(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 26,000 கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் வியாபாரம், பாவனை மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் சடுதியாக தீவிரமடைந்துள்ளது.
இந்நிலைமையைக் கட்டுப்படுத்தவதற்காகவே ஐஸ் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்திற்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நிலையில் எவரும் பொறுப்பினை ஏற்க முன்வராத பின்னணியில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்று பல விடயங்களை திருத்தியமைத்துள்ளோம். நிறைவடைந்த ஆறு மாத காலத்திற்குள் 27 சட்டங்களை இயற்றியுள்ளோம். 27 சட்டங்களில் 17 சட்டங்கள் நீதியமைச்சுடன் தொடர்புடையவையாகும்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை பிரதான சவாலாக எதிர்கொண்டுள்ளது.
சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். ஐஸ் போதைப்பொருளுக்கு எதிரான சட்டம் உருவாக்கப்பட்டு அதன் பாவனை மற்றும் வியாபாரத்திற்கான அதிகபட்ச தண்டனை மரண தண்டனையாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சட்டத்தை முறையாக செயற்படுத்தும் தரப்பினர் ஊடாக கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் நீதிமன்ற வழக்கு நிறைவடைவதற்கு முன்னர் சமூகமயப்படுத்தப்படுகிறது. இது பாரதூரமான பிரச்சினையாகும்.
ஒருசில பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் சமூக மயப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள். நீதிமன்றங்களில் பல ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடைய பழமையான சட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான காரியாலயத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறைவு செய்யப்பட்ட 1653 ஆவணங்கள் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 1653 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
3520 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. 5246 குடும்பங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள 11 780 பேர் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு நடமாடும் சேவை ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் ஒன்பது மாகாணங்களிலும் போதைப்பொருள் ஒழிப்புக்காக விசேட செயலணியை ஸ்தாபிக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயலணி அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக 2700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 49 செயற்திட்டங்கள் ஊடாக இந்த உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளன.
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 12 000 பேர் இருப்பதற்கான கட்டமைப்பு காணப்படும் பட்சத்தில் இதுவரை 26 000 இற்கும் அதிகமாக கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள். இவர்களின் 6000 பேர் நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்கள்.
ஏனையோர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 26 000 சிறைகைதிகளை பராமரிக்க அரசாங்கம் பாரிய நிதியை செலவிடுகிறது. இந்த 26 000 பேரில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள். இதற்கமைய சிறைச்சாலைகளை மறுசீரமைக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் தேங்கியிருப்பது பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இது நீதிகட்டமைப்பின் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழங்கு உயர்நீதிமன்றம் வரை சென்றால் தீர்ப்பு கிடைக்க 20 வருடங்கள் செல்லும்.
தொழில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நிதிமன்றத்திற்கு சென்றால் தீர்ப்பு கிடைக்க 10 வருடங்கள் செல்லும். அதேபோல் அடிப்படை உரிமை மீறல் வழக்கிற்கான தீர்ப்பு இரண்டு மாத காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் நடைமுறையில் தீர்ப்பு கிடைக்க 3 அல்லது 4 ஆண்டுகள் செல்லும்.
நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களில் மாத்திரம் 10 இலட்சத்துக்கு 94 912 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே காலத்திற்கு தேவையான சட்டங்கள் மற்றும் பழைமையான சட்டங்கள் என 50 சட்டங்கள் வேறுப்படுத்தப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு கைச்சாத்திட்டதற்கமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் ஒழிப்பு சட்டமூல பிரதிகள் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.வெகுவிரைவில் ஊழல் ஒழிப்பு சட்டம் இயற்றப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM