அமெரிக்க ஓக்லான்ட் பிராந்தியத்திலுள்ள களஞ்சியசாலையில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 11:30 மணிக்கு தீ ஏற்பட்ட வேளை அந்தக் களஞ்சியசாலையில் 50 முதல் 100 வரையானோர் இருந்ததாக பிராந்திய தலைமை தீயணைப்பு உத்தியோகத்தரான தெரேஸா டெலோச் றீட் தெரிவிக்கிறார். 

குறிப்பிட்ட கட்டடத்தில் தீ அணைப்பு உபகரணங்கள் எதுவும் இருக்கவில்லை என்பதுடன் தீ ஏற்பட்ட வேளை அது தொடர்பில் எச்சரிக்கை செய்யும் ஒலியும் எழுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

அந்தப் பண்டகசாலையில் தளபாடங்கள் நிறைந்த ஓவியர்களின் கலைக்கூடங்கள், ஓவிய மாதிரிகள் மற்றும் ஏனைய பொருட்கள் குவந்திருந்தமையால் தீயணைப்புப் படைவீரர்கள் தீயை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த பண்டகசாலையின் இரண்டாம் மாடியில் களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற நிலையில் அந்த மாடியிலிருந்து வெளியேறுவதற்கு மரத்தாலான படிக்கட்டுகள் மட்டுமே இருந்தாக தீயணைப்புப் படைவீரர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் 'ஓக்லாண்ட்டின் பிசாசுக் கப்பல்' என அழைக்கப்படும் அந்தக் கட்டடம் கட்டட நிர்மாண விதிகளுக்கு அமையவா நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேற்படி கட்டடம் அனுமதி பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே நகர சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் அது தொடர்பில் அந்த சபை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.