தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக அப்பலோ வைத்தியசாலையில்  சிகிச்சை பலனின்றி தனது 68ஆவது வயதில் காலமானதாக அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது.

இவருடைய இறப்பால் வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதோடு தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

அவரது உடல் சென்னை திருவல்லிகேணியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பலோ வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டது. 

இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் வைத்தியர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். 

தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்தனர். அது மாத்திரமல்லாமல் டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்களும் சென்னை அப்பலோவிற்கு சென்று சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் வைத்தியசாலையில் பிரிந்தது.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா  நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

முதலில் சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணியளவில் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என அறிவக்கப்பட்டது.

   ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது.

 

பின் நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றிய அறிக்கைகளை அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. 

வைத்தியர் சிவக்குமார் தலைமையில், கார்டியோலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்தனர். மேலும் அவருக்கு லண்டன் வைத்தியர்  ரிச்சர்டு பியால் சென்னைக்கு சென்று சிறப்பு சிகிச்சையளித்தார். 

டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்களும் முதல்வருக்கு சிகிச்சையளித்தனர் என பல்வேறு அறிக்கைகளை அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டது. 

இதில் லண்டன் வைத்தியர் ரிச்சர்ட் சென்னை சென்று சிகிச்சையளித்தது, நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம், எய்ம்ஸ் வைத்தியர்கள்   சிகிச்சையளித்தது ஆகியவை மிக முக்கியமானது. 

பின்னர் வைத்தியர்களின் தீவிர சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து லண்டன் வைத்தியர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் வைத்திய குழுவினர் திரும்பிச் சென்றனர். 

அதன் பின்னர், சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சென்னைக்கு சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அதிர்ச்சி அளித்த அப்பல்லோவின் 12-வது அறிக்கை 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை எதனையும் வெளியிடாமல் இருந்த நிலையில், 11ஆவது அறிக்கையை கடந்த நவம்பர் 21ஆம் திகதி வெளியிட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் வைத்தியர்களுடன் பேசி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கை அ.தி.மு.க-வினரிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் குழுவினர் சனிக்கிழமையன்று மீண்டும் சென்னை சென்றனர். 

அப்பலோ வைத்தியசாலைக்கு சென்ற டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பலோ வைத்திய குழுவினருடன் கலந்தாலோசித்தனர். 

அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகவும், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஞாயிற்றுக் கிழமை(4)  மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் 12-ஆவது அறிக்கையை இரவு வெளியிட்டது. இந்த அறிக்கையால் தமிழகத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மரணம் குறித்த அறிவிப்பு

விரைவில் குணமாகி அரசு பணிகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்   திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:

ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ஆம் திகதி பிறந்தார்.

ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.

10ஆம் தர தேர்வில் தமிழகத்திலல் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.

 1972ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது

தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.

 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.

  2001ஆம் ஆண்டு 2ஆவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

   2005ஆம் ஆண்டு 3வது முறையாக முதலமைச்சர் ஆனார்.

  2011ஆம் ஆண்டு 4வது முறையாக முதலமைச்சர் ஆனார்.

  2015ஆம் ஆண்டு 4ஆவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

அரை கம்பத்தில் அதிமுக கொடி

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தது அடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.