ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய கிழக்கு பணிப்பெண்களும் தலைநகர சிறுவர் தொழிலாளர்களும்

By Nanthini

01 Dec, 2022 | 02:33 PM
image

மானுக்கு பணிப்பெண்களாக சென்ற 12 பேரும் முகங்கொடுத்த அனுபவங்கள் பாரதூரமானவை. இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முறைப்படி பதிவு செய்யப்படாமல், தரகர்கள் ஊடாக சென்றதாலேயே இந்த நிலைமை என்று இப்போது நியாயம் கூறப்படுகின்றது.

மேலும், இவர்கள் சுற்றுலா விசா மூலம் அபுதாபிக்கு அனுப்பப்பட்டு, பின்னர், அங்கு ஒரு குழுவினரால் அவர்களின் ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அங்கிருந்து ஓமானுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். 

இதை ஒரு ஆட்கடத்தல் சம்பவமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த 12 பெண்களில் மலையக  பிரதேசங்களை சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர். 

பணிப்பெண்களாக சென்றவர்கள் இலங்கையின் எப்பிரதேசங்களை சேர்ந்தவர்களாயினும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரினது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும். ஏனென்றால், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களின் நிலைமைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற பெண்கள் பலர் சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து, உடம்புகளில் ஆணிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். சிலர் உயிரற்ற உடல்களாகத்தான் வீடு சேர்ந்தனர்.

ஒரு சிலர் கடும் சித்திரவதைகளினால் நிரந்தரமாக முடமான நிலையில் நாடு திரும்பினர்.

அவர்களுக்கு உரிய நிவாரணங்களை அப்போது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை.

அந்த பெண்களை அனுப்பிய தரகர்கள், முகவர் நிலையங்கள் குறித்து மேலோட்டமாக விசாரணைகள் நடத்திவிட்டு, கோப்புகளை மூடி வைத்துவிட்டனர், அதிகாரிகள்.

இப்போது இந்த ஓமான் பெண்களின் விவகாரம் பாராளுமன்றம் வரை சென்ற காரணத்தினால் பலர் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன், பெண்களை மீட்க விசேட குழுவும் ஓமானுக்கு பறந்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் ஓமானில் சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் பேச்சு நடத்தியுள்ளார்.

இது வரவேற்கத்தக்க விடயம் தான். ஆனாலும், பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் பிரமுகர் என்ற வகையில் ஜீவன் தொண்டமான், இந்த விவகாரத்தில் மலையக பெருந்தோட்ட சமூகம் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து சில விடயங்களை அறிய வேண்டியுள்ளது.

மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களை விட, அப்பகுதியிலிருந்து கொழும்பில் உள்ள வீடுகளுக்கு வேலைக்காக செல்வோரின் தொகை அதிகமாகும். 

அதிலும், இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்ற விடயம் அனைவரும் அறிந்த ஒன்று.

அத்தகைய பெண்களுக்கு கடந்த காலங்களில் நடந்த அட்டூழியங்கள் குறித்து நாடே அறியும். ஆனால், இதுவரையில் தலைநகரில் உள்ள செல்வந்தர்களின் வீடுகளில் பணிபுரிந்து, மர்மமாக உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவே இல்லை என்பது முக்கிய விடயம்.

ஒரு சம்பவம் நடந்துவிட்டால், ஒரு மாதம் வரை அது குறித்து பேசுவதும் அறிக்கை விடுவதுமாக செயற்படும் அரசியல் பிரமுகர்கள் பின்னர், தமது சகஜமான பணிகளை பார்க்க கிளம்பிவிடுவர்.

ஓமானுக்கு ஆட்கடத்தல் மூலமாக கொண்டு செல்லப்பட்ட மலையக பெண்களின் நிலை குறித்து கவலைப்படும் அதேவேளை இங்கு தரகர்கள் மூலம் தலைநகருக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுவர்களின் நிலைமைகள் குறித்தும் மலையக பிரதிநிதிகள் என்றாவது வாய் திறந்திருக்கின்றனரா? அல்லது இதை தடுப்பதற்கு ஒரு விசேட வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்றில் கதைத்திருக்கின்றார்களா?

இலங்கையில் தலைநகர் மற்றும் அதனை அண்டிய பெருநகரங்களில் உள்ள செல்வந்தர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச உயர் நிலை அதிகாரிகளின் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பவர்களில் மலையக பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவர்களும் அடங்குவர். இதை மலையக அரசியல்வாதிகளும் நன்கறிவர். ஆனால், அது குறித்து அவர்கள் பேசத் தயங்குவதற்கு காரணங்கள் உள்ளன. 

குறித்த சிறுவர்கள் அல்லது 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தலைநகர வீடுகளுக்கு பணிக்குச் செல்வதன் பின்னணியில் காரணமாக இருப்பது பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் வறுமையே ஆகும்.

இவ்வாறு தொழில் தேடிச் சென்ற பிள்ளைகளில் அதிகமானோர் பாடசாலைக் கல்வியை இடையில் விட்டுச்சென்றவர்களே. 

இந்த துயர நிலைமைக்கு யார் காரணம்? இதை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகள் என்ன செய்திருக்கின்றனர்? அல்லது அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

இப்படி பல கேள்விகளுக்கு அரசியல் பிரதிநிதிகள் பதில் கூற வேண்டிவரும் என்பதால் இந்த விடயத்தில் அவர்கள் மெளனமாக இருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியே சென்ற பெண்களின் மீதுள்ள அக்கறை போன்று எமது நாட்டுக்குள்ளேயே சீரழியும் சிறுவர்களின் நலன்கள் குறித்த அக்கறையையும் மலையக அரசியல் பிரமுகர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்