது.
ஏனைய மருந்துப் பொருட்களை தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ பணம் செலுத்தி பெற வுேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அதுமாத்திரமின்றி நாய், பூனை மற்றும் பாம்பு தீண்டல்களுக்கான மருந்துகளும் கிடைக்கப் பெறுவது குறைவாகவே காணப்படுகின்றது,
குறிப்பாக சத்திர சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள் மருத்துவ சாதனங்கள் உரிய வகையில் கிடைக்கப் பெறாத காரணத்தினால் உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகமான பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர், இவை கவனிக்கப்படாதவிடத்து எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே காணப்படுவதுடன், இது எமது இலங்கை வாழ் மக்களின் நிலையான வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் நிலையினையே உணர்த்தி நிற்கின்றது.
இது குறிப்பாக அரச வளங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறாத அடிநிலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அதிகமாக பாதிப்பிற்குள்ளாக்கியிருப்பதுடன் மற்றும் மத்திய வாழ்க்கை நிலையிலுள்ளவர்களையும் பாதித்திருக்கின்றது.
எனவே இலங்கை அரசு என்ற வகையில் மேற்படி அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்ற இலங்கை வாழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளையும் மருத்துவ சாதனங்களையும் உடன் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டி நிற்கின்றோம் - என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM