கட்டுகஸ்தோட்டை - கலுகலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து ‘ரெஜீ’ என்ற மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகத்தின் பேரில் அயல் வீட்டுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து திருடிய தங்க ஆபரணங்களை குறித்த பெண் அக்குரனை பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அடகு வைத்து பெறப்பட்ட பணத்தை மீட்டுள்ளனர். 

சந்தேக பெண் நேற்று மாலை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்டுகஸ்தோட்டை  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.