திரைப்படம் என்பது அதிகபட்சம் மூன்று மணித்தியால கால அவகாசத்தைக் கொண்டது. இதற்குள் ஒரு கதையை நேர்த்தியாக படைப்பாளியால் சொல்லிவிட இயலும்.
மூன்று மணித்தியாலங்களை கடந்து ஏறக்குறைய ஏழு மணித்தியால கால அவகாசம் உள்ள வலைதள தொடராக உருவாக்குவது என்பது படைப்பாளிகளுக்கு சற்று சவாலான பணி.
அதிலும் எட்டு அத்தியாயங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்தையும் தொய்வே இல்லாமல் விறுவிறுப்புடன் பார்வையாளர்களை கடைசி அத்தியாயம் வரை கடத்திக் கொண்டு போவது என்பது அசாதாரணமான படைப்பு பணி.
இத்தகைய நீண்ட கால அவகாசம் கொண்ட வலைதளத் தொடர் தமிழ் ரசிகர்களுக்கு புதிது. இதில் தங்களது கடின உழைப்பை வழங்கி 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரினை முதன் முதலாக தயாரித்து அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் 'விக்ரம் வேதா' புகழ் புஷ்கர் -காயத்ரி.
இந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அவர்களது தயாரிப்பில் தயாராகி இருக்கும் வலைதள தொடர் 'வதந்தி'. இதனை 'கொலைகாரன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார்.
இந்த தொடரில் ரூபி ( லைலா)யின் மகளான வெலோனி (புதுமுக நடிகை சஞ்சனா) ஆள் அரவமற்ற வனப்பகுதி ஒன்று சடலமாக கிடக்கிறார். காவல்துறைக்கு தகவல் சென்றவுடன் அவர்கள் வருகை தந்து, பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து, யார்? என விசாரிக்க தொடங்குகிறார்கள்.
அந்த பகுதியில் படப்பிடிப்பிற்காக வருகை தரும் படக்குழுவினர், பெண்ணின் சடலத்தை தோராயமாக பார்த்துவிட்டு இறந்தது எங்கள் படத்தின் கதாநாயகி என ஒரு தகவலை தெரிவிக்கிறார்கள். இது காட்சி ஊடகத்தின் மூலம் உடனடியாக பரவுகிறது. பிறகு அது 'வதந்தி' என தெரிய வருகிறது. அதாவது பொய் என தெரிய வருகிறது.
அதன் பிறகு இறந்து கிடந்த பெண் வெலோனி என்றும், அவள் கன்னியாகுமரியில் விடுதி ஒன்றினை நடத்தி வரும் ரூபியின் மகள் என்றும் தெரிய வருகிறது. அதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, இந்த வழக்கு குறித்த தகவல்களை கேட்டறிகிறார்.
அத்துடன் காவல்துறை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விவேக் ( எஸ். ஜே. சூர்யா) எனும் காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் தனிப்படையை அமைக்கிறார்.
அவர் இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு விசாரித்து உண்மையை கண்டறிந்தாரா? இல்லையா? என்பதும், உண்மையான கொலை குற்றவாளி யார்? என கண்டறிவதும் தான் இந்த நெடும் வலைதள தொடரின் கதை.
காவல்துறை விசாரணை, குற்ற சம்பவம் நடைபெற்றவுடன் அதற்கான காவல்துறை நடைமுறை, கிறிஸ்துவ மத பின்னணியிலான கதாபாத்திரங்கள், சமூக விரோதிகள், சட்டவிரோத செயலில் ஈடுபடும் குற்றவாளிகள், எதிர் நிலையான செய்திகளை வழங்கி, முன்னணி ஊடக நிறுவனம் எனும் அடையாளத்தை பெற விரும்பும் அச்சு ஊடக அதிபர், எழுத்தாளர், பாலியல் தொழிலாளி, மலை வளத்தை சட்ட விரோதமாக சுரண்டும் கும்பல்,.. இதற்கிடையே தந்தையை இழந்து தாயுடன் வசிக்கும் கதையின் நாயகி வெலோனி எனும் கதாபாத்திரம்.. அந்த கதாபாத்திரத்தின் கனவுகள், யதார்த்த வாழ்வியல் நடைமுறைகள்.. அவரைச் சுற்றி இயங்கும் நண்பர்கள்.. விசாரணை அதிகாரியான எஸ் ஜே சூர்யாவின் மனைவி, சக காவல்துறை அதிகாரிகள். என இருபதிற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இந்த நெடுந்தொடரை தொய்வில்லாமல் த்ரில்லர் ஜேனரில் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.
இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் முதல் வலைதள தொடர் இது. இதில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய வழக்கமான நடிப்பை தவிர்த்து, இயல்பாகவும் காவல்துறை அதிகாரிக்குரிய உடல் மொழியுடன் நன்றாக நடித்திருக்கிறார்.
வெலோனி என்னும் கதையின் மைய பாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா.. இயக்குநர் கற்றுக் கொடுத்த அளவில்.. அதனை உட்கரகித்த அளவில்... நடித்திருக்கிறார்.
எழுத்தாளராக நடித்திருக்கும் நாசர் தன்னுடைய வழக்கமான இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு மனதை கவர்கிறார். லைலா துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னா டார்க் ஹியூமர் டொயலாக்குகளை பேசி அதனையும் வட்டார வழக்கு மொழியில் பேசி புன்னகை பூக்க வைக்கிறார்.
கதை களம் கன்னியாகுமரி பகுதி என்பதால், அப்பகுதியில் வாழும் மக்களிடையே புழங்கும் வட்டார வழக்கு சில இடங்களில் இயற்கையாகவும், சில இடங்களில் செயற்கையாகவும் கையாளப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியில் கிறித்தவர்கள் அதிகம் என்பதால் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவே இருக்கிறார்கள்.
படத்தில் பெரும் பகுதி கிறிஸ்தவ மத பின்னணியையும் மத சடங்குகளையும் அழுத்தமாக பேசுவதால் படைப்பு சுதந்திரத்தை இயக்குநர், யதார்த்தம் எனும் போர்வையில், தன் மதம் சார்ந்த விடயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருப்பதாகவே தெரிகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சுவாரசியமான எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெற்றாலும்.. இறுதி அத்தியாயத்தில் வெலோனி எனும் இளம் பெண் படுகொலையின் பின்னணி தெரிய வரும்போது 'சப்'பென்று இருக்கிறது.
'உண்மை நடக்கும். பொய் பறக்கும்' என்ற வசனம் தலைப்பை நியாயப்படுத்தி இருந்தாலும், தொடரில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்கள் மீதும் சந்தேகத்தை எழ வைத்து, இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவரை குற்றவாளி என கை காட்டுவது சரி என்று ஒப்புக் கொண்டாலும், தயாரிப்பாளர்களான புஷ்கர்- காயத்ரியின் படைப்பு பங்களிப்புடன் வெளியான 'சுழல்' எனும் வலைதள தொடரில் இருந்தது போன்ற அதிர்வு.., இந்த நெடுந்தொடரில் 'இல்லை' என்று உறுதியாக கூறலாம்.
வதந்தி - பறக்காத பொய்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM