மஸ்கெலிய பிரதேச சபையின் 2023 வரவு - செலவுத் திட்ட உருவாக்கத்தில் பொது மக்களின் பங்களிப்பு

Published By: Nanthini

02 Dec, 2022 | 04:44 PM
image

(அருள்கார்க்கி)

பிரதேச சபைகளின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் மஸ்கெலிய பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இப்பிரதேச சபையின் பாதீடு உருவாக்கத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. 

எனினும், தொடர்ச்சியான வேலைத்திட்டங்களால் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

இந்த பொதுமக்கள் பங்களிப்புக்களின் வகிபாகமும் பிரதேச சபையின் வேலைத்திட்டங்களும் பல்வேறு மட்ட கலந்துரையாடல்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

எனினும், பொதுமக்களின் பங்களிப்புக்களை உள்வாங்குவதும், பிரதேச சபை வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பொதுமக்களின் தெளிவும் இன்றும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதை பொதுமக்களின் கோரிக்கைகள் வாயிலாக அனுமானிக்க முடிகிறது.

பங்கேற்பு வரவு - செலவுத் திட்டம் என்பது தமது பணம் எவ்வாறு செலவிடப்படுகின்றது, எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தீர்மானிப்பதும், அதனை நடைமுறைக்கு கொண்டுவர பிரதேச சபையுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பில் செயற்படும் ஒரு விடயமாகும். 

மஸ்கெலிய பிரதேச சபையைப் பொறுத்தவரையில், ஆரம்ப காலங்களில் பாதீடு உருவாக்கத்தில் மிகவும் குறைந்த அளவிலான பங்களிப்பே இருந்தது. 

வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டை தொடர்ந்து அச்செயல்முறையின் ஆய்வு மற்றும் கண்காணிப்பிலும் பொதுமக்களுக்கு பெரும்பாலும் பங்குண்டு. 

எனவே, அதனை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதிலும் மக்கள் பங்கேற்பு அத்தியாவசியமாகிறது.

மஸ்கெலிய பிரதேச சபையானது ஒப்பீட்டளவில் நகரப் பிரதேசங்களை விடவும் பெருந்தோட்ட பகுதிகளை உள்ளடக்கிய 11 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும். 

சாமிமலை, நல்ல தண்ணீர் ஆகிய துணை நகரங்கள் மட்டுமே அதிகார பிரதேசத்தினுள் உள்ளன. 

மேலும், மஸ்கெலிய பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தினுள் 23 தோட்டங்களும், அத்தோட்டங்களுக்கு உட்பட்டு 79 பிரிவுகளும் காணப்படுகின்றன. 

எனவே, மக்கள் பங்கேற்பு பாதீடுகளை உருவாக்கும்போது இந்த அனைத்து குடியியல் பிரதேசங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இப்பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை பகுப்பாய்வு செய்ததில் வழமையை விடவும் அதிகமான மக்கள் அமைப்புக்கள் தங்கள் பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளதை அவதானிக்க முடிந்தது. 

அந்த வகையில் சீத்தகங்குல 320 B கிராமசேவகர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கமானது முனுகம சந்தியில் பஸ் தரிப்பிடம் அமைத்தல், பிரதேச சபை வாகனத் தரிப்பிடத்தில் யாத்திரிகர்களுக்கான இளைப்பாறும் இடம் அமைத்தல், எமில்டன் தோட்டத்துக்கு குடிநீர் திட்டம், அஞ்சல் அலுவலகம் அருகில் படிக்கட்டுக்கள் அமைத்தல் முதலான யோசனைகளை பாதீடு உருவாக்கத்துக்கு சமர்ப்பித்துள்ளது. இதற்கான உத்தேச தொகையாக 8,000,000 ரூபா தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பிரவுன்லோ 320 N கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த காந்தி சிரேஷ்ட பிரஜைகள் சங்கமானது விவசாயம், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, உள்ளிட்ட யோசனைகளை பாதீட்டுக்கு சமர்ப்பித்துள்ளது.

அதேபோல் இவ்விடயங்களுக்கான உத்தேச செலவீனம் 200,000 ரூபாவென அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. அவ்வமைப்பு வழங்கிய முன்மொழிவுகளில் தெளிவான புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்படாமையானது ஒரு குறைபாடாக அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மானெலு 320 K கிராமசேவகர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம சங்கமானது பாதை புனரமைப்பு மற்றும் வீதி விளக்குகள் ஆகிய விடயங்களுக்கான யோசனையை சமர்ப்பித்துள்ளது. 

அதேபோல் மஸ்கெலியா 320 A கிராமசேவகர் பிரிவானது பெரும்பாலான பெருந்தோட்டங்களையும் நகர பிரதேசங்களையும் உள்ளடக்கியதாகும். அப்பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மட்டுமே 2023 பாதீட்டுக்கு தனது யோசனையை சமர்ப்பித்துள்ளது. இப்பிரிவு சுமார் 4659 வரையிலான சனத்தொகையை கொண்ட ஒரு கிராம அலுவலர் பிரிவாகும். இங்கிருந்து ஒரு மக்கள் அமைப்பு மட்டுமே பாதீடு உருவாக்கத்துக்கு பங்களிப்பு செய்துள்ளமையானது, ஓர் ஆரோக்கியமான விடயமல்ல.

இச்சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளாவன: லிது வரவேற்பு மண்டபம் தொடக்கம் சாமிமலை பிரதான வீதி வரை வடிகான் அபிவிருத்தி, சமன் எலிய வித்தியாலயத்துக்கு செல்லும் பாதையில் கத்தோலிக்க தேவாலயம் தொடக்கம் கீழே செல்லும் குறுக்குப்பாதை அபிவிருத்தி என்ற இரு விடயங்களுக்காக மட்டுமே உள்ளது. இதற்கான உத்தேச தொகையாக தலா. 500,000 ரூபாவை அச்சங்கம் தீர்மானித்துள்ளது. 

இது இப்பிரதேச பரப்புக்கும், மக்கள் தொகைக்கும் ஏற்புடைய பங்களிப்பு அல்ல என்பது தெளிவாகின்றது.

மேலும், பிரவுன்லோ 320 N கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஐக்கிய கிராம அபிவிருத்தி சங்கமானது குறித்த பாதீட்டுக்கு முன்வைத்த யோசனையில் மஸ்கெலிய விகாரைக்கு அருகாமையில் செல்லும் பாதை அபிவிருத்தி மற்றும் வடிகால் அமைத்தலுக்காக 5,000,000 ரூபாவை திட்டமிட்டு யோசனையாக முன்வைத்துள்ளது. 

இந்த கிராமசேவகர் பிரிவானது சுமார் 6010 அளவிலான சனத்தொகையை கொண்டதாகும். இதில் பெரும்பான்மையாக பெருந்தோட்ட மக்களே உள்ளடங்குகின்றனர். இங்கு ஒரு மக்கள் அமைப்பு மட்டுமே தனது பங்களிப்பை செய்துள்ளது.

அதேபோல் பிரவுன்ஸ்விக் 320 M கிராமசேவகர் பிரிவிலிருந்து கிராம அபிவிருத்திச் சங்கமானது பல்வேறு விதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்ளடக்கி, தனது யோசனையை வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்வைத்துள்ளது. அவையாவன: 

வீதி விளக்குகள், நடைபாதை, குப்பைத் தொட்டிகள், அலுவலக தளபாடங்கள், பாதை புனரமைப்பு, மைதான புனரமைப்பு, சுயதொழிலுக்கான பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள், தொழில்சார் கல்வியூட்டல்கள், விழிப்புணர்வு கூட்டங்கள், புகை பரிசோதனை நிலையம் என்பன உள்ளடங்குகின்றன.

பிரவுன்ஸ்வீக் 320 M கிராமசேவகர் பிரிவானது மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வட்டாரங்களில் அதிகமான சனத்தொகையை கொண்டதாகும். இங்கு சுமார் 7691 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 7326 பேர் தமிழர்களாவதோடு, ஓர் அமைப்பு மட்டுமே இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாதீட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளமை ஒரு பாரிய குறைபாடாகும்.

மேலும், மறே 320 H பிரிவைச் சேர்ந்த இந்து இளைஞர் மன்றம், மவுசாகலை 320 I பிரிவைச் சேர்ந்த மவுசாகலை மக்கள் அபிவிருத்திச் சங்கம் ஆகியனவும் தனது பிரேரணைகளை பாதீடு உருவாக்கத்துக்கு சமர்ப்பித்துள்ளன. 

இவற்றின் பிரதான கோரிக்கைகளுக்கு சமாந்தரமானதாகவும், குறித்த கிராம அலுவலர் பிரிவுக்கு அத்தியாவசியமானதாகவும் உள்ளன.

மேலும், சீத்தகங்குல 320 O பிரிவைச் சேர்ந்த குறிஞ்சி மக்கள் அபிவிருத்தி சங்கமானது தனது பாதீடு பங்களிப்பாக முன்வைத்துள்ள கோரிக்கைகளின் பெறுமதியானது 38.5 கோடியாகும். 

மலசலகூடம், சிறுவர் பராமரிப்பு நிலையம், தகரம் மாற்றுதல், வணக்கஸ்தல அபிவிருத்தி, கைத்தொழில் ஆகிய பிரிவுகளுக்கு இவ்வாறான தொகை பங்கிடப்பட்டுள்ளது. இது சற்று அபத்தமான ஒரு முன்மொழிவாக அமைகின்றமை தெளிவாகின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக மஸ்கெலிய பிரதேச சபையின் கௌரவ செயலாளர் எஸ்.ராஜவீரன் அவர்களை அணுகி வினவியபோது அவர் இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

“நாம் கடந்த காலங்களை விடவும் சிறப்பான ஒரு வரவு - செலவுத் திட்டத்தை 2023ஆம் ஆண்டுக்கு உருவாக்கியுள்ளோம் என்று கருதுகின்றேன். Transparency International நிறுவனம் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய பாதீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக அமைப்பு, உள்ளடக்கம் என்பவற்றில் அதிக முன்னேற்றங்களை காணமுடியும்.

இந்த பாதீடு உருவாக்கத்துக்கு நாம் பல்வேறு மட்ட கலந்துரையாடல்களை மக்கள் அமைப்புக்களுடன் மேற்கொண்டோம். பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தினர், தனியார் துறையினர் உள்ளிட்ட துறையினருடன் மேற்கொண்ட தொடர் கலந்துரையாடல்கள் மூலம் பெற்றுக்கொண்ட பங்களிப்புக்களை அடிப்படையாக கொண்டு இம்முறை வரவு – செலவுத் திட்டம் உருவாங்கப்பட்டுள்ளது. பல கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து பொதுமக்களின் பங்கேற்பு கிடைக்காவிட்டாலும், ஒப்பீட்டளவில் முன்னரை விடவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இவ்விடயங்களை நோக்கும்போது பாதீடு உருவாக்கத்தில் மக்களின் பங்கேற்பு உள்வாங்கப்பட்டிருந்தாலும், அதனை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக, கவரவில, ஒல்டன், மொக்கா, ஸ்டேர்ஸ்பி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து எவ்வித மக்கள் அமைப்புக்களும் தனது பங்குபற்றலை மேற்கொள்ளவில்லை என்பது ஒரு குறைபாடாகவே உள்ளது.

மேலும், பிரேரணை முன்வைப்பில் மட்டுமல்லாமல், தொடர் கண்காணிப்பு, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களிலும் தொடர்ச்சியான மக்கள் பங்கேற்பை உறுதி செய்துகொள்வதற்கு பிரதேச சபையானது மூலோபாய திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது பங்கேற்பு ஆட்சிக்கும் வெளிப்படைத் தன்மையான நிர்வாகத்துக்கும் வலு சேர்க்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22