(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள கையேந்தியுள்ள பின்னணியில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பாரிய வர்த்தகர்கள் மூலம் நாட்டுக்கு 53 பில்லியன் டொலர் நிதி கிடைக்க வேண்டியுள்ளது.
அவர்கள் அதை வழங்காமல் ஏமாற்றி வெளிநாடுகளில் அந்த நிதியை பதுக்கி வைத்து வேறு வர்த்தகங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
மத்திய வங்கியின் நிர்வாக கட்டமைப்பின் பலவீனத்தினால் நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் மொத்த கடனையும் அடைப்பதற்கு 52 பில்லியன் டொலர் நிதியே தேவைப்படும் நிலையில் அவர்கள் கடந்த 12 வருடங்களாக நாட்டுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகை 53 பில்லியன் டொலர்கள் உயர்வடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச.05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் - திட்டத்தில் துறைமுகம் மற்றும் கப்பற்துறை , நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசிலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளில் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த வருடம் மாத்திரம் 3 பில்லியன் டொலர் நிதி அவர்களிடமிருந்து நாட்டுக்கு கிடைக்க வேண்டியுள்ளது. அதனை அவர்கள் வழங்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.
இந்தளவு நிதி முறையாக நாட்டுக்கு கிடைக்கப்பெற்றிருந்தால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நான்கு வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
எனினும் கடந்த வருடம் மாத்திரம் ஏற்றுமதி வர்த்தகர்களிடமிருந்து எமக்கு 3 பில்லியன் டொலர் நிதி கிடைக்க வேண்டியுள்ளது. அது எமது நாட்டு மக்கள் வியர்வை சிந்தி நாட்டுக்காக உழைத்த உழைப்பின் மூலமான நிதியாகும். அதனை இவ்வாறு ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.
இந்த விவகாரம் தொடர்பில் 100 ஏற்றுமதி வர்த்தகர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. எனினும் 57 பேரே இதுவரை அதற்கான அறிக்கையை வழங்கியுள்ளனர். எவ்வாறெனினும் அந்த அறிக்கைகள் எதுவும் முழுமையாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் இவ்வாறு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்?
இத்தகைய எல்லா மோசடிகளுக்கும் அரசியல் ரீதியான பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்கின்றது. அது மட்டுமன்றி அவர்களே நாட்டுக்கு வெளிநாடுகளில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து குவிப்பவர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறான 300 பில்லியன் மோசடி தொடர்பில் நான் 2007ஆம் ஆண்டு வெளிக்கொண்டு வந்தேன்.
அது தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் அது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கசப்பான உண்மை.
இத்தகைய பாரிய மோசடிகள் தொடர்பில் பாராளுமன்றம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத காரணத்தாலேயே மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். இத்தகைய மோசடிகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட பாராளுமன்ற தெரிவிக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என மக்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும். மத்திய வங்கியின் நிர்வாக கட்டமைப்பில் பலவினத்தன்மை பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM