ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு பார்வை

Published By: Nanthini

28 Nov, 2022 | 12:29 PM
image

(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)

னித நாகரிகத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டமைப்புக்களும் முக்கியமானவை.

இந்த கட்டமைப்புக்கள் மனிதர்களை இனம், மதம், சாதி, சமூகம், கலாசாரம், பாரம்பரியம், நாடு, நாடுகளின் கூட்டமைப்பு போன்ற அலகுகளின் அடிப்படையில் வகைப்படுத்தின. 

இந்த கட்டமைப்புக்கள் அதிகாரங்களின் அடுக்கை ஏற்படுத்தின. ஒவ்வோர் அலகிலும் அதிகாரம் படைத்தவர்கள் மேலும், அதிகாரம் குறைந்தவர்கள் கீழே இருப்பார்கள்.

இங்கு யார், என்ன செய்யலாம் என்பதை ஒருவர் தீர்மானிப்பார். மற்றவர், அதற்கு கட்டுப்பட வேண்டும். அதுவே நிர்ப்பந்தம்.

அந்த நிர்ப்பந்தம் மரபுகள், பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஊடாக பிரயோகிக்கப்படும். சமூகங்கள், நாடுகள் போன்ற அலகுகளில் சட்ட திட்டங்கள் வாயிலாகவும் பிரயோகிக்கப்படலாம். அலகு எத்தகையதாக இருந்தாலும், சமமாக வாழ வேண்டும் என்ற அவா ஒவ்வொருவருக்கும் பொதுவானது.

அதன் அடிப்படையில் எனக்குரிய அந்தஸ்தை நான் தீர்மானிக்க, நான் மற்றவரின் அனுமதியை அல்லது தலையசைவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம்.

அந்தக் கேள்வியில் எழும் கோபம் கட்டுப்பாடுகளை தகர்க்கலாம். அதிகார அடுக்குகளை உடைத்துச் செல்ல தலைப்படலாம். எனவே, ஒரு சமூகமாக இருந்தாலென்ன, நாடாக இருந்தாலென்ன, அதன் சுயநிர்ணய உரிமை என்பது சுயகௌரவத்துடன் சம்பந்தப்பட்டது.

இந்த சுயநிர்ணய உரிமை என்பது சகலரும் சமமானவர்கள் என்ற சமூக நீதிக்கமைய சுயகௌரவம் என்ற அடிப்படை உணர்வில் இருந்து எழுகிறது.

சுயநிர்ணய உரிமை பற்றிய வியாக்கியானங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரியவை.

ஒருவர் அடக்குமுறையை எவ்வாறு நோக்குகிறார் என்பதன் அடிப்படையில் சுயநிர்ணய உரிமை பற்றிய அவரது வியாக்கியானங்கள் மாறலாம்.

கடந்த வாரம் ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் ஸ்கொட்லாந்து விவகாரத்தில் அளித்த தீர்ப்பைப் போல இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றையும் உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பாகம் தான் ஸ்கொட்லாந்து. 

ஒரு காலத்தில் சுயாதீனமாக இருந்த நாடு. சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இங்கிலாந்துடன் போர் புரிந்த நாடு. தமது நாட்டின் ஆறாவது ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் மன்னராக மாறிய சந்தர்ப்பத்தில் இங்கிலாந்துடன் கூட்டு சேர்ந்த தேசம்.

1707இல் இரு நாடுகளும் அரசியல் ரீதியாக கூட்டு சேர்ந்து பெரிய பிரித்தானியா என்ற தனியொரு இராச்சியமாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

ஸ்கொட்லாந்து மக்கள் தனித்துவமானவர்கள். அவர்களது வாழ்க்கை முறை பிரித்தானிய மக்களிடமிருந்து வித்தியாசமானது. நாம் ஏன் இன்னொரு நாட்டுக்குள் வாழவேண்டும்? நாம் பழையபடி ஸ்கொட்லாந்து தேச மக்களாக இருக்கலாமே என்ற பேரவா அந்த நிலப்பரப்பை சேர்ந்த மக்களுக்குண்டு.

இந்தப் பேரவா ஸ்கொட்லாந்தின் சுயாட்சிக்கான அரசியல் இயக்கங்களுக்கு வித்திட்டது. ஆரம்பத்தில் அதிகாரத்தை பரவலாக்கிக்கொள்ளும் கோரிக்கைகள், கருத்துக் கணிப்புக்கள் ஊடாக அங்கீகரிக்கப்பட 1999இல் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஐக்கிய இராச்சியம் என்ற கட்டமைப்புக்குள் இருந்து விடுபட வேண்டும் என்று ஸ்கொட்லாந்து மக்கள் கொண்டிருந்த அவாவுக்கு அதிகாரப் பரவலாக்கல் நிரந்தர பரிகாரமாக அமையவில்லை.

சுதந்திரத்தை வலியுறுத்திய ஸ்கொட்லாந்து தேசிய கட்சியை இரு தேர்தல்களில் ஆதரித்ததன் மூலம் ஸ்கொட்லாந்து மக்கள் சுயநிர்ணய உரிமையில் தமக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.

எனினும், 2014இல் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்ற கேள்வியின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டபோது 53 சதவீதமான மக்கள் தேவையில்லை என்றே வாக்களித்தார்கள்.

அதன் பின்னர் நிலைமை மாறியது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற கூட்டுக்குடும்பத்தில் இருந்து ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பின் மூலம் ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதென தீர்மானித்தபோது ஸ்கொட்லாந்து மக்களின் எண்ணமும் பெருமளவில் மாறியது.

இந்த எண்ணம் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸ்கொட்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் வலுவாக வெளிப்பட்டது. ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் வேண்டுமென்ற பிரசாரத் தொனிப்பொருளுடன் களமிறங்கிய தேசியக் கட்சிகள் அமோக வெற்றியீட்டின.

இதனை தொடர்ந்து மக்களின் நேரடிக்கருத்தை அறிய மற்றொரு கருத்துக்கணிப்பை நடத்தலாமே என்று ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவியும் முதலமைச்சருமான நிக்கோலா ஸ்டர்ஜியோன் தீர்மானித்தார்.

தனியொரு தேசமாக இருந்த ஸ்கொட்லாந்து இங்கிலாந்துடன் சேர்ந்து பெரிய பிரித்தானியாவாக மாறிய சமயம், சில அரசியல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் பிரகாரம், பிரிந்து செல்வது பற்றி ஸ்கொட்லாந்து தனியே தீர்மானிக்க முடியாது. அதன் அடிப்படையில் தான் ஐக்கிய இராச்சியத்தின் உச்சநீதிமன்றத்தில் ஸ்கொட்லாந்தின் சுதந்திரக் கருத்துக்கணிப்பு பற்றி வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அனுமதியின்றி ஸ்கொட்லாந்து சுதந்தர கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்த முடியாதென கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது.

அதாவது அரசியல் யாப்பு விவகாரங்கள் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்பது உச்சநீதிமன்றத்தின் துணிபு. 

இந்த வழக்கில் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட அடிப்படை விடயம், ஸ்கொட்லாந்தின் சுயநிர்ணய உரிமை.

1707இல் ஸ்கொட்லாந்தும் இங்கிலாந்தும் ஒன்றிணைந்தபோதும், அதற்குப் பின்னர் 1998இல் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டபோதும் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் உண்டு.

இவற்றின் பிரகாரம், சுகாதாரம், கல்வி முதலான விடயங்கள் பற்றிய சட்டங்களை ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் இயற்றலாம். எனினும், சுதந்திர கருத்துக்கணிப்பு நடத்துவது முதலான சமாச்சாரங்கள் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்துக்கு உரியவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட போது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி சுயநிர்ணய உரிமை பற்றிய வாதத்தை முன்வைத்தது. இந்த விடயம் பற்றிய உள்ளூர் சட்டங்களுக்கு வியாக்கியானம் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ‘சுய-நிர்ணய’ உரிமை பற்றிய சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடையதாக இருக்கத்தக்க வகையில் வியாக்கியானம் கொடுக்க வேண்டும் என்று ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி வாதிட்டது.

ஐக்கிய இராச்சிய நீதிமன்றமோ தமது தீர்ப்பில் கியூபெக் மாநிலம் தொடர்பான வழக்கொன்றில் கனடிய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை உதாரணம் காட்டியது. 

சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்கள்  காலனித்துவ ஆட்சி அல்லது வெளிநாட்டு ஆதிக்கம் சம்பந்தப்பட்ட நிலைமைகளுக்கு மாத்திரமே பொருந்தும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது காலனித்துவ ஆட்சியின் மூலம் அல்லது வெளிநாட்டு ஆதிக்கத்தின் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பிரிவினருக்கே ‘சுய-நிர்ணய’ உரிமை பற்றி வாதிட உரிமை உண்டு என்பது போன்ற தீர்ப்பு அதுவாகும்.

ஸ்கொட்லாந்து இங்கிலாந்தின் காலனித்துவ தேசமாக இருக்கவில்லை; இங்கிலாந்தின் மூலம் ஒடுக்கப்படவில்லை என்பது உண்மை தான். இருந்தபோதிலும், ஐக்கிய இராச்சியம் என்ற கட்டமைப்புக்குள் தாம் கூடுதலாக சம்பாதித்தபோதும் இங்கிலாந்து மக்களை விடவும் கூடுதலாக வரி செலுத்தி சலுகைகளை இழப்பதாக ஸ்கொட்லாந்து மக்கள் உணர்கிறார்கள். இது பாரபட்சம் என்று கருதுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற கூட்டுக் குடும்பத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் பிரிந்து செல்வது என்பது பொதுத் தீர்மானமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பத்தின் சலுகைகளை ஸ்கொட்லாந்து மக்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள்.

எனவே, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என ஸ்கொட்லாந்து மக்கள் விரும்பினால், அதைப் பற்றி சமகால அரசியல் பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில் ஐக்கிய இராச்சிய சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிப்பது எந்தளவு தார்மீகமானது? 

இங்கு சட்டத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, ஒரு தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை நிராகரிப்பது நியாயமாக மாட்டாது.

அந்தச் சட்டம் மக்களின் இறையாண்மையை மன்னராட்சிக்கு தலைவணங்கும் பாராளுமன்றத்துக்கு வழங்குமாயின், அந்தக் கட்டமைப்புக்குள் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது.

சுயநிர்ணய உரிமையின் அடித்தளமான சுயகௌரவம் இத்தகைய கட்டமைப்புக்குள் அடகு வைப்பதாக ஸ்கொட்லாந்து மக்கள் கருதத் தொடங்கினால், அவர்கள் தமது அவாவை நிறைவேற்றிக்கொள்வதற்காக கட்டமைப்பை தகர்க்கும் மாற்று வழிகளை நாடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04