எமது நாட்டில் உள்ள நகரங்கள் அனைத்தும் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நிலையில் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டயகம நகரம் இன்னும் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் காணப்படுவது வேதனை தர கூடிய விடயமாகும்.

இந்நகரத்தில் 75 இற்கும் மேற்பட்ட வியாபாரகடைகள் உள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரமாகும். வியாபாரகடைகளில் அதிகமான ஊழியர்கள் வெளி பிரதேசங்களில் இருந்து கடைகளில் தங்கி தொழில் செய்கின்றனர்.

இங்கு நுவரெலியா பிரதேச சபையின் மூலம் நிர்வாகிக்கபடும் பொது மலசலகூடம் கடந்த 06 மாதம் காலமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்குள்ள மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இங்குள்ள பொது மலசல கூடம் 06 மாதங்களுக்கு முன்பு நுவரெலியா பிரதேச சபையால் புணரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது. இப்பணிகள் பூர்த்தி செய்யபடாத நிலையில் மூடப்பட்டு இருப்பதாக இங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மலசலகூடம் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக நகரத்திற்கு வரும் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கின்ற இதேவேளை நகரத்திற்கு வரும் பெண்கள் வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

மலசலகூடங்கள் அமைந்துள்ள முன்பகுதியில் புற்கள் வளர்ந்து சுற்றாடல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு மழைக் காலங்களில் துர்நாற்றம் வீசப்படுவதோடு மாலை நேரத்தில் நுளம்பு தொல்லையும் அதிகரிததுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் மலசல கூடம் பணிகளை ஆரம்பிக்கும்போது நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் காட்டிய ஆர்வம் தற்போது மூடப்பட்ட நிலையில் காணப்படும் மலசல கூடத்தினை திறப்பதில் எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில் அக்கறை காட்டவில்லையென இங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மூடப்பட்டுள்ள பொது மலசல கூடத்தினை நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.