இன்றைய திகதியில் பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் மார்பகங்களில் கட்டி ஏற்பட்டு வலி வந்த பிறகே மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதனால் இதற்கு சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாத நிலை உருவாகிறது. இதைக்களைய தற்போது ஜெனிடிக் ஸ்கிரீனிங் என்ற பரிசோதனை அறிமுகமாகியிருக்கிறது. 

சிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, 30 வயதுக்கு மேல் திருமணம் அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது, மது குடிப்பது, புகைபிடித்தல், கொழுப்பு உணவு சாப்பிடுவது, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்றவை மார்பகப் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையில் மார்பில் சிறு கட்டியாகத் தென்படும். பிறகு தான் புண்ணாகும், வலிக்க ஆரம்பிக்கும். இந்த வலி வருவதற்கு ஓர் ஆண்டுகூட ஆகலாம். பெரும்பாலானவர்கள் வலி வந்த பிறகே மருத்துவரிடம் வருகிறார்கள். இது மிகவும் தவறு. பெண்கள் 20 வயதுக்கு மேல் மார்பகச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதுக்கு மேல் மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். 40 வயதுக்குப் பின்பு மாமோகிராம் பரிசோதனையை 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது.

மார்பகத்தில் கட்டி ஒரு செ.மீ.க்கு குறைவாக இருக்கும் நிலையில் மாமோகிராம் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். இப்படிப்பட்டவர்களுக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகள் தேவைப்படாது. இப்போதெல்லாம் கட்டியை மட்டும் அகற்றும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.அதேநேரம் எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய் என்று கருதிப் பயந்துவிடவும் தேவையில்லை. பைப்ரோ அடினோமா (FIBRE ADENOMA) போன்ற கொழுப்புக்கட்டிகளும் வரலாம். எது வந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம். கட்டி வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு வரவேண்டுமா? என்று கேட்டால், அதையும் தாண்டிய நவீன பரிசோதனைகள் தற்போது வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ‘ஜெனிடிக் ஸ்கிரீனிங்’. 

இதன் போது மரபணு மாற்றம் காரணமாகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பற்றி முன்கூட்டியே கண்டறியும் சோதனையான இதற்கு, மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறுவது அவசியம்.

டொக்டர் P. குகன்,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்