மீண்டும் நாட்டிய தாரகையாக நடிக்கும் பொலிவுட் நடிகை

By Digital Desk 5

30 Nov, 2022 | 11:49 AM
image

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சுயசரிதையை தழுவி தயாரான 'தலைவி' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்த பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மீண்டும் தமிழ் படத்தில் நாட்டிய தாரகை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'சந்திரமுகி'. சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இயக்கத்தில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2 'படத்தில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த ஜோதிகா வேடத்தில், அதன் இரண்டாம் பாகத்தில் யார் நடிக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

இந்நிலையில் அந்த வேடத்தில் நடிக்க பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை படத்தின் ஆடை வடிவமைப்பாளரான நீதா லுலியா, தன்னுடைய இணைய பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே 'தலைவி' படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடித்திருந்தார். அவர் தற்போது நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும் நாட்டிய தாரகையாக நடிக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

பி வாசு -ராகவா லோரன்ஸ் - ‌கங்கனா ரணாவத் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right