'சல்லியர்கள்' திரைப்படத்தின் இசை வெளியீடு

By Digital Desk 2

28 Nov, 2022 | 11:30 AM
image

நடிகரும், தயாரிப்பாளருமான கருணாசின் மகன் கென் மற்றும் ஈஸ்வர் இணைந்து இசையமைத்திருக்கும் முதல் திரைப்படமான 'சல்லியர்கள்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

'மேதகு' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சல்லியர்கள்'. இதில் சேது கருணாஸ், மகேந்திரன், நடிகை சத்யா தேவி, 'களவாணி' திருமுருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கென்- ஈஸ்வர் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு கலவரத்தின் போது போர் முனையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும், போராளிகளுக்கும் மருத்துவ சேவை செய்யும் வைத்தியர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐ சி டபிள்யூ எனும் நிறுவனம் சார்பில் நடிகர் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் தமிழின உணர்வாளர்களும், திரையுலக பிரபலங்களும், படக்குழுவினருடன் பங்குபற்றினர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் எனது மகன் கென்னையும் அவரது நண்பரான ஈஸ்வரையும் இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். எனது மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும், அவர் நடிப்பில் கவனம் செலுத்தி நல்ல நடிகனாக உருவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன். 150 க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி புரிந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தின் இசை வெளியீடு மாவீரர் பிறந்த நாளில் நடைபெற வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறேன். இந்த திரைப்படம் ஈழத் தமிழர்களின் வலியை பேசினாலும், அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்குநர் கிட்டு படத்தை இயக்கியிருக்கிறார்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right