உலக நீதி சீர்குலைந்த நாள் : 29 நவம்பர் 1947 இல் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது

By Nanthini

28 Nov, 2022 | 01:21 PM
image

(லத்தீப் பாரூக்)

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்போது இஸ்ரேலாக மாற்றப்பட்டிருக்கும் பலஸ்தீனம், துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் கீழிருந்த பிரதேசமாகும். 

1896இல் அங்கு வாழ்ந்த மக்களில் 95 சதவீதமானவர்கள் அரேபியர்களாக இருந்தனர். இந்த பிரதேச காணிகளில் 90 சதவீதமானவை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

1987இல் சுவிற்ஸர்லாந்தின் பேசில் நகரில் இடம்பெற்ற உலகின் முதலாவது சியோனிஸ யூத மாநாட்டில் பலஸ்தீனத்தில் யூத இராஜ்ஜியத்தை உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1907இல் லண்டனில் இடம்பெற்ற காலனித்துவ மாநாட்டில் பிரித்தானியா குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய விரோதப் போக்கு அணியை உருவாக்கியது. 

மத்திய கிழக்கில் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தும் பொறுப்பு அந்த அணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பொதுவான சதித்திட்டம் தான் பிரித்தானியாவையும் சியோனிஸ யூத சக்திகளையும் ஓரணியின் கீழ் கொண்டுவந்தது. இவை ஒன்றாக இணைந்து தான் முதலாவது உலக மகா யுத்தத்தின்போது துருக்கிப் பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தன. 

அதன் பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி 1917இல் பலஸ்தீன பிராந்தியம் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 

பலஸ்தீனர்களை தமது சொந்த தாயக பூமியில் இருந்து விரட்டியடித்துவிட்டு நாடோடிகளாக திரிந்துகொண்டிருந்த யூதர்களை உலக சட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்து மீண்டும் பலஸ்தீன பூமியில் குடியமர்த்த வழியமைத்தது.

எதிர்பார்த்தபடி நிராயுதபாணிகளான பலஸ்தீன மக்கள் இதை எதிர்த்தனர். ஆனால், யூதர்கள் மிகவும் திட்டமிட்டபடி ஹகானா, ஸ்டேர்ன், இர்குன், ஸ்வாய்லுமி ஆகிய பெயர்களைக் கொண்ட பயங்கரவாத குழுக்களை நிறுவி பலஸ்தீனர்களை நசுக்கினர்.

மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் போன்றவர்கள் இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கினர். பலஸ்தீன கிராமங்களை ஒவ்வொன்றாக சூறையாடி, அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களை வயது, பால் வித்தியாசங்கள் எதுவுமின்றி வெறித்தனமாக வேட்டையாடினர். 

அச்சத்துக்குள்ளான பலஸ்தீனர்கள் வேறு வழியின்றி, அகதி முகாம்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். அவர்களுள் பலர் இன்னும் அண்டை நாடுகளில் அந்த அகதி முகாம்களில் தான் மிக மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

பின்னர், போதியளவு யூதர்கள் அந்தப் பகுதிக்குள் இறக்குமதி செய்யப்பட்டதும் ஐ.நா மேற்பார்வையில் பலஸ்தீனம் துண்டாடப்பட்டது. 

1949 நவம்பர் 29இல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரோமனால் அவரது உயர் மட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் மீறி அச்சுறுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தை துண்டாடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடோடிகளாக பரவிக் கிடந்த யூதர்கள் அங்கு அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டனர். 

இந்த முன்மொழியப்பட்ட யூத நாட்டிலும் கூட அன்றைய நிலையில் அரபு மக்கள் தான் அங்கு பெரும்பான்மையாக இருந்தனர். 1,008,900ஆக இருந்த மொத்த சனத்தொகையில் 509,780 பேர் அரபிகளாகவும், 499,020 பேர் யூதர்களாகவும் காணப்பட்டனர்.

1948 மே 14இல் ஜெருஸலேமில் இருந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அங்கிருந்து வெளியேறினார். அதற்கு அடுத்த நாள் இஸ்ரேல் என்ற நாட்டை பிரகடனம் செய்ய வசதியாக அவர் பிரித்தானியா நோக்கி பயணமானார். ஆனால், இஸ்ரேல் 1948 மே 15 வரை காத்திருக்கவில்லை. பிரித்தானிய பிரதிநிதி அங்கிருந்து புறப்பட்ட கையோடு அன்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் பென் கியூரியன் டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் என்ற நாட்டை பிரகடனம் செய்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மூலம் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பிரப்பிலும் பார்க்க அதிகளவு பரவலான நிலப்பரப்பை கொண்டதாக அந்நாடு பிரகடனம் செய்யப்பட்டது.

கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற சக்திகளின் விளைவாகத் தான் இந்த நாடு உருவானது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள்,  கோட்பாடுகள், சாசனம் மற்றும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் என்பனவற்றை முற்றாக மீறும் வகையிலும், இஸ்ரேல் தனக்கான இறையாண்மைக்கு சாதகமாக காட்டும் அதன் உருவாக்கத்துக்கான தீர்மானத்தைக் கூட மீறும் வகையில் தான் அது உருவாக்கப்பட்டது.

யூத நாடு பிரகடனம் செய்யப்பட்டு பதினைந்து நிமிடங்களில் அமெரிக்க வெள்ளை மாளிகையும், அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகையும் தமது அங்கீகாரத்தை வழங்கின. 

இந்த நாட்டின் உருவாக்கத்துக்கு பின்னணியில் செயற்பட்ட பிரதான சக்திகளாக இவ்விரு நாடுகளும் இருந்துள்ளன என்பதை இந்த அங்கீகாரங்கள் உலகுக்கு தெளிவாக உணர்த்தின.

மே மாதம் 19ஆம் திகதி இஸ்ரேல் பழைய ஜெருஸலேம் பகுதியை கைப்பற்றி நகருக்குள் பிரவேசித்தது. ஆனால், அப்போது ஜோர்தான் படைகளும் ஜோர்தானின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் தலையிட்டதன் காரணமாக அங்கு தாங்கள் முற்றுகைக்கு உள்ளானதாக இஸ்ரேல் படையினர் உணர்ந்தனர்.

மே மாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை யுத்த நிறுத்தத்துக்கான அழைப்பை விடுத்தது. அரபு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வல்லரசுகள் அழுத்தம் கொடுத்தன. 

ஜெருஸலேமுக்குள் சுமார் ஒரு இலட்சம் இஸ்ரேல் படையினர் முற்றுகையிடப்பட்ட நிலையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு தான் அரபு லீக்கின் மேற்பார்வையின் கீழ் பலஸ்தீனத்தின் மீட்பர்களாக கருதப்பட்ட அரபு இராணுவம் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால், உண்மையான இஸ்லாமிய படைவீரர்களும் தொண்டர்களும் யுத்தத்தை தொடர்ந்தனர். அவர்கள் தொடராக பல வெற்றிகளை அடைந்தனர். 

பீர்ஷெபா, காஸா, நேகவ்வின் பகுதி என்பனவற்றை எகிப்திய இராணுவம் கைப்பற்றியது. அதேநேரம் எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் படைகள் ஜெருஸலேமின் ஒரு பகுதியை தம் வசமாக்கினர். 

ஜெனின் பகுதியை ஈராக் இராணுவம் தனதாக்கியது. இஸ்ரேலியர்களை மேற்குப் புறத்தால் சுற்றிவளைத்த பின் பழைய ஜெருஸலேமை ஜோர்தான் படைகள் தம் வசப்படுத்தின. 

ஜெரிக்கோ பகுதியையும் அவர்கள் விடுவித்தனர். லீத்தா மற்றும் றமல்லா பகுதிகள் ஊடாக ஜெருஸலேம் மீதும் அவர்கள் தாக்குதல் தொடுத்தனர்.

எவ்வாறெனினும், யுத்தத்தின் பின் பிரித்தானிய ஜெனரல் புலுப் பாஷா, ஜோர்தான் படைகளின் தளபதி, பலஸ்தீனத்தில் நிலைகொண்டிருந்த அரபு இராணுவத்தின் பொது தளபதி ஆகியோர் “அரபு நாட்டு படைகளுக்கு தமது பணியைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டு மே 15ஆம் திகதியும் யுத்தத்தை தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால் வளர்ந்து வரும் இஸ்ரேல் என்ற நாட்டை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம்” என்று கூறினர்.

ஆனால், அது நடக்கவில்லை. அன்று முதல் தனது தொடர் படுகொலைகளாலும், காட்டுமிராண்டித் தனத்தாலும், ஆக்கிரமிப்புக்களாலும் மத்திய கிழக்கை இஸ்ரேல் கொலைக்களமாக மாற்றியது. இஸ்ரேல் யுத்த குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவே உறுதி செய்துள்ளது. ஆனால், ஈராக், ஈரான், லிபியா போன்ற நாடுகள் மீது விதிக்கப்பட்டது போல் இஸ்ரேல் மீது இதுவரை எந்தத் தடையும் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையால் மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நாடான இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை 125 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்த யூத குற்றங்களுக்கு முன்னே ஐக்கிய நாடுகள் சபை செயலிழந்து நிற்கின்றது. அதற்கு காரணம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செல்வாக்கே ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்