உணரப்பட வேண்டிய பெறுமதி

By Digital Desk 2

28 Nov, 2022 | 03:05 PM
image

(ஆர்.ராம்)

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் வல்லாதிக்க நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் உருவான ஜி-20 கூட்டமைப்பின் 17ஆவது மாநாடு இந்தோனேஷியாவின் பாலித்தீவின் படுங் ரீஜென்சியில் உள்ள நுசா துவாவின் அபூர்வா கெம்பின்ஸ்கி (Badung Regency, Nusa Dua, Apurva Kempinski Star Hotel) நட்சத்திர விடுதியில் கடந்த 15ஆம் 16ஆம் திகதிகளில் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. 

இந்த மாநாட்டின்போது, ஜி-20கூட்டிலிருந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாhடிமிர் புட்டீனை நீக்க வேண்டும் என்பது பற்றி வாதப்பிரதிவாதங்கள், கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும் இடையிலான உரையாடல் காணொளி கசிந்தமையால் ஏற்பட்ட இருதரப்பு முரண்பாடுகள், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளமை உள்ளிட்டவை முக்கிய விடயங்களாக பதிவாகியுள்ளன.

ஆனால் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னைய தினத்தில்  உலகத்தலைவர்கள் 20பேரும் ஒன்றுகூடி, ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரும் செய்தியை தந்திருக்கின்றார்கள். குறித்த தினமன்று, இந்தோனேஷியாவின் மிக முக்கியமான வனங்களில் ஒன்றான பாலியில் உள்ள, தமன் ஹுதன் ரய நுகுரா ராயில் (The Taman utan Raya Ngurah Rai forest) 'ஜி-20' என்ற வடித்தில் கண்டல் தாவரங்களை நாட்டியுள்ளனர். 

இந்தச் செயற்பாடு, உலகத்தின் கவனத்தினை தம்வசம் ஈர்த்துக்கொள்வதற்காகவோ, அல்லது சம்பிரதாயமாக மாநாடுகளின் போது நடைபெறும் நினைவுக்கான மர நடுகையோ அல்ல. அது, உலகவாழ் அனைத்து ஜீவராசிகளினது எதிர்காலத்தினை மையப்படுத்திய விழிப்புணர்வுச் செயற்பாடாகும். 

அதாவது, முழு, உலகமும் 'காலநிலை மாற்றம்' என்ற பொதுச்சவாலுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் அச்சாவாலை எதிர்கொண்டு, நிலைபேறான வளர்ச்சியை அதிகரிக்கரிப்பதற்கு இயற்கையாகவே உள்ள கண்டல் தாவரங்களின் வகிபாகத்தினை ஆணித்தனமாக இடித்துரைப்பதற்காகவே ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கண்டல் தாவரங்களை நாட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இவ்வாறிருக்கையில், இலங்கையில் காலநிலைமாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அண்மைக்காலமாக பிரதான மேடைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதியுச்ச அதிஷ்டத்தில் ஆட்சிப்பொறுப்பைக் கையில் வைத்துள்ள, ரணில் விக்கிரமசிங்க கூட காலநிலைமாற்றம் என்ற விடயத்தினை கையாள்வதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிரேஷ்ட ஆலோசகர்களை (ருவான் விஜயவர்த்தன மற்றும் எரிக் சொல்ஹெய்ம்) நியமிக்கும் அளவிற்கு விடயம் முக்கியமானதாகி விட்டது. 

இருப்பினும், காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தவல்ல, வகிபாகச் சக்தியைக் கண்டல் தாவரங்கள் கொண்டிருக்கின்றன என்பது சாதாரண மக்களால் இன்னமும் போதுமான அளவில் அறியப்படாத நிலைமையே நீடிக்கின்றது.

இதன்விளைவால்,  சமையல் எரிவாயுக்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள தற்போதைய நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் சாதாரண பொதுமக்கள் தமது விறக்குத்தேவையை பூர்த்தி செய்வதற்காக கண்டல் தாவரங்களில் தாராளமாகவே கைவைக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

அத்துடன், பிரதான நகரங்களில் விறகுக்கு ஏற்பட்டுள்ள கேள்வி அதிகரிப்பால் நாளாந்த கூலித்தொழிலாளர்கள் விறகு விற்பனையாளர்களாக மாறியுள்ளனர். இதனால் அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் கண்டல் தாவரங்களே கைகொடுகின்றது என்பது களவிஜயத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது.  

இதேநேரம், “குழை வைத்து மீன்பிடித்தல், கணவாய் பிடித்தல் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பல்வேறு செயற்பாடுகளால் வடக்கிலும், கிழக்கிலும் கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக” யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி.சூசை ஆனந்தன் தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, “போர்க்காலத்திலும், சுனாமியின்போதும் வெகுவாக கண்டல் தாவரங்கள் அழிந்த நிலையில் தற்போது இறால் பண்ணை செய்கை, உப்பளச் செயற்பாடு, சுற்றுலா விடுதிகள் அமைத்தல், தொடர்மாடி வீடுகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட கடற்கரையோர இதர கட்டட நிர்மாணங்கள், விவசாய நிலங்களாக மாற்றப்படுதல், நகராக்கம், வீதி விஸ்தரிப்பு, அரச காணிகளை சுவீகரித்து சட்டவிரோத விற்பனை செய்தல், ஆகியவற்றால் கிழக்குமாகாணம் உட்பட ஏனைய பகுதிகளிலும் கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுகிறது”என்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தரும், தாவரவியல் ஓய்வுநிலைப் பேராசிரியருமான தங்கமுத்து ஜெயசிங்கம் தெரிவிக்கின்றார்.

உலகில் காணப்படும் மொத்த கண்டற்பரப்பின் 0.1 சதவீதமான கண்டல் தாவரங்கள் மாத்திரமே இலங்கையில் காணப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 112 நாடுகளில் கண்டல் காடுகள் காணப்படுவதோடு இக்கண்டற் காடுகள் உலகின் மொத்த நிலப்பரப்பில் 18 மில்லியன் ஹெக்டேயர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. 

இலங்கையைப் பொறுத்தவரையில், கண்டல் தாவரங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார் ஆகிய 14 கரையோர மாவட்டங்களிலே 19,758ஹெக்டெயர் அளவில் வியாபித்துள்ளன என்று வானப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவை உவர்நீருடன் சேறு கலந்த அமிலத்தன்மையுடனான சதுப்பு நிலப் பிரதேசங்களில் வேறு எந்தத் தாவர இனங்களும் வளர முடியாத சூழலில் சூழற்காரணிகளின் தாக்கங்களை எதிர்கொள்ளக் கூடியவாறான விசேட இசைவாக்கங்களைப் பெற்று அடர்ந்து பசுமையாக செழித்து வளர்ந்து காணப்படும் அதிசயத் தாவர இனங்களாவும் உள்ளன.

இவை மரங்களாகவும், செடிகளாகவும் மற்றும் ஒரு வித்திலைத் தாவரங்களாகவும் இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுவதோடு ஏறத்தாழ 40 இனங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.   அதேநேரம், நாட்;டில் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76சதவீதமான கண்டல் காடுகள் அழிவடைந்துள்ளதோடு, கலா ஓயா கண்டல் தொகுதி தான் மிகவும் குறைந்த பாதிப்புக்குள்ளானதாக காணப்படுகின்றது.  

இந்நிலையில், “கண்டல் தாவரங்கள் வாழ்வுக்கும், தாழ்வுக்கும் இடையில் இருப்பதோடு, உலகலாவிய உயிர் ஆதரவு அமைப்பின் முக்கியமான அம்சமாகவும், சமூக பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் காணப்படுகிறன” என்று தாவரவியல் ஓய்வுநிலைப் பேராசிரியருமான தங்கமுத்து ஜெயசிங்கம் கூறுகின்றார்.

அந்தவகையில் “உணவு மற்றும் உபகரண உற்பத்திகள், வெட்டப்பட்ட மரங்க் மீன்களின் பாதுகாப்பிடமாக தொழிற்படல், தளபாட மற்றும் வீட்டுப்பாவனைப் பொருட்கள் உற்பத்தி, விறகு, பசளை, கால்நடைத்தீவன உற்பத்தி, மருந்துப் பொருட்கள் உற்பத்தி, கரையோர மீன்பிடிக்கு உதவுதல், உணவுச்சங்கிலிச் செயற்பாட்டுக்கு உதவுதல் ஸ்ரீ கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்தல், இயற்கைச் சமனிலையைப் பேணுதல், கடலின் ஏனைய வளங்களைப் பாதுகாத்தல், நீரைத் தூய்மையாக்கும் செயற்பாடுகள், பறவைகளின் புகலிடமாக செயற்படல், மண் அரிப்பை தடுத்தல், தரைக்கீழ் நன்நீரைப் பேணுதல்” என்றவாறு அதன் நன்மைகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லமுடியுமெனவும் அவர் குறிப்பிடுகின்றார். 

குறிப்பாக, “கண்டல் சூழல் தொகுதியானது, இளங்கடல் குஞ்சு மீன்கள் வளரும், உணவளிக்கும், எதிரிகளிடமிருந்து மறைந்திருப்பதற்கான இடமாகவும் விளங்குகிறது' என்று குறிப்பிடும் அவர், 'நீரில் விழுந்து அழுகும் போசனை மிகுந்த தாவரப்பாகங்கள் அலை அடிப்பினால் நுண்ணங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு இந்தப் போசனைப் பதார்த்தங்கள் அழுகளுக்கு உட்பட்டு அழுகள் வளரி உணவுச் சங்கிலியின் முதல் கொழுவியாகச் செயற்பட்டு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெரிய மீன்களை போசிக்க உதவுகின்றது” என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

“ஆற்றுமுகங்கள் கழிமுகங்கள் வாவிகளின் கரைகளைப் பாதுகாப்பதுடன் அடையல்களை வேரில் பிடித்து வைத்திருப்பதனால் வாவிகளையும் முருகைகற்கல் பாறைகளையும் கடலின் புற்படுக்கை என்பவற்றையும் அடையல்கள் சேராமல் கண்டல்கள் பாதுகாக்கின்றது”என்று குறிப்பிடும் அவர், “கரியமில வாயுவை உள்ளீர்க்கும் தன்மை கொண்டமையால் வளிமண்டலத்தில் உள்ள அவ்வாயுவின் அளவைக் குறைப்பதிலும் அவ்வாயுவின் சூழல் தாக்கங்களை குறைப்பதிலும் பெரும்பங்காற்றுவதானது, காலநிலை மாற்றத்தின் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு பக்கத்துணையாக இருக்கின்றது” என்றும் பேராசிரியர்.தங்கமுத்து ஜெயசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, “புற்றுநோயை குணப்படுத்தவல்ல மருத்துவக்கூறுக்களை கண்டல்கள் கொண்டிருப்பது கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவை, உப்பளங்கள், பண்ணைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றால் ஆபத்துக்களை எதிர்நோக்கி இருக்கின்றன” என்கிறார் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதியும், தாவரவியல் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் கண்டல் தொகுதிகளின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில், “இலங்கையிலுள்ள கண்டல் சூழல் தொகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நிலைபேறான பயன்பாட்டிற்கான தேசியக் கொள்கை' தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் அவர், அண்மைய நாட்களில், கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கான வழிகாட்டியொன்று தாயரிக்கப்பட்டு அமுலாக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறுகின்றார்.

அத்துடன், “தேசிய கொள்கைச் சுற்றுச் சூழலுக்கான தேசிய பொறுப்புடைமையின் ஒரு பகுதியாக உள்ளதோடு அரசியலமைப்பின் 27ஆம் பிரிவின் துணைப்பிரிவு 14இல் எடுத்துக்கூறப்பட்டுள்ளது' என்றும் குறிப்பிடுகின்ற அவர், அரசாங்கத்தின், இவ்விதமான செயற்பாடுகளால் கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில், கண்டல்தாவரங்கள் மோசமாக சேதங்களுக்கு உள்ளாகும் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுகின்றது” என்றும் கூறுகின்றார்.

எனினும், “கண்டல் சூழல் தொகுதிகளை 'ஒப்பிட முடியாத' பெறுமதியுடைய அலகாக அங்கீகரிப்பதனை உறுதி செய்தற்காக பொதுமக்;கள் மத்தியிலான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை போதுமானதாக காணப்படாமை, கண்டல் தாவரங்களின் அழிவை பூச்சிய நிலையில் வைத்திருபதில் பெரும் சவாலாக இருக்கின்றது” என்று கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் சுட்டிக்காட்டுகிறார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்