பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவராக நியமியுங்கள் - சிறிதரன் 

By Vishnu

28 Nov, 2022 | 09:07 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் எவரும் ஒப்படைக்கப்படவில்லை என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த குறிப்பிட்டுள்ளமை பொறுப்பற்றதாகும். 

இவ்வாறனவர்கள் தான் இந்த நாட்டுக்கு வினையாக உள்ளார்கள். பௌத்த அற கொள்கையை பேணும் சிங்களவர்கள் நாட்டில் உள்ளார்கள். அவர்களை காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவராக நியமியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்துஇ வெளிவிவகார மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்கள் மீதான  விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு பாரிய தடைகள் காணப்படாத போது ஒருசில பகுதியில் படையினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். 

யுத்ததில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர அவர்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாத ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட இளம் சிங்கள சகோதரர்களுக்கும் இந்த உயரிய சபை ஊடாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இனங்களுக்கிடையிலான புரிதல் கட்டம் கட்டமாக வளர்ச்சியடைந்து செல்கின்றமை வரவேற்கத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய்,கொடிகாமம், எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லம்,வவுனியா மாவட்டத்தில் ஈச்சன் குளம் துயிலும் இல்லம்,முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை, ஆலன்குளம் துயிலும் இல்லம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் துயிலும் இல்லம் இன்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

இந்த துயில் இல்லங்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும். இது இந்த நாட்டின் நல்லிணக்கத்தின் அடித்தளமாக அமையும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

இந்த மாற்றங்கள் தான் நாட்டின் உண்மையான சமாதானத்தை உறுதிப்படுத்தும்.சர்வதேசத்தின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் நாடு என் ற ரீதியில் தனித்துச் செயற்பட முடியாது.

யுத்த காலத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதை போன்று உண்மையான இன நல்லிணக்கத்திற்கான சர்வதேச அணுகுமுறைகளை தற்போது பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரச சேவையாளர்களுக்கு நாணயத்தை அச்சிட்டு சம்பளம் வழங்கிக் கொண்டு வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த திணறிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திடம் அபிவிருத்தி பற்றி பேசுவது பயனற்றது. நாட்டை சீராக கட்டமைப்பது அவசியமாகும் அதற்கு தமிழ் மக்கள் தயாராக உள்ளார்கள்.வரலாற்று ரீதியில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் ஐம்பதற்கு ஐம்பது அதிகாரம் கோரப்பட்டது,தந்தை செல்வா ஒப்பந்தம்,டட்லி செல்வா ஒப்பந்தம், அனைத்து கட்சி தலைவர் குழு,சந்திரிகா தீர்வு திட்டம். ரணில் -பிரபா ஒப்பந்தம்,பிற்பட்ட கால ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கட்டம் கட்டமாக முன்னேற்றடையும் போதும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்படவில்லை.

தமிழ் மக்களின் காணி உரிமை இன்றும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளன. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பல தமிழர்கள் காணாமலாக்கப்பட்டார்கள். 

பாலகுமாரனும் அவரது மகள் சூரிய தேவனும் இராணுவத்திடம் வந்ததை ஊடகங்கள் வெளியிட்டன ஆனால் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களுக்கு நேர்ந்தது என்ன என்பது மறைக்கப்பட்டுள்ளது, இதுவரை நீதி கிடைக்கவில்லை. இராணுவத்தினரிடம் ஒப்படைத்த தமது உறவுகளை கேட்டு இன்றும் எமது உறவுகள் வீதியில் போராடுகிறார்கள்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதாக 2010 ஆம் ஆண்டு நல்லிணக்க ஆணைக்குழு என்பதொன்று உருவாக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்பதை பொலிஸாரும்,புலனாய்வு பிரிவினரும் தடுத்தார்கள்.பல சவால்களுக்கு மத்தியில் மக்கள் சாட்சியமளித்தார்கள்.

1 இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமலாக்கப்பட்டுள்ளதுடன்,கொல்லப்பட்டுள்ளார்கள் என காலஞ்சென்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை 142 அறிக்கையை ஆணைக்குழுவிடம் கையளித்தார். அவர் இன்று உயிருடன் இல்லை,ஆனால் அவர் சமர்ப்பித்த அறிக்கை பெறுமதியானது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையன் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த யஸ்மீன் சூக்கா தலைமையிலான குழுவினர் முள்ளிவாய்கால் பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்டையில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நிலைமாறு நீதி மற்றும் போர் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டது.முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதாகவும், காணாமலாக்கபட்டோர் அலுவலகத்தை ஸ்தாபித்து அதனூடாக தீர்வு வழங்குவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியது.

வலிந்து காணாமலாக்கபட்டோரின் உறவுகள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை. நம்பிக்கை இல்லை,நீதி கிடைக்காது என பாதிக்கப்பட்ட உறவுகள் தெளிவாக குறிப்பிட்டார்கள். ஆனால் இன்றும் காணாமலாக்கட்டோர் காணாமல் அலுவலகத்தின் செயற்பாடுகள் இழுபறி நிலையில் தான் காணப்படுகின்றன.

இவ்வாறான பின்னணியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த நாட்டில் இனபடுகொலை என்பதொன்று இடம்பெறவில்லை, படையினரிடம் கையளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கவும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களின் அறிக்கைளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.

அறிவுபூர்வமாக சிந்தித்து காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும்.இராணுவத்தினடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் சர்வதேசம் பல ஆவணபடங்களை வெளியிட்டுள்ளன.ஆதாரம் இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது,

உயிருக்கு விலை பேசுவதை விடுத்து என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள். ஆகவே நீதி கிடைப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வாருங்கள் 13 வருடங்களாக தமது உறவுக்காக போராடிய 190 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

தமது பிள்ளைகள் என்றாவது வருவார்கள் என காத்துக் கொண்டிருக்கும் தாய்,தந்தையின் மன குமுறல்களையும், ஏக்கங்களையும் சற்று மனிதாபிமானத்துடன் சிந்தித்து பாருங்கள். காணாமல் போன தமது பிள்ளைகளின் வருகைக்காக பல தாய், தந்தையர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள், உண்மை பிரச்சினைக்கு தீர்வு இல்லை, இதுவே இந்த நாட்டின் அவலத்துக்கு பிரதான காரணம்

நாங்கள் இவ்விடயத்தை குறிப்பிட்டால் அதனை ஒரு தரப்பினர் இனவாதமாக பார்க்கிறார்கள். புரையோடிபோயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அதிக கவனம் செலுத்துங்கள். தீர்வுக்கான வழி குறித்து அவதானம் செலுத்துங்கள்.

தற்போதைய நிலைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு மேலும் அதள பாதாளத்துக்கு செல்லும்.நாட்டு மக்களுக்கு பொய்யுரைக்க வேண்டாம்.கட்டுலந்த போன்றோரை முதலில் நீக்கி, மனிதாபிமானத்துடன் செயற்படும் தரப்பினரை நிpயமிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்த...

2023-02-08 13:11:01
news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு...

2023-02-08 12:20:07
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப்...

2023-02-08 12:16:51
news-image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை...

2023-02-08 12:16:25
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50