உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே குற்றச்சாட்டு

By Digital Desk 2

29 Nov, 2022 | 04:09 PM
image

(குமார்சுகுணா)

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது ஒரு மோசடி என சக போட்டியாளர் ஒருவர் கூறியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தில்லுமுல்லு செய்து இப்போட்டியில் பட்டம் வென்றதாக, அவரது சக போட்டியாளரும் மொடல்  அழகியுமான  லீலானி மெக்கோனி குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வெடித்துள்ள இந்த சர்ச்சையை பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000-இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் பங்கேற்று, உலக அழகியாக தேர்வாகி பட்டம் வென்றார். அதற்கு பிறகு தமிழில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து தமிழன் படத்தில்  கதாநாயகியாக  நடித்தன் மூலம் திரைத்துரைக்கு வந்தார்.  

பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்றஅவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ஹொலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார்.  இறுதியாக ஹொலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவிலேயே  வசித்து வருகிறார் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், தற்போது பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது மோசடியானது என்ற குற்றச்சாட்டை 2000-ஆம் ஆண்டில் அவருடன் உலக அழகிப்போட்டியில் பங்கேற்ற முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி முன்வைத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 2022 உலக அழகிப் போட்டியில் ஸ்பான்சரை முன்வைத்து சில முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 2000-ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறியது என்று லீலானி மெக்கோனி பேசிய காணொளி  ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2000-ஆம் ஆண்டிலும் இதே போல முறைகேடுகள் நடைபெற்றதாக அந்த ஆண்டில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி பகிரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் யூடியூப்பில் காணொளி  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியில், “2000-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் இதேபோன்ற நிலையை நான் சந்தித்தேன். ஆனால் அப்போது நான் அதைக் கடந்து சென்றுவிட்டேன். மிஸ் இந்தியா வென்ற பிரியங்காவுக்கு ஸ்பான்சராக இருந்த நிறுவனம் உலக அழகிப் போட்டிக்கும் ஸ்பான்சராக இருந்ததால் பிரியங்கா சோப்ராவால் எளிதாக வெற்றி பெற முடிந்தது.

மிஸ் இந்தியா போட்டியில் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு ஸ்பான்சர் செய்தது ஒரு பிரபல இந்திய தொலைக்காட்சி தான். உலக அழகி போட்டியிலும் ஸ்பான்சராக இதுவே இருந்தது. இவர்களால் பிரியங்கா சோப்ராவுக்கு பல சலுகைகள் கிடைத்தன.  பிகினி ஆடை சுற்றில் பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக போட்டி நடத்தும் நடுவர்களே விதிகளை மீறியுள்ளனர்.” என்று லீலானி மெக்கோனி குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், மற்றவர்களுக்கு பிரியங்கா சோப்ராவைப் போல உடை அணிய அனுமதி வழங்கப்படவில்லை எனவும், அவர் கூறியுள்ளார்.

அந்தப் போட்டியில் பிரியங்காவுக்கு நீச்சலுடையிலும் சேலையிலும் போஸ் கொடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில்  மற்றவர்களுக்கு அந்த உடைகள் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பிரியங்கா சோப்ராதான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தது.

மேலும் பிரியங்கா சோப்ரா ஒத்திகைக்கு கூட செல்லவில்லை என்றும், காலை உணவு பிரியங்கா சோப்ராவுக்கு மட்டும் அறைக்கே சென்று கொடுக்கப்பட்டது என்றும் லீலானி கூறியுள்ளார். 

 மேலும்,  பிரியங்கா சோப்ராவுக்கு மட்டும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், மற்ற போட்டியாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

போட்டி தனக்குச் சாதகமாக நடப்பது தெரிந்தும் பிரியங்கா சோப்ரா அதில் கலந்துகொண்டது தவறானது” என்று லீலானி  பிரியங்கா சோப்ரா மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலகளவில் பல விடயங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏற்படுகின்ற நிலையில் உலக அழகி போட்டியிலும் இது போன்று குற்றசாற்று எழுந்துள்ளது. அதுவ।ம் இந்தியாவை சேர்ந்த பிரியங்கா மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்