வனப்பகுதியில் புலிக்கு மிக அருகில் சென்று சர்ச்சையில் சிக்கிய நடிகை ரவீனா தாண்டன்

By Digital Desk 2

30 Nov, 2022 | 01:49 PM
image

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை ரவீனா தாண்டன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தி திரைத்துறையில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா தாண்டன். சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, நடிகை ரவீனா கடந்த 22ஆம் திகதி மத்தியபிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு நடிகை ரவீனா வனத்துறை வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்துள்ளார். அவருடன் சென்றவர்களும் புலியை புகைப்படம், வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை ரவீனா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கான பாதையில் இருந்து மாறி சென்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள இடத்திற்கு நடிகை ரவீனா சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், புலிக்கு மிகவும் அருகில் சென்று அதற்கு இடையூறு அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும்படி நடிகை ரவீனா பயணித்த வனத்துறைக்கு சொந்தமான வாகன சாரதி, அவருடன் பயணித்த வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் தான் பயணித்தது வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஜீப்பில் தான் என்றும் சுற்றுலா வழிதடத்தை விட்டு மாறி வேறு இடத்திற்கு எங்கும் செல்லவில்லை என்றும் ரவீனா விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right