தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த முதல்வர் ஜெயலலிதா மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். 

போயஸ் தோட்டத்தை விட்டு ஜெயலலிதா வெளியேறுகிறார் என்றாலே அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டு இருப்பார்கள்.

 தெய்வத்தைக் கண்ட பக்தர்களைப் போல் காலில் விழுந்து மலர் தூவி வணங்குவார்கள். 

ஒரு நொடி தரிசித்தால் போதும் ஓராண்டுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என தமிழக மக்கள் கூறுவதுண்டு.

 இன்றைய தினம் ஜெயலலிதாவின் இறுதி யாத்திரையின் போதும் அலைகடலென திரண்டு கொண்டிருந்த மக்கள், கண்ணீர் மல்க மலர்கள் தூவி பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா காரில் வரும் போது, தொண்டர்கள் தூவும் மலர்கள் நிரம்பி வழியும். இதுபோன்றே ஜெயலலிதாவின் இறுதிப் பயணத்திலும்  வழியெங்கும் மக்கள் மலர்கள் தூவி வழியனுப்பி வைத்தனர்.

'பெற்றால்தான் பிள்ளையா நாங்கள் இருக்கிறோம் அம்மா.." என்று கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். 

பச்சை நிற புடவை, பச்சைக்கல் மோதிரம், நெற்றியில் சின்னதாக ஒரு மெருன் நிற பொட்டு, லேசாய் இழுத்து விடப்பட்ட நாமம் என தரிசமாய் தோற்றமளித்த ஜெயலலிதா, இறுதி துயில் கொள்ளும் போதும் அதே பச்சை நிற பட்டுப்புடவையுடன் புன்னகை ஓய்ந்த  முகத்துடன், மெரீனா கடற்கரையில் சந்தன பேழைக்குள் பட்டுத்தலையணையில் படுத்துறங்குகிறார்.

75 நாட்களுக்கு முன்புவரை போயஸ் தோட்டத்து பட்டு மெத்தையில் துயில் கொண்ட ஜெயலலிதா, செப்டம்பர் 22ஆம் திகதி இறுதியாக போயஸ் தோட்டத்தை விட்டுச் சென்றார்.

  நேற்று வரை அப்பலோவில் 2008ஆம் இலக்க அறையில் வைத்தியசாலை படுக்கையில் உறங்கியவர் இன்று முதல் மெரீனா கடற்கரையில் சந்தனபேழையில் தன் அரசியல் ஆசான் நினைவிடத்தின் அருகில் மீளாத் துயில் கொண்டு விட்டார். 

ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மறையாது என்பது நிச்சயம்.

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்.. கண்ணீரில் மூழ்கியது தமிழகம்

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல், 'புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.

அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார்.  ராஜாஜி மண்டபத்துக்கு வந்திருந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை அவரது தோழி சசிகலா பெற்றுக் கொண்டார். 

பிறகு, ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையைச் சுற்றி வந்து பால் தெளித்தார். ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

பின்னர், 12 வீர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல் நலக் குறைவால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணிய ளவில் காலமானார்.

முதல்வர் மறைவையடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதே போன்று, மாநில முதல்வர்கள் நாராயணசாமி, சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், சிவ்ராஜ் சிங் சௌஹான், பினராயி விஜயன், தேவேந்திர ஃபட்னவிஸ் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஏராளமான கலைத் துறையினரும், பல முக்கியப் பிரபலங்களும் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இலட்சக்கணக்கான தமிழக மக்கள் அலைகடல் என திரண்டு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

சரியாக மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இராணுவ பீரங்கி வாகனத்தில் தங்கப் பேழையில் வைக்கப்பட்டது.

ராஜாஜி அரங்கில் இருந்து மாலை 4.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நோக்கி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

மாலை சரியாக 6 மணியளவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இராணுவ மற்றும் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மக்களின் முதல்வருக்கு, இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.