போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம்

By Nanthini

01 Dec, 2022 | 02:32 PM
image

(தேசியன்)

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக ஸ்திரமற்ற அரசாங்கமானது ஏனைய சீரழிவுகள் குறித்து எந்தவித அக்கறையுமின்றி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இன்று நாடெங்கிலும் தாராளமாக பாவனையில் உள்ள போதைப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த சம்பவங்களின் அதிகரிப்பு இதற்கு கட்டியம் கூறி நிற்கின்றது.

இன்று யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியாமல், அரசாங்கம் திணறி வருகின்ற வேளையில் மலையக நகர பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து சர்வ சாதாரணமாக இடம்பெற்று வரும் போதைப்பொருள் விற்பனைகளை இப்பிரதேசம் சார்ந்தவர்கள் கண்டும் காணாதது போலிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். குடா நாடு மற்றும் மலையக பிரதேசங்கள் தமிழர்களின் வாழ்விடங்களாக இருப்பதனால் தான் இந்த நிலைமையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நுவரெலியா மாவட்டம்

அண்மைக்காலமாக மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பாவனைகள் குறித்து பலராலும் பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளின் உயர்தர மாணவர்களை இலக்குவைத்து சிலரால் போதை மாத்திரைகள் மற்றும் மாவா போன்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இதையறிந்தும் தம்மால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளதாகவும் சில பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கைகளை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.

அதை விட குறித்த நகரங்களில் உள்ள வர்த்தகர்கள் சிலரே இப்பொருட்களை விநியோகிப்பதில் முன்னிற்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

சில பாடசாலைகளின் உயர்தர வகுப்பு பொறுப்பாசிரியர்கள் கூறும் விடயங்கள் பாரதூரமானவையாக உள்ளன. தமது வகுப்பின் ஒருசில மாணவர்களை தம்மால் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும், அது குறித்து பெற்றோர்களிடம் பேசினால் கூட அவர்கள் அதை அலட்சியம் செய்வதாகவும் கூறுகின்றனர்.

மருந்தகங்கள்

மலையக நகரங்களில் உள்ள சில மருந்தகங்களும் வலி நீக்கி மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க துணை போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதை நிரூபிக்கும் வகையில் அண்மையில் மலையகத்தின் பிரபலமான நகரமொன்றில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்தின் உரிமையாளர்  போதை மாத்திரைகளுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். 

இதற்கு முன்பாக அவர் மீது பல முறைப்பாடுகள் இருந்தும், அவர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்ட போதும் கைது செய்யப்படவில்லை. 

இம்முறை அவர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டபோதும், அபராதத்தை கட்டிவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார். 

இங்கு போதை மாத்திரைகள் என்பது தீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட மருத்துவ நிபுணர்களால் சிபாரிசு செய்யப்படும் வலி நிவாரணி மற்றும் ஓய்வெடுக்கும் வண்ணம் வழங்கப்படும் தூக்க மாத்திரைகளோடு தொடர்புடையதாகும். 

இவ்வகையான மாத்திரைகளை வைத்தியர்களின் மருந்துச் சீட்டின்றி மருந்தகங்கள் ஒருவருக்கு விநியோகிக்க முடியாது. ஆனால், சட்டத்தின் ஓட்டைகளை தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் இவ்வாறானவர்கள் அதிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்கின்றனர்.

குறித்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தாகவே கருதப்படும் பட்சத்தில், மருந்துச் சீட்டின்றி, அவற்றை விநியோகித்தமை மாத்திரமே இங்கு குற்றமாக நோக்கப்படுகின்றது. அக்குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஆயிரமோ இரண்டாயிரமோ அபராதத்தை செலுத்திவிட்டு அவர்கள் சுதந்திரமாக வெளியே வந்து, தமது வழக்கமான பணியை முன்னெடுக்கின்றனர்.

ஆனால், இந்த மாத்திரைகளுக்கு அடிமையான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் நிலைமை பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.  

மருந்தகங்கள் மாத்திரமின்றி, வேறு வியாபாரங்களை செய்யும் நபர்கள் பலரும் மலையகத்தின் எல்லா நகரங்களிலும் இந்த போதை மாத்திரைகளை மாணவர்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகையோரை அறிந்தும் கூட சில நகரங்களின் வர்த்தகர்கள் இதைப் பற்றி வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். 

மேலும், இவர்களுக்கு தமது கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ளதால், இதைப் பற்றி பேசுவதன் மூலம் தமது வருமானம் பாதிக்கப்படும் என்ற வருத்தம் மட்டுமே காணப்படுகிறது.

சில பாடசாலைகளில் வர்த்தகர்கள், சில அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் போதை மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் என்பதை  கல்லூரி நிர்வாகத்தினர் அறிந்தும், தமது பணிக்கு இடையூறு ஏற்பட்டுவிடும் என்பதற்காக கண்டுகொள்வதில்லை. 

கொட்டகலையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

மலையக நகரங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கும் அதேவேளை அந்நகரங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளோ, வர்த்தக சங்கங்களோ, பொலிஸ் நிலையங்களோ அது குறித்து அக்கறையின்றி இருக்க, கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் விரைவாக செயற்பட்டு விழிப்புணர்வு நிகழ்வொன்றை கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தனர்.

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் கடந்த நவம்பர் 20ஆம் திகதி இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நகர வர்த்தகர்கள், மதகுருமார்கள், வாகன சாரதிகள், கிராம சேவகர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்போது பாடசாலை அதிபர்கள் மற்றும்  ஆசிரியர்கள் வெளிப்படையாக கூறிய சில சம்பவங்கள் அங்கு கலந்துகொண்டிருந்தோரை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அத்துடன் மாணவர்களின் நடத்தைகள், பெற்றோர்களின் அலட்சியப்போக்கு குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

சில பெற்றோர்களிடம் மாணவர்களை பற்றி கேட்டால், அவர்கள் பாடசாலை நிர்வாகங்களிடமோ அல்லது வகுப்பாசிரியர்களிடமோ தர்க்கம் செய்வதாக கூறப்பட்டது.

எனினும், அந்த கலந்துரையாடலின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் அவதானிக்க வேண்டிய ஒன்றாகும். அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்  தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இந்த போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிக்கவும், சமூகத்தை பாதுகாக்கவும், அது தொடர்பாக ஆராய்வதற்கான குழுக்களை நியமிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்தார்.

மேலும் அவர், போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை பற்றி பொலிஸாருக்கு தகவல்களை வழங்க மக்கள் உதவி செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது உரையில் கோரிக்கையொன்றை முன்வைத்தார். 

அதேவேளை போதை மாத்திரைகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை கைதுசெய்வதோடு அவர்களை எதிர்காலத்தில் குறித்த நகரங்களில் எந்தவொரு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடவிடாமல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

ஏனைய நகர வர்த்தகர்கள் அக்கறை கொள்வார்களா?

கொட்டகலையில் இடம்பெற்றதைப் போன்று அதனை அண்டிய ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, மஸ்கெலியா மற்றும் தலவாக்கலை போன்ற உயர்தர பாடசாலைகள் அமைந்துள்ள நகரங்களைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகள் இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்குள்ள ஆன்மிக நிறுவனங்களின் சபை தலைவர்கள், உறுப்பினர்களோடு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால் மாத்திரமே போதைப் பொருள் தொடர்பான குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தலாம்.

ஏனென்றால், மாணவர்களை பொறுத்தவரை அவர்களின் பெற்றோர்கள் எல்லா தொழிற்றுறைகளிலும் இணைந்தவர்களாகவே உள்ளனர். தமது பிள்ளைகள் பாடசாலைகளில் படித்து முடித்துவிட்டார்கள் என்பதற்காக, இத்துறையில் உள்ளவர்களது எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

ஏதேனும் ஒரு வகையில் இந்த போதைப்பொருள் பாவனையானது நாளை எந்த ரூபத்திலும் யாருக்கும் ஆபத்தாக அமையலாம்.

அரசியல்வாதிகளின் பங்கு

இந்தப் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றில் பேசுவதற்கு அரசியல் பிரமுகர்கள் முன்வருவதில்லை. அவர்களின் பிள்ளைகள் மலையக நகர பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது அவர்களின் அலட்சியப்போக்குக்கு காரணமாக இருக்கலாம். அல்லது இவ்வாறான வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் எவ்வகையிலேனும் தொடர்பு இருக்கலாம். அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக கூட இருக்கலாம். 

எனினும், அவர்கள் வாக்களிக்கும் மக்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன் நெருங்கிய உறவுவினை கொண்டிருக்கின்றனர். ஆகவே, இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்கள் பொலிஸாரினூடாக அரசியல் பிரமுகர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 

தமது பிரதேசங்களில் தரிசு நிலங்கள் எங்கே இருக்கின்றன? அவற்றை எவ்வாறு வளைத்துப் போடலாம்? இப்படியாக சொத்துகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஆர்வமாக இருக்கும் அரசியல் பிரமுகர்கள் தமது கண் முன்னாலேயே சீரழிந்துகொண்டிருக்கும் மாணவர் சமூகத்தை சற்றே நேரம் ஒதுக்கி காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும், அரசியல்வாதிகளையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தால், இங்கு எந்த வேலையும் நடக்காது. ஆகவே, தமது பிள்ளைகளின் மீது அக்கறை கொண்டுள்ள பெற்றோர்களும் பாடசாலை சமூகங்களும் தான் இவ்விடயத்தில் கைகோர்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்