மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ் ஜெயராஜ்

By Digital Desk 5

29 Nov, 2022 | 11:49 AM
image

தமிழ் திரையுலகத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உலக அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இசை ரசிகர்களை நேரில் சந்தித்து, மேடை இசை நிகழ்ச்சியை நடத்துவதில் பெருவிருப்பம் கொண்டவர்கள். 

இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் என முன்னணி இசை கலைஞர்கள் தங்களது இசைக்குழுவுடன் உலகின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தன் இசைக்குழுவுடன் மலேசியா நாட்டில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார். 

இதற்கான ஒருங்கிணைப்பை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் எனும் மலேஷிய நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இதற்கு முன் 'யுவன் 25' எனும் இசை நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் கொண்டது.

இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், '' 'யுவன் 25' எனும் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று மாலை 7 மணி அளவில் மலேசியாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 'ஹார்ட் ஆஃப் ஹாரிஸ்' எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறோம். 

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையிசையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் ஹாரிஸ் ஜெயராஜுடன் பங்கு பற்றுகிறார்கள்'' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. ஆ முருகதாஸ், மறைந்த இயக்குநர் கே வி. ஆனந்த் ஆகியோரின் படங்களுக்கு அதிகளவில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் அண்மையில் ‘தி லெஜண்ட்’ எனும் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதனிடையே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு முன் 2011 ஆம் ஆண்டில் சென்னை, கோயம்புத்தூர், டுபாய் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் என்பதும், பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right