மகிந்தவும் சர்வதேச சதியும்

28 Nov, 2022 | 08:17 AM
image

இலங்கையின் பிரச்சினைகளுக்கு சர்வதேச சக்திகளின் சதி  காரணம் என்று கூறுவது ராஜபக்சாக்களுக்கு கைவந்த கலை.அதை அவர்களின் சுபாவம் என்றும் கூறலாம்.

பாராளுமன்றத்தில் வரவு -- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கடந்தவாரம் (நவ.22) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னால் சர்வதேச சக்தியொன்று இருக்கிறது என்று குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

" பொருளாதார நெருக்கடியின் பின்னால் உள்ள சர்வதேச சக்தி இன்னமும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டேயிருக்கிறது. நாட்டில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த சக்தி அதன் உள்நாட்டு முகவர்கள் ஊடாக அனுசரணை வழங்குகிறது.அவர்களது  நடவடிக்கைகள் மீட்சிபெறத் தொடங்கியிருக்கும் சுற்றுலாத்துறையை பாதிக்கின்றன.பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது பற்றி சிலர் கேள்வியெழுப்புகிறார்கள்.வேறு எதையும் விட நாட்டின் பாதுகாப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை " என்று அவர் குறிப்பிட்டார்.

தங்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய மக்கள் கிளர்ச்சியை சர்வதேச சக்திகளின் தூண்டுதலில் நடந்த ஒன்றாக ஏற்கெனவே ராஜபக்சாக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.தங்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கு பின்னாலும் ஒரு சர்வதேச சதியை அவர்கள் காண்பார்கள். சிங்கள தேசியவாத சக்திகளை தங்களுக்கு ஆதரவாக எப்போதும் வைத்திருப்பதற்கு அவர்கள் கையாளுகின்ற ஒரு அரசியல் தந்திரோபாயம்தான் அது.

மீண்டெழுவது குறித்து பேசும் ராஜபக்சாக்களுக்கு அந்த தேசியவாத சக்திகளின் ஆதரவு அவசியம்.ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து அவர்களை விரட்டியதை கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளினால் ஜீரணிக்கமுடியவில்லை.தவறான ஆட்சிமுறையின் விளைவான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதுங்கியிருக்கும் இந்த தேசியவாத சக்திகள் மீண்டும் வெளியில் வந்து தங்களது நச்சுத்தனமான அரசியலை முன்னெடுப்பதற்கு தருணத்துக்காக காத்திருக்கின்றன. மீள் எழுச்சிக்காக ராஜபக்சாக்கள் கையாளக்கூடிய அரசியல் அந்த சக்திகளுக்கு  வாய்ப்பைக் கொடுக்கக்கூடும்.ஆனால், ராஜபக்சாக்கள் கிளப்பக்கூடிய கடும் தேசியவாதப் போக்கு சிங்கள மக்கள் மத்தியில் இனிமேல் முன்னரைப் போன்று எடுபட வாய்ப்பிருக்குமா என்பது ஒரு கேள்வி. 

தங்களது தவறான ஆட்சிமுறையின் காரணமாகவே பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி  தோன்றியது என்பதை ராஜபக்சாக்கள் இன்னமும்  ஏற்றுக்கொள்ளத்தயாராயில்லை. நாட்டு மக்கள் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு விசித்திரமான எண்ணத்தை அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக தாங்கள் எதைச் செய்தாலும் அதை பொறுத்துக்கொண்டு தங்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்ற என்ற எண்ணம் ராஜபக்சாக்களிடம் வேரூன்றியிருந்தது.

போர் வெற்றியைக் கூட அவர்கள் தங்களைச் சுற்றி தனிநபர் வழிபாட்டையும் குடும்ப ஆதிக்க அரசியலையும்  வளர்க்கவே உச்சபட்சத்துக்கு பயன்படுத்தினார்கள்.மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கே ராஜபக்சாக்கள் போர் வெற்றியை பயன்படுத்தினார்கள் ; மக்களை ஒரு மாயையில் மூழ்கடித்து வைத்திருந்தார்கள்.

ராஜபக்ச குடும்ப ஆதிக்க அரசியலுக்கும் அதன் விளைவான தவறான ஆட்சிமுறைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டியவர் மகிந்த ராஜபக்சதான்.அவர் இல்லையென்றால் அவரின் குடும்பம் சுமார் இரு தசாப்தங்களாக அரசியலில் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கமுடியாது.

இலங்கை அரசியல்  கடந்த காலத்திலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.ஆனால் மகிந்த அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் நாடும் மக்களும் வெறுக்கத்தக்க முறையில்  மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதைப்  போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை.ராஜபக்சாக்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்ததைப் போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக ஒருபோதும்  மக்கள் செய்ததில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில்  எதேச்சாதிகாரப் போக்கைப் படிப்படியாக அதிகரித்துவந்திருக்கின்ற போதிலும், ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர்தான் அது உச்ச அளவுக்குப் போனது.மட்டுமீறிய ஆதிகாரங்களை குவித்துவைத்திருப்பது ஏதோ தங்கள் பிறப்புரிமை என்பது போன்று அவர்கள் நடந்துகொண்டார்கள்.ஆட்சிமுறையின் கெடுதியான போக்குதள் சகலவற்றையும் உருவகிப்பவர்களாக அவர்கள் விளங்குகிறார்கள்.

இலங்கையின் முன்னைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் சகலரையும் விட ( 20 வது  அரசியலமைப்பு திருத்தம் மூலமாக ) கோட்டாபய ராஜபக்சவே கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவராக விளங்கினார். ஆனால், அவரே பதவிக்காலத்தின் இடைநடுவில் பதவியில் இருந்து இறங்கிய முதல் ஜனாதிபதியாகவும் மக்கள் கிளர்ச்சி காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முதல் ஜனாதிபதியாகவும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறார்.மட்டுமீறிய அதிகார வேட்கையே ராஜபக்சாக்களுக்கு அபகீர்த்தியைக் கொண்டுவந்தது.

2005 தொடக்கம் இதுவரையான 17 வருடங்களில் இடையில் ஒரு நான்கு வருடங்களை தவிர எஞ்சிய காலப்பகுதியில்  ராஜபக்சாக்களே அதிகாரத்தில் இருந்தார்கள்.2005 -- 2015, 2019 --2021 காலகட்டங்களில் அதாவது 11 வருடங்கள் மகிந்தவே நிதியமைச்சராக இருந்தார்.சகோதரர் பசில் ராஜபக்ச முதலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தது மாத்திரமல்ல, கோட்டாபய ஆட்சியில் இறுதியாக நிதியமைச்சராகவும் பதவிவகித்தார்.அதனால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கு  காரணமான தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்கு ராஜபக்சாக்களே பெரும் பொறுப்பு.

அதனால்,  மகிந்த செய்திருக்கக்கூடிய மிகப்பெரிய ' அரசியல் பாவம் ' அதிகார முறைகேட்டுக்கு வழிவகுத்த குடும்ப ஆதிக்க அரசியலை வளர்த்தெடுத்தமையாகும். அவரினதும் பிறகு சகோதரர் கோட்டாபயவினதும் ஆட்சிகளில் முக்கியமான அமைச்சுக்களும் வரவு -- செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூன்றில் இரண்டு பங்கும் அவர்களின்  குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தன.தங்கள் குடும்பத்தவர்கள் மாத்திரமல்ல, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், கையாட்களும் ஊழல் முறைகேடுகளினால் பயனடையக்கூடியதாக ஒரு ' புரவு கலாசாரத்தை ' ( Patronage ) யும் அவர்கள் வளர்த்தெடுத்தார்கள்.பசில் ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்க திரண்ட அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,ஆதரவாளர்கள்   கூட்டம் இதற்கு உதாரணமாகும்.

மகிந்த ராஜபக்ச அண்மையில் ( நவ. 18) தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இந்த பிறந்த தினத்துக்கு பிறகு அவர் மீண்டும் தீவிரமாக அரசியல் பணிகளில் இறங்கப்போகிறார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு ஆரவாரமான ஏற்பாடு எதையும் உடனடியாக காணமுடியவில்லை. 

சில வாரங்களுக்கு முன்னர் ' மீண்டும் ஒன்றாக எழுவோம் ' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஓரிரு பொதுக்கூட்டங்களை நடத்தியது. அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதனாற்போலும் இப்போது அத்தகைய பொதுக்கூட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

மகிந்தவைப் பொறுத்தவரை, இனிமேல் அவர் தனது சகோதரர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து எந்தளவுக்கு அக்கறை செலுத்துவாரோ தெரியவில்லை.ஆனால் தனது மூத்த புதல்வன் நாமல் ராஜபக்சவின் எதிர்கால வாய்ப்புக்களை தான் அரசியலில் இருக்கும் காலத்தில் உறுதிசெய்வதில் அதீத கவனம் செலுத்துகிறார்.தான் இல்லையென்றால் மகன் ஓரங்கட்டப்பட்டுவிடுவார் என்ற அச்சமும் அவருக்கு  இருக்கக்கூடும்.

மக்கள் கிளர்ச்சி தீவிரமடையத்தொடங்கியபோது ஏப்ரில் பிற்பகுதியில் பிரதமராக இருந்தவேளையில் டெயிலி மிறர் பத்திரிகைக்கு விசேட நேர்காணல் ஒன்றை மகிந்த வழங்கியிருந்தார்.அதில் அவரிடம் " தற்போதைய நிலைவரம் உங்கள் மகனின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்துவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " அதுவெல்லாம் மகனில் தான் தங்கியிருக்கிறது. அவர் அரசியலில் இருப்பதற்கு தனது தந்தையின் பெயரையோ அல்லது சிறியதகப்பன்மாரின் பெயர்களையோ அல்லது பாட்டனாரின் பெயரையோ விற்கமுடியாது.மக்களுடன் சேர்ந்துதான் அவர் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் " கூறினார்.

மகிந்தவின் பதில் வேறு ஒரு அர்த்தத்தில் இருந்தாலும், அவர் கூறியதில் ஒரு பெரிய உண்மை இருந்தது.அதாவது தனது பெயரையோ அல்லது தனது சகோதரர்களின் பெயர்களையே சொல்லிக்கொண்டு நாமலினால் அரசியலில் ஒருபோதும் முன்னுக்குவர முடியாது.மக்கள் கிளர்ச்சி காலத்தில் அரசாங்கத்தின் தவறுகளில் இருந்து தன்னை தூரவிலக்கிக்கொள்ளும் வகையில்தான் அவர் கருத்துக்களை வெளியிட்டார்.மூத்த ராஜபக்சாக்களின் தவறுகள் இளம் நாமலின் எதிர்கால அரசியல் பயணத்தில் பெரிய சுமையாகவே இருக்கப்போகிறது.

சர்வதேச  சக்திகளின் சதி என்ற பல்லவியைப்  பாடிக்கொண்டிராமல்,  மக்களை பெரும் அவலத்துக்குள்ளாக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தங்களது தவறுகளை மகிந்த ராஜபக்சவும் சகோதரர்களும் மக்கள் முன் ஒத்துக்கொண்டு ஒரு குறைந்த பட்ச அரசியல் நேர்மையையாவது வெளிக்காட்டத் தயாராயில்லை.சர்வதேச சதி பற்றி பல்லவி பாடுகிறார்கள்.

ராஜபக்சாக்களின் அரசியல் மரபு என்று ' சிதைந்துபோன - வங்குரோத்து தேசத்தைத்' தான் மக்கள் எதிர்காலத்தில் நினைவுகூருவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...

2025-02-14 18:19:51
news-image

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...

2025-02-09 17:11:09
news-image

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?

2025-02-09 10:40:37
news-image

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...

2025-02-08 08:32:20
news-image

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...

2025-02-03 13:08:59
news-image

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...

2025-02-02 12:31:44
news-image

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...

2025-02-02 09:40:12
news-image

ரணிலின் மாற்று பாராளுமன்றம்

2025-01-26 18:29:20
news-image

இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான எதி­ர­ணிக் ­கட்­சி­களின் முயற்­சிகள்

2025-01-26 18:08:42
news-image

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...

2025-01-21 17:45:45
news-image

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு 

2025-01-19 18:22:12
news-image

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...

2025-01-19 13:04:09