வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல் சூழலும் தமிழீழத்துக்கான வாய்ப்புக்களும் ! - மாவீரர் நாள் செய்தியில் வி.உருத்திரகுமாரன்

Published By: Rajeeban

28 Nov, 2022 | 11:08 AM
image

மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் உருவாக்கம் என்பது, அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால், அனைத்துலக அரங்கில் வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து இத்தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நாளில் மாவீரர் கனவுளை நனவாக்குவது குறித்த சிந்தனையை நாம் கூர்மைப்படுத்த வேண்டும் கோரியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு என ஓர் அரசு இவ்வுலகில் அமைய வேண்டும் என்பது விருப்பினால் மட்டும் தோன்றியதொன்றல்ல. மாறாக சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழீழ மக்களுக்காக ஒரு தனியரசு அமைக்கப்படுவதனைத் தவிர வழியேதுமில்லை எனப்பதனை வரலாறு காட்டி நிற்கின்றது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழம் சாத்தியமில்லை எனக் கூறுபவர்கள் எவராலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியையோ தீர்வையோ காட்ட முடியவில்லை என்பதனையும் இடித்துரைத்துள்ளார்.

ரஸ்யா – உக்;ரேய்ன் போரின் தொடர்ச்சியாக ஒற்றை அதிகார மையம் கொண்ட அரசியல் ஒழுங்கில் இருந்து தற்போதைய உலகம் விடுபட்டு இரட்டை அதிகார மையம் நோக்கியோ அல்லது பல அதிகார மையம் நோக்கியோ திரளும் அரசியல் போக்கு உருவாகியுள்ள நிலையில், பலமிக்க அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போராடும் தேசங்களுக்குப் புதிய அரசியல் வெளிகளை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவையாக அமையும் என்பதோடு, இத்தகையதொரு சூழல் தமிழீழ தேசத்துக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ள பிரததமர் வி.உருத்திரகுமாரன்,  இவ் வாய்ப்புக்களைச் சரிவரக் கையாள்வதற்குத் தமிழீழ தேசத்திடம் ஒன்றுபட்ட வலுவான அரசியல் தலைமை இருத்தல் அவசியமானதாகும் என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவின் சமகால அரசியல், உலக அரசியல், தமிழர்களின் அரசியல் செயல்வழிப்பாதை என பல்வேறு விடயங்களை எடுத்துரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் அறிக்கையின் முழுவிபரம் :

இன்று தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த நமது வீரமறவர்களின் நினைவுகளை நாம் நமது இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கும் நாள்.

தமிழீழ மக்கள் தேசிய விடுலையையும் சமூக விடுதலையையும் அடைந்தவர்களாய், தமது தாயகப்பூமியில் சிங்களத்தின் இனவழிப்புக் குறித்த அச்சம் அற்றவர்களாக, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றில் இன்புற வாழவேண்டும் என்ற கனவுடன் களமாடி வீரச்சாவடைந்த நமது தேசப்புதல்வர்களின் நினைவு நாள்.

நமது சிறிய தமிழீழத் தேசத்தினை உலகவரைபடத்தில் நிலைநிறுத்தி, நமது தேசத்தின் சுதந்திர வேட்கையை தமது வீரத்தாலும், ஈகத்தாலும் வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற உத்தமர்களின் திருநாள்.

மாவீர்கள் தமிழீழ மக்களின் மூச்செங்கிலும் நிறைந்துள்ளார்கள்.

தமிழீழ மண்ணெங்கும் விதைந்துள்ளார்கள்.

தமிழீழ கடலெங்கும், வான்பரப்பெங்கும் நீக்கமறப் பரந்துள்ளார்கள்.

தமிழீழ தேசத்தின் காவல் வீரர்களாய், நமது தேசத்தினை எதிரிகள் எவரும் அடிமை கொண்டு விடாதவாறு சுதந்திரக் கனலை மூட்டி விட்டவர்களாய் எம்முடன் அவர்கள் இறுகப் பிணைந்துள்ளார்கள்.

தமது வீரர்களை வழிபடும் மரபினைக் கொண்ட தமிழ் மக்கள் இன்று நமது வீரர்களைத் தாம் தமது வாழ்வில் கண்ட தெய்வங்களாக உருவகித்து வழிபடுகின்றனர்.

சங்ககால மரபு கண்ட நடுகல் வழிபாட்டுக்கு சமகால எடுத்துக்காட்டாக நமது தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மாவீரர் வழிபாடு அமைகிறது.

மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய நாளில் நாம் மாவீரர்களின் கனவுகளை நம் மனதில் இருத்தி, அவர்தம் கனவுகளை நனவாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நம் மனதிலிருத்த வேண்டியது மிக அவசியமானதாகும்.

நமது தேசத்துக்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி அவர்கள் நம் தேசத்துக்காக செய்த பணிக்கு, ஈகத்துக்கு வணக்கமும் நன்றியும் தெரிவிக்கும் நாளாக மட்டும் இன்றைய நாளை நாம் அணுகக்கூடாது.

மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு செய்யும் வணக்கத்துடன் நமது தேசத்துக்கான, நமது மாவீரர்களுக்கான கடமைகளை நாம் ஆற்றி விட்டோம் எனத் திருப்தி அடையவும் முடியாது.

ஆடி அமாவாசை நாளில் தந்தையினையும், சித்திரை பௌர்ணமியில் அம்மாவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பதுபோல், மாவீரர் நாளில் மாவீரர்களை நினiவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டும் நாம் இந்நாளைக் கருதி விடக்கூடாது.

நாம் மாவீரர்களை வணங்குவது, போற்றுவது ஒரு சடங்கு வழிப்பட்ட நடைமுறையாக மட்டும் குறுகி விடக்கூடாது.

மாறாக மாவீரர் கனவுகளை நனவாக்குவது குறித்த சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மையடைச் செய்யும் நாளாக மாவீரர் நாளை நாம் நமக்குள் வரித்துக் கொள்ள வேண்டும்.

மாவீரர் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை நமது மாவீரர்;கள் நமது தலைமுறையிடம் விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற பொறுப்புணர்வுடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என்ற உள்ளுணர்வை மாவீரர் நாள் நமக்குள் ஏற்படுத்த வேண்டும்.

இன்றைய நாளில் நாம் மாவீரர்களுக்கான சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தும் போது மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என நமக்குள் நாமே உறுதி பூண்டு கொள்வோம்.

இந்த உறுதியுடன், உலகில் தமிழ் மக்கள் வாழும் இடமெங்கும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மக்களுடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலைசாய்த்து நமது மாவீரர்களுக்கு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்பான மக்களே,

இன்றைய மாவீரர் நாளில் மாவீரர் கனவுளை நனவாக்குவது குறித்த சிந்தனையை நாம் கூர்மைப்படுத்த வேண்டும்.

மாவீரர்களின் கனவு என்பது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை தமிழீழத் தாயகப்பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என்பதே.

இக் கனவு உலகில் தமிழ் மக்களுக்கு என ஓர் அரசு அமைய வேண்டும் என்ற விருப்பினால் மட்டும் தோன்றியதொன்றல்ல.

சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத் தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழீழ மக்களுக்காக ஒரு தனியரசு அமைக்கப்படுவதனைத் தவிர வழியேதுமில்லை என வரலாறு காட்டி நின்ற வழியே தமிழீழத் தனியரசினை அமைப்பதற்காக 60,000 க்கும் மேற்பட்ட மாவீரர்கள் தம்முயிரை ஈகம் செய்வதற்குக் காரணமாக அமைந்தது.

இன்றைய சூழலிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழீழத் தனியரசைத் தவிர வழியேதுமில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

தமிழீழம் சாத்தியமில்லை எனக் கூறுபவர்கள் எவராலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியையோ தீர்வையோ காட்ட முடியவில்லை.

தமிழீழ மக்களின் தாயகப்பிரதேசத்தைக் கபளீகரம் செய்து, தமிழீழ மக்களின் தேசிய தனித்துவத்தை சிதைத்து, தமிழீழ தேசத்தை இனவழிப்புக்கு உள்ளாக்கும் தனது திட்டத்தை தடுக்கக் கூடிய எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் சிங்கள பௌத்த இனவாதம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

இதனால், ஈழத் தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கானதொரு ஏற்பாட்டை சிங்கள சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடாத்தி, அதன் சம்மதத்துடன் அடைந்து விடலாம் என எவரும் எதிர்பார்ப்பின் அது இலகு காத்த கிளியின் கதையையே நமக்கு நினைவூட்டும்.

தமிழீழ மக்கள் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடான தமிழீழத் தனியரசானது உள்ளுர் நிலைமைகளில் இருந்து மட்டும் உருவாகக் கூடியதல்ல.

மாறாக, இது அனைத்துலக அரசியற்சூழல், மற்றும் இந்து மகாசமுத்திரத்தினதும், தென்னாசியப்பிராந்தியத்தினதும் புவிசார் அரசியற்சூழலிருந்து ஊற்றெடுக்க வேண்டியது.

தற்போது நம் முன்னால் உள்ள கடமையானது புவிசார் அரசியல் சூழல் எவ்வாறு எமது அரசியல் நலன்களுக்கு இசைவாக அமைவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதும் அனைத்துலகச்சூழல் உருவாகும் போது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கக்கூடிய சூழலை பேணுவதும் அதனைத் தக்க வைப்பதுமாகும்.

இதற்கு, தமிழீழ தேசம் தனது தேசத்தகமையைப் பாதுகாப்பது மிகவும் அடிப்படையானதாகும்.

தமிழீழத் தாயகத்தை கபளீகரம் செய்தும், அதனைத் துண்டாடியும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டும் தமிழர் தாயகத்தின் தொடர்ச்சியை இல்லாதொழிப்தற்குச் சிங்கள இனவாதப்பூதம் பகீரத முயற்சிகளைச் செய்து வருகிறது.

குறிப்பாக, தமிழர் தாயகத்தின் வடக்கு, தெற்குப் (தென் தமிழீழம் - கிழக்கு மாகாணம்) பகுதிகளை இரு கூறாக்குவதில் சிங்களம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.

1948 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து 'சுதந்திரம்' அடைந்த போது கிழக்கு மாகாணத்தில் 1 வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை இன்று 30 வீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தை நிலரீதியாக மட்டுமன்றி அரசியல்ரீதியாகவும் ஆக்கிரமிப்பதற்கும் சிங்களம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் திட்டமிட்ட முறையில் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.

தமிழ் - முஸ்லீம் முரண்பாட்டைத் தூண்டி விடுவதன் ஊடாக சிங்கள அரசுடன் இணைந்து மற்றத் தரப்பை வெற்றி கொள்ள முடியும் என்றதொரு மாiயையை இரண்டு தரப்பின் மத்தியிலும் ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஊடாக, தமிழத் தேசிய அரசியலை கிழக்கு மாகாணத்தில் பலவீனப்படுத்தி, சிங்கள தேசியக் கட்சிகளின் கீழ் தமிழ் , முஸ்லீம் மக்களைக் கொண்டு வரும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.

இதேபோல, வடக்கு மாகாணத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கள பௌத்த இனவாதம் செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சிங்கள அரசின் சூழ்ச்சி குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். குரங்கு அப்பம் பிரித்த கதையில் வரும் குரங்கு போலத்தான் சிங்கள அரசு செயற்படும் என்ற விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

தமிழீழ மக்கள் ஒரு தேசமாக நன்கு வலுப்பட்டு, உருத்திரண்டு நின்று தமிழீழ மக்களின் அரசியற்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமையும் என்பதனை வலியுறுத்தி நிற்பதே அனைத்துலகச்சூழல் எமக்குச் சாதகமாக அமையும் காலத்தில் நமது விடுதலையை வென்றெடுக்கத் துணை நிற்கும்.

அன்பான மக்களே,

தமிழீழத் தனியரசின் உருவாக்கம் அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால் அனைத்துலக அரங்கில் நமக்கான வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும் நாம் இத் தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும்.

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால்; தமிழினவழிப்பின் ஊடாகத் தமிழீழ மண் சிங்களத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளான காலத்தில் உலகம் ஒற்றை அதிகாரமைய உலக ஒழுங்கின் கீழ் இருந்தது.

ஓற்றை அதிகாரமைய அரசியல் ஒழுங்கில் அரசற்ற தேசங்களுக்கான அனைத்துலக அரசியல் வெளி மிகவும் மட்டுப்பட்டதாகவே பொதுவாக இருக்கும். அரசியல் ஒழுங்கைத் தலைமை தாங்கும் வல்லரசுகளோடு அரசற்ற தேசங்களது நலன்கள் ஒத்துப் போகாதுவிடின் அத் தேசங்களின் போராட்டங்கள் தோற்கடிக்கப்படுவது இயல்பானதொன்றாக அமைந்து விடும்.

1991 ஆம் ஆண்டின் முன்னே உலகம் இரட்டை அதிகார மையம் கொண்டதாக இருந்த காலத்தில் போராடும் சிறிய தேசங்களுக்கு பல்வேறுவகையான வாய்ப்புகள் இருந்தன.

அனைத்துலக அரசுகள் தமது அதிகாரத்துக்காக இரட்டை மையமயப்பட்டு போகும்போது இவற்றுக்கிடையே கிடைக்கும் சில வெளிகளைப் போராடும் தேசங்கள் பயன்படுத்தும் வாய்புகள் இருந்தன.

தற்போது உலகம் ஒற்றை அதிகார மையம் கொண்ட அரசியல் ஒழுங்கில் இருந்து விடுபட்டு இரட்டை அதிகார மையம் நோக்கியோ அல்லது பல அதிகார மையம் நோக்கியோ திரளும் அரசியல் போக்கு உருவாகியுள்ளது.

ரஸ்யா – உக்ரேய்ன் போரின் தொடர்ச்சி இப் போக்கை மேலும் வளர்த்து விடக்கூடிய நிலைமைகளைக் கொண்டுள்ளது.

அனைத்துலகரீதியாகவும், பிராந்தியரீதியாகவும் உருவாகி வரும் இரட்டைமைய வலுப்பரீட்சைக்கான உதாரணங்களாக இலங்கையில் அமெரிக்கா- இந்தியா எதிர் அணியிலும் சீனா, உக்ரெய்ன் யுத்தத்தில் ரஸ்யா எதிர் மேற்குலகம், தென்சீனக்கடலில் அமெரிக்கா எதிர் சீனா போன்றவற்றைக் கூறமுடியும்.

ஒற்றை அதிகார மையம் வலுவிழந்து இரட்டை அதிகார மையம் ஏற்படும்போது பலமிக்க அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போராடும் தேசங்களுக்குப் புதிய அரசியல் வெளிகளை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவையாக அமையும்.

இத்தகையதொரு சூழல் தமிழீழ தேசத்துக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும்.இவ் வாய்ப்புக்களைச் சரிவரக் கையாள்வதற்குத் தமிழீழ தேசத்திடம் ஒன்றுபட்ட வலுவான அரசியல் தலைமை இருத்தல் அவசியமானதாகும்.

தற்போதைய சூழலில் தாயகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி ஒன்றுபட்ட அரசியல் தலைமை இல்லாதுள்ளமை தமிழீழ மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்துலக நாடுகளை தமிழர் நலன் சார்ந்து கையாள்வதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின்பாற்பட்டு தாயகத்திலும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும்; செயற்பட்டு வரும் அமைப்புகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் வழிநின்று ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான வழிவகைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் செயற்படும் அரசியல் அமைப்புகள் அரசியல் முடிவுகளை ஒன்றுபட்டு எடுப்பதற்காக ஒன்றுபட்ட உயர் தேசிய அரசியல்பீடமொன்றை அமைத்தல் பயன் தரும்.

தாயகத்தின் அரசியற் சூழலும் புலம் பெயர் அரசியற்சூழலும் அரசியல் வெளி சார்ந்து வேறுபட்டதாக உள்ளமையால் இத் தேசிய அரசியல் உயர்பீடம் தாயகத்துக்கும் புலம் பெயர் நாடுகளுக்கும் தனித்தனியாக அமையலாம்.

இவ்விரு அரசியல்பீடங்களும் தமக்குள் புரிந்துணர்வான உறவைப் பேணித் தமிழ் மக்கள் சார்பில் அரசியல் முடிவுகளை எடுக்கலாம்.

தாயகத்தில் தனித் தமிழீழம் கோருவதற்கான அரசியல்வெளி சிங்களத்தால் மறுக்கப்படுவதால் திம்புக் கோட்பாடுகளையும், விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில்  முன்வைக்கப்பட்ட விடயங்களையும் அரசியல் வழிபாட்டுக் கோட்பாடுகளாகக் கொள்ளலாம்.

இத்தகைய ஒற்றுபட்ட தேசிய உயர் அரசியல்பீடம் அமைக்கப்படுவது குறித்து தமிழ் அரசியல் அமைப்புகள் தமக்குள் உரையாடலை காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுதலை இன்றைய மாவீரர் நாளில் முன்வைக்கிறோம்.

மேலும், தமிழர் தேசத்தை வலுவாக்கும் பொருட்டு தமிழர் தேசிய நிதியம் ஒன்றை நம்பகத் தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆரம்பித்துச் செயற்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.

சிறிலங்கா அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதன் விளைவாக ராஜபக்ச சகோததர்கள் உத்தியோகபூர்வமாக ஆட்சிப்பீடத்தில் இருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் நடைமுறையில் அவர்களது ஆட்சியே நடைபெற்று வருகிறது.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி இப்போது சற்றுத் தணிந்தது போலத் தோன்றினாலும் இந் நெருக்கடி ஆழப் புரையோடியுள்ளது என்பதும் அது நீண்டகாலம் தொடரும் என்பதும் பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந் நெருக்கடிக்கு தமிழின அழிப்புப் போரின் போதும் அதன் பின்னரும் மேற்கோள்ளப்பட்ட இராணுவச் செலவுகள் முக்கிய பங்கு வகித்தன என்பதனை சிறிலங்கா அரசு மறைத்தே வருகிறது. இதனை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமானதாகும் .

இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அனைத்துலகப்பொறிமுறையொன்றின் ஊடாக அவற்றை நேரடியாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது.அன்பானவர்களே,

இவ்வாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08