'மாணவர்களுக்காக' பாதணிகள் தைக்க துணிந்துவிட்ட ஆசிரியர்

Published By: Digital Desk 2

06 Dec, 2022 | 11:42 AM
image

(மா. உஷாநந்தினி)

மனதை நெகிழவைக்கும் ஒரு செயற்பாட்டின் மூலம் கடந்த வாரம் சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார் குருணாகலை சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.

குருணாகல் மாவட்டத்தின் வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள மிரிஹானேகம கனிஷ்ட வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியரான மஹிந்த குமாரஹந்த (46) என்பவர் தனது பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் கிழிந்துபோன பாதணிகளை தன் கையாலேயே தைத்துக் கொடுக்கும் பணியை சில நாட்களாக தொடர்ந்து  செய்து வருகிறார்.

தனது மாணவர்களுக்காக பாதணிகள் தைக்கும் வேலையையும் செய்யத் துணிந்துவிட்ட இந்த ஆசிரியரை வலைத்தள பயனாளர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

உணவு, உடை, உறைவிடம் என மனிதன் பெற வேண்டிய அதிமுக்கிய தேவைகளைப் போன்று, இன்றைய சூழலில் கட்டிக்காப்பாற்ற வேண்டிய பெறுமதி வாய்ந்த உடைமையாவது கல்வியும் தான்.

எக்காலத்து தலைமுறையினரும், அடுத்த தலைமுறைக்கு குறைவின்றி கொடுக்க துணிவதும் கல்வியை மட்டுமே.

அதற்கான கடமை, தேவை, சேவை பற்றிய கொள்கைகளும் சிந்தனைகளும் வீட்டில் பெற்றோர் முதல் பாராளுமன்றம் வரை உணரப்பட்டு வருகிறபோதும், இன்று கல்வி வியாபாரமயமாக்கப்பட்டிருப்பது பெரும் குறையாக தெரிகிறது.

அத்தோடு பாடசாலைக்கான வசதிக் கட்டணங்கள், பகுதிநேர வகுப்பு கட்டணங்கள், ஒன்லைன் வகுப்புகளுக்கான இணைய கட்டணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களுக்கான விலை பெறுமதிகள், போக்குவரத்து கட்டணங்கள்... அனைத்தினதும் அதிகரிப்பானது நூல் பிடித்தாற்போல் மொத்தமாய் கல்வியை தூர நிறுத்துகிற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, பொருளாதார நெருக்கடி நிலையில் பாடப் புத்தகங்கள், கொப்பிகள், கணித உபகரணங்கள், புத்தகப்பைகள், பாதணிகள் போன்றவற்றின் விலையேற்றங்கள் கல்வி மீதான எதிர்பார்ப்பினை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதாக சமூகத்திலும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எனினும், சேவைக் கண்கொண்டு கல்வி புகட்டி, படிக்கின்ற சிறுவர்களின் எதிர்கால வாழ்வில் வெளிச்சம் பாய்ச்ச உழைப்பவர்களையும் நாம் ஈண்டு நோக்கத்தானே வேண்டும்.

அந்த வகையில் தன்னலம் கருதாத பணியினை செய்து வரும் வாரியபொல ஆசிரியரோடு உரையாடியபோது அவர் தன்  பணி குறித்த அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

"நான் குருணாகல் மாவட்டத்தின் மாஸ்பொத பிரதேசத்தில் வசிக்கிறேன். களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுவிட்டு, தற்போது ஆசிரியராக கடமையாற்றுகிறேன்.

இன்று மிரிஹானேகம கனிஷ்ட வித்தியாலயத்தில் சித்திரம் மற்றும் சிங்கள பாடம் கற்பித்து வரும் ஆசிரியராக இருக்கிறேன்.

இங்குள்ள மாணவர்களுக்கும் எனக்கும் இடையிலான புரிதல் மிக அதிகம். இத்தகைய சந்தர்ப்பத்தில் எனது மாணவர்களிடம் நான் சில விடயங்களை அவதானித்தேன்.

எமது பாடசாலையில் வசதியான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் நிறைய பேர் கற்கிறார்கள்.

அதேவேளை வறுமையான குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வந்து படித்துவிட்டுச் செல்கிறார்கள்.

சீருடையில் அவர்களை பார்க்கிறபோது அவர்களின் கிழிந்த சப்பாத்துகள் தான் என் கவனத்தில் வந்து நிற்கும்.

பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கிழிந்த சப்பாத்துகளை அணிந்து வருவதையே நான் பார்த்திருக்கிறேன்.

கிழிந்த சப்பாத்துக்கள் இல்லாததால் ஒருசிலர் பாடசாலைக்கு வராமலும் இருந்திருக்கிறார்கள்.

ஒரு சீருடையின் முழுமையான தோற்றத்தை தீர்மானிப்பது சப்பாத்துகளே. அத்தகைய சப்பாத்துகள் கிழிந்துபோய், பூரணமற்ற சீருடையுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதை பார்க்கையில் நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

இதைப் பற்றி ஒரு முறை நான் மாணவர்களிடம் கேட்டபோது, 'சப்பாத்துகள் பிய்ந்துபோய்விட்டது சேர், என்ன செய்வது?' என்று சொன்னார்கள்.

நான் அவர்களிடம் சப்பாத்துகளை கொண்டு வந்து தருமாறு கூறினேன்.

மறுநாளே அவர்கள் இரண்டு, மூன்று சப்பாத்துகளை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்கள்.

அவற்றை தைக்கத் தெரியுமா, தெரியாதா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால், 'என்னால் முடியும்' என்ற நம்பிக்கையில் தைக்க ஆரம்பித்தேன்.

பாடவேளை தவிர்ந்த ஓய்வு நேரங்களில் எப்படியோ சப்பாத்துகளில் உள்ள கிழிசல்களை தைத்து முடித்து, அன்றைய தினமே மாணவர்களின் கையில் கொடுத்தேன்.

அவர்களும் அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போனார்கள்.

நான் தைத்துக்கொடுத்த சப்பாத்துகளை அணிந்துகொண்டு அவர்கள் பாடசாலைக்கு வருவதை பார்த்தபோது எனக்குள் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

கடந்த வாரம் நான் சப்பாத்து தைப்பது போன்ற படங்களை விளையாட்டாகத்தான் ஃபேஸ்புக்கில் பதிவேற்றினேன். அந்த பதிவு இத்தனை தூரம் ஆயிரக்கணக்கான மக்களால் பேசப்படும் என நினைத்தே பார்க்கவில்லை.

எனது இந்த சிறு முயற்சியை பலர் பாராட்டி வருகிறார்கள். பலர் தங்களால் முடிந்த உதவிகளை எமது மாணவர்களுக்கு செய்வதாக கூறுகிறார்கள். அந்த வகையில் இது எனக்கு சந்தோஷமான செய்தியே.

கடந்த வாரம் திங்கட்கிழமை சப்பாத்து தைக்க ஆரம்பித்து, இதுவரை நான் 8 ஜோடி சப்பாத்துகளை மாணவர்களுக்கு தைத்துக் கொடுத்திருக்கிறேன்.

சப்பாத்து தைப்பதற்காக நான் பெரிதளவில் பணம் செலவழிப்பதில்லை. ஒட்டுவதற்கான பசை, நூல், ஊசியை கொழும்பில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்வேன். சப்பாத்து தைப்பதற்கே உரிய ப்ரௌன் நிற நூல் பந்தல்கள் வீதியோர கடைகளிலேயே நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பி, இங்கே சப்பாத்து தைப்பதை ஓய்வுநேர செயலாக தொடர்ந்து செய்து வருகிறேன். இனிவரும் காலங்களிலும், இதை இடைநிறுத்தாமல் செய்வேன்.

இந்த சப்பாத்து தைக்கும் வேலையில் எனக்கு செலவு அதிகமில்லை. அதைப்போல் இதில் எனக்கு வருமானமும் இல்லை. ஆனாலும், மாணவர்களுக்காக மன திருப்தியோடு சந்தோஷமாக செய்து வருகிறேன்.

எமது மாணவர்களில் பலர் வறுமையோடு போராடுபவர்கள்; தாயின்றி, தந்தையின்றி வளர்பவர்கள்; தாயோ அல்லது தந்தையோ கைவிட்டுச் சென்ற நிலையில் பிறிதொருவரின் துணையோடு கல்வியை தொடர்பவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்வு சிறக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்...." என அவர் கூறி முடித்தார்.

இவர் சப்பாத்து தைப்பது போல் பதிவிட்ட  புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி, இதுவரை  2,700 பயனாளர்கள் பதிவினை பகிர்ந்துள்ளனர். 500க்கு மேற்பட்டோர் பின்னூட்டல்களை வழங்கியுள்ளனர்.

- பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் வலியை புரிந்துகொள்ளும் ஆசிரியர் நீங்கள்.

- குழந்தைகளுக்கும் தைக்க கற்றுக்கொடுங்கள்.

- சப்பாத்துகளை அணியாமல் வரும் பிள்ளைகளை தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு முன்மாதிரி.

- உங்களை போன்றவர்கள் தொழில் நிறுவனங்களில் உயர் நாற்காலியில் இருந்திருந்தால், நம் நாடு என்றோ ஜப்பானை விட உயர்ந்த நாடாகி இருந்திருக்கும்.

- உரிமைகளை விட கடமைகள் முக்கியம் என்பதை புரிந்துகொண்ட உண்மையான மனிதாபிமானம் கொண்ட உங்களை போன்ற ஆசிரியர்களுக்கு வணக்கம்!

- பிள்ளைகளை காரணமின்றி தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் நீங்கள் உயர்ந்தவர்.

இவ்வாறாக தொடரும் பின்னூட்டல்களை அவதானிக்கையில், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் என்னென்ன, சமூகம் அங்கீகரிக்க காத்திருப்பது எதற்காக, யார் யாருக்காக என்பது தெளிவாகிறது.

ஆம். இறுதியில் எஞ்சப்போவது மனிதம் மட்டுமே!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22