மஞ்சள் வண்ண லொறியின் மகத்தான் சரித்திரம் பேசும்‘விஜயானந்த்’

By Digital Desk 5

30 Nov, 2022 | 11:50 AM
image

தென்னிந்தியாவின் முன்னணி தொழிலதிபரான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் திரைப்படம், ‘மஞ்சள் வண்ண லொறியின் மகத்தான் சரித்திரம் பேசும் படைப்பாக தயாராகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். 

‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம்‘விஜயானந்த்’. இதில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலதா பிரகலாத் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் நடிகர்கள் பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். 

சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

இதன் போது படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில், '' கன்னட திரை உலகில் தயாராகி இருக்கும் முதல் சுயசரிதை திரைப்படம். ஊக்கமளிக்கும் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் நிஜ கதாநாயகன் தொழிலதிபர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வர் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண பெண்மணியான என்மீது நம்பிக்கை வைத்து, இது போன்ற பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க வாய்ப்பளித்த வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஆனந்த்  சங்கேஸ்வருக்கும் நன்றி.

நான் இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவரது இயக்கத்தில் வெளியான ‘குரு’ திரைப்படத்தை பார்த்த பிறகு தான், சுயசரிதை திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. மேலும் மணிரத்னம், புட்டண்ணா கனகல் போன்ற இந்திய படைப்பாளிகளிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றிருக்கிறேன். 

இந்தத் திரைப்படம் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம். என்னுடைய இரண்டாவது  திரைப்படத்தை, சுயசரிதை போன்ற சவால் மிக்க படைப்பாக இயக்கியிருப்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். .

நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப  உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் திரைப்படமாக இந்த ‘விஜயானந்த்’ உருவாகி இருக்கிறது. குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாச பிணப்பை மையப்படுத்தி இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கும், அவர்களின் எதிர்கால கனவுத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரிடத்தில் எதிர்காலம் குறித்த கனவை காண வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத் தருகிறது.

‘விஜயானந்த் ரோட் லைன்ஸ்’ என்ற அவரது நிறுவனத்தின் பெயரில் இருக்கும் ‘விஜயானந்த்’தை இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ‘விஜய்’ என்றால் ‘வெற்றி’, ‘ஆனந்தம் என்றால் சந்தோஷம்’. படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதளவில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் இந்த திரைப்படம் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் 99 சதவீதம் இடம் பிடித்திருக்கிறது. ஒரு சதவீதம் படைப்பு சுதந்திரத்திற்காகவும், திரைப்படத்திற்கான வடிவமைப்பிற்காகவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளை சொல்லலாம்.'' என்றார்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ படத்தைப் போல், வெற்றிப் பெற்ற தொழிலதிபரின் சுயசரிதையைத் தழுவி தயாராகியிருக்கும்‘விஜயானந்த்’ திரைப்படம் டிசம்பர் 9 ஆம் திகதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. ‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’ போன்ற கன்னட படங்கள் அகில இந்திய அளவில் வெற்றிப் பெற்றதைப் போல் இந்த படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right